தங்கம் வென்ற தங்கவேலு- தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார்! - Yazhpanam

சனி, 10 செப்டம்பர், 2016

தங்கம் வென்ற தங்கவேலு- தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார்!

சென்னை: பிரேசில், ரியோ நகரில் நடைபெறும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
ரியோ நகரில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 18ம் தேதி வரை நடைபெறும் பாரா ஒலிம்பிக்கில் 162 நாடுகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 23 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பாராஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். பாடி வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்று தமிழ் நாட்டுக்கும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு, சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

சாதனை நாயகன்

பள்ளி பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார். மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாரியப்பன் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பதக்க வேட்டை

2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினார். இந்த முறை நான் 2 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். சொன்னது போல அவர் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றுள்ளதால் அவரது பயிற்சியாளரும் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

சாதனை நாயகர்கள்

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். பாடி வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பதக்கப்பட்டியலில் இந்தியா

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை என்று நிரூபித்துள்ளனர் மாரியப்பனும், பாடி வருண்சிங்கும். பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா 24வது இடத்தில் உள்ளது.

பரிசுகள் எவ்வளவு

பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.75 லட்சம், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய அணி

ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில்
மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் பாத்தி, சரத் குமார், ராம்பால் ஷாகர் (உயரம் தாண்டுதல்), பூஜா (வில்வித்தை), சுந்தர் சிங் குர்ஜார், தேவேந்திரா ஹஜ்ஹாரியா, ரிங்கு, நரேந்தர் ரன்பிர், சந்தீப் (ஈட்டி எறிதல்), அமித் குமார் சரோஹா, தரம்பிர் (கிளப் த்ரோ), தீபா மாலிக் (குண்டு எறிதல்), அங்குர் தமா (1500 மீட்டர் ஓட்டம்), பாஷா பர்மான் (பளு தூக்குதல்), சுயாஷ் நாராயண் யாதவ் (நீச்சல்), நரேஷ் குமார் சர்மா (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பதக்க வேட்டை தொடரும்

இதுவரையான பாராஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 8 பதக்கம் வென்றுள்ளது. இன்று முதன்முறையாக தங்கம்,வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் கணக்கைத் துவக்கியுள்ளனர் இந்திய வீரர்கள். பதக்க வேட்டை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
நன்றி: ஒன்இந்தியா,யூடியூப், மற்றும் நியூஸ்7 தமிழ்.
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot