கசப்பான உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி!!!

கட்டுப்பாடான இந்திய சமூகத்தில் ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டு, எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணப்பட்டு வந்த நேரத்தில், தன்னுடைய மருத்த...

கட்டுப்பாடான இந்திய சமூகத்தில் ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டு, எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணப்பட்டு வந்த நேரத்தில், தன்னுடைய மருத்துவ ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க எடுத்த முயற்சி, இந்தியாவில் எத்தகைய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது பற்றி மருத்துவர் நிர்மலா நினைவுகூர்கிறார்.


ஆய்வகத்தில்
 

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 6 பாலியல் தொழிலாளர்களுக்கு ரத்தப் பரிசோதனையில் ஹெச்ஐவி தொற்று இருப்பதை உறுதி செய்து, இந்தியாவிலும் ஹெச்ஐவி தொற்று பரவி இருப்பதைக் கண்டறிந்தபோது, அந்நோய் பற்றிய அச்சம் உச்சநிலையை அடைந்தது.
இளம்பெண் ஒருவரின் முயற்சிகளால்தான் இந்த ஹெச்.ஐ.வி தொற்றை கண்டறிய முடிந்தது. ஆனால், இப்போது அவருடைய கன்னி முயற்சிகள் அனைத்தும் மறக்கப்பட்டுவிட்டன என்றுதான் கூற வேண்டும்.
ஹெச்ஐவி / எய்ட்ஸ் பரவலை கண்டறிய முதலில் பரிந்துரைக்கபட்டபோது நிர்மலா செல்லப்பன் எவ்வாறு அதனை முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி தெரியாமல் தவித்தார்.
1985 ஆம் ஆண்டின் முடிவில் சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் மாணவியான 32 வயதான நிர்மலா, தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தலைப்பைத் தேடி கொண்டிருந்தார்.
இந்தியாவில் ஹெச்ஐவி பரவல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை ரத்த மாதிரிகள் சேகரித்து, பரிசோதனை செய்து கண்டறியும் ஆலோசனையை அவருடைய பேராசியரும், ஆசானுமாகிய மருத்துவர் சுனிதி சாலமன் வழங்கினார்.
அமெரிக்காவில் எய்ட்ஸ் பற்றிய சோதனையும், கண்காணிப்பும் 1982 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தியாவின் சுகாதார அதிகாரிகள் இதுபற்றிய எவ்வித முயற்சியும் 1985 ஆம் ஆண்டு வரை எடுக்கவில்லை.
ஒருவேளை எய்ட்ஸ் இந்தியாவில் பரவி இருந்தால், தாங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் விமர்சனத்தில் மாட்டிகொள்வதற்கு இந்தியாவிலுள்ள மருத்துவ அதிகாரிகள் விரும்பவில்லை என்பதுதான் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்ததற்கு காரணமாகும்.
அந்நேரத்தில், இந்தியாவில் இந்தத் தொற்று பரவி இருக்கிறது என்பது எண்ணிக்கூட பார்க்க முடியாத ஒன்றாகத்தான் கருதப்பட்டது என்று கூறும் நிர்மலா, அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளை அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து பிபிசியின் கீதா பாண்டேவிடம் பகிர்ந்து கொண்டார்.
பாலியல் உறவு சுதந்திரமும், ஓரினச்சேர்க்கையும் அதிகமாக இருந்த மேற்குலக நாடுகளின் ஒழுக்கக் கேடுகளால் உருவானதே இந்த நோய் என்று இந்திய ஊடகங்கள் அந்நேரத்தில் எழுதி வந்தன.
மறுபக்கம் இந்தியர்கள் இயல்பான வேற்றுப்பாலின உணர்வு கொண்டவர்கள் என்றும், ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்கிறவர்கள் என்றும், கடவுளுக்கு அஞ்சுபவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டனர்.

 
                                                            நிர்மலா

இந்த நோய் இந்தியாவில் பரவுவதற்குள் அமெரிக்கர்கள் அதனை குணப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் சில பத்திரிகைகள் மிகவும் பெருமையாக வெளியிட்டிருந்தன.
மேலும், சென்னை நகரமும், தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் பாரம்பரிய சமூகங்கள் நிறைந்தவைகளாக பார்க்கப்பட்டன.
ஒழுக்கக்கேடு மிக்க நகரமாக கருதப்பட்ட மும்பையிலிருந்து நூற்றுக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நகரான புனேயின் நச்சுயிரியில் நிறுவனத்தில் ஏற்கெனவே பரிசோதனை செய்யப்பட்டிருந்தன. அதுவரை எய்ட்ஸ் நோய் அறிகுறி இருந்ததற்கான எந்தவித அடையாளமும் தென்படவில்லை.
இத்தகைய பின்னணியில், நிர்மலா இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளத் தயங்கியதில் வியப்பு எதுவும் இல்லை.
"இதில் கிடைக்கக்கூடிய முடிவு எதிர்மறையாகத்தான் இருக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்று நான் மருத்துவர் சாலமனிடம் கூறினேன்" என்கிறார் நிர்மலா
இருப்பினும், மருத்துவர் சாலமன் அது தொடர்பாக ஒரு முயற்சியை மேற்கொண்டு தான் பாாக்கலாமே என்று தன்னுடைய மாணவியை தூண்டினார்.

Image copyright SPL - இரத்தப் பரிசோதனை

அதிக ஆபத்து நிறைந்த குழுக்களாக எண்ணப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், ஒரு பாலுறவுக்காரர்கள் மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து 200 ரத்த மாதிரிகளை நிர்மலா சேகரித்து பரிசோதனை செய்வார் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அது எளிதான வேலையாக இருக்கவில்லை.
இதற்கு முன்னதாக, ஒரு விலங்கினத்திடம் இருந்து இன்னொரு விலங்கினத்திற்கு பரவிய மஞ்சள் காமாலை (லெப்டோஸ்பைரோஸிஸ்) பற்றிய பிரிவில் நிர்மலா பணியாற்றியிருந்தார்.
அதாவது, நாய்களிடம் இருந்து கொறித்து உண்ணும் பிராணிகளுக்கு பரவிய பாக்டீரியா நோய் தொற்று பற்றி பணிபுரிந்து வந்ததால் ஹெச்ஐவி அல்லது எய்ட்ஸ் பற்றி எதுவும் நிர்மலாவுக்கு தெரியாது.
சிவப்பு விளக்கு மாவட்டங்களை கொண்டிருக்கும் மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா நகரங்களைத் தவிர தன்னுடைய ஆய்வுக்குத் தேவையானோரை எங்கே கண்டறிவது என்பது பற்றியும் அவருக்கு எந்த சிந்தனையும் அப்போது இருக்கவில்லை.
சென்னையில் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதற்கான குறிப்பான இடங்கள் எதுவும் இருக்கவில்லை.

ஆய்வின் மையப்புள்ளி - தமிழக தலைநகர் சென்னை

எனவே, பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சென்னையின் அரசு பொது மருத்துவமனைக்கு நிர்மலா அடிக்கடி செல்லத் தொடங்கினார்.
"அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஓர் இணையோடு (ஜோடியோடு) பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பிறரை நிர்மலாவுக்கு சுட்டிக் காட்டினர்.
அவர்களுடைய படிவங்களை பார்த்தபோது, பலவற்றில் "வி ஹோம்" என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்தேன். அதனை பற்றிக் கேட்டபோது, அது விலைமாதர்களையும், கைவிடப்பட்ட பெண்களையும் அதிகாரிகள் தடுத்து வைக்கின்ற "கண்காணிப்பு இல்லம் (விஜிலன்ஸ் ஹோம்)" என பொருள்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது".
பணத்திற்காக பாலுறவு கொள்வது இந்தியாவில் அப்போதும், இப்போதும் சட்டத்திற்கு புறம்பானது. எனவே இவ்வாறான பெண்கள் கைது செய்யப்படுவர். பிணை பெறுவதற்கு பணம் செலுத்த முடியாமல் இருப்பதால் இத்தகைய தடுப்பு இல்லங்களுக்கு அனுப்பப்படுவர்.
அதனால், ஒவ்வொரு நாள் காலையிலும், வேலைக்கு செல்வதற்கு முன்னால், நிர்மலா இந்த தடுப்பு இல்லத்தில் இறங்கி பாலியல் தொழில் செய்வோரை சந்தித்து விட்டு, அதன் பிறகு வேலைக்கு செல்ல தொடங்கினார்.
சிறியதொரு கிரமத்தில் பாரம்பரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அவர் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர்.
"நான் பொதுவாக அதிக கூச்ச சுபாவம் உள்ளவள். தமிழ்தான் பேசுவேன். அமைதியான வாழ்க்கையை விரும்பினேன்" என்று நிர்மலா தெரிவிக்கிறார்.
ஆனால், அவர் கடந்து வந்த இந்த பாதையின் ஒவ்வொரு அடியிலும் அவருடைய கணவர் வீரப்பன் ராமமூர்த்தியால் அவர் ஊக்குவிக்கப்பட்டார்.
தங்களுடைய தொழில்முறை வாழ்க்கையை தொடங்கிய அந்த இணையிடம், இதற்காக ஒதுக்குவதற்கு பண வசதி இருக்கவில்லை. எனவே, அவருடைய கணவர் தினமும் தன்னுடைய மோட்டர் சைக்கிளில் தடுப்பு இல்லத்தில் இறக்கிவிட்டு உதவியதால், பேருந்து கட்டணத்தை சேமிக்க முடிந்தது.

 
                                   கணவர் வீரப்பன் ராமமூர்த்தியுடன்

மூன்று மாதங்களாக அவர் 80 மாதிரிகளைத் தான் சேகரித்து இருந்தார். கையுறையோ, பாதுகாப்பு கருவிகளோ எதுவும் இல்லை.
அந்த பாலியல் தொழிலாளர்களுக்கு அவர் எதற்காக பரிசோதனை செய்து வருகிறார் என்று எதுவும் தெரியாது.
"நான் எய்ட்ஸூக்காக சோதனை செய்து வருகிறேன் என்று சொல்லவில்லை. அவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். நான் எய்ட்ஸூக்காக சோதனை செய்கிறேன் என்று சொல்லி இருந்தால் கூட அவர்களுக்கு எதுவும் புரிந்திருக்காது. பால்வினை நோய்கள் பற்றி ஆராய்வதற்காக நான் ரத்த மாதிரிகள் எடுப்பதாக அவர்கள் நினைத்தனர்".
இதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவரை திருமணம் செய்திருந்த மருத்துவர் சாலமன், நிர்மலாவின் கணவர் வீரப்பன் ராமமூர்த்தி, நண்பர்கள் என பலரிடம் இருந்து கடன் வாங்கிய கருவிகளைக் கொண்டு, எடுத்துச் செல்லக்கூடிய எளிய சிறிதொரு நடமாடும் ஆய்வகத்தை நிர்மலா உருவாக்கினார்.
அவருடைய பரிசோதனை வழிமுறையின் முக்கிய பகுதியாக இருந்த ரத்தத்திலிருந்து, ரத்த நீரை பிரித்தெடுப்பதை தான் உருவாக்கிய ஆய்வகத்தில் அவர் மேற்கொண்டார்.
பதப்படுத்தி உறைநிலையில் வைத்துக்கொள்ள நல்ல சேகரிப்பு வசதி இல்லாததால் தன்னுடைய வீட்டில் வைத்திருந்த குளிர் சாதனப் பெட்டியில் நிர்மலா அவற்றை வைத்திருந்தார்.
சென்னையில் எலிசா பரிசோதனை வசதி இல்லாமல் இருந்ததால் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் இந்த மாதிரிகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட மருத்துவர் சாலமன் ஏற்பாடுகளைச் செய்தார்.
"1986 ஆம் ஆண்டு ஒரு நாள் தன்னிடம் இருந்த இரத்த மாதிரிகளை எல்லாம் ஒரு ஜஸ் பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு காட்பாடி ரயிலில் இரவு ஏறினோம். அங்கிருந்து ஒரு தாணி (ஆட்டோரிக்ஷா) பிடித்துக்கொண்டு கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு சென்றோம்"
அங்கு நச்சுயிரியல் துறையின் இயக்குநர் ஜேக்கப் டி. ஜான், மருத்துவர் நிர்மலாவுக்கு உதவுவதற்கு பி.ஜார்ஜ் பாபு மற்றும் எரிக் சிமோயஸ் ஆகிய இரு இளைய மருத்துவர்களை பணித்தார்.
அடுத்து என்ன நடந்தது என்பதை பார்ப்பதற்கு முன்னால், ஹெச்ஐவி / எய்ட்ஸ் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.

 
                                           எய்ட்ஸ் இலச்சினை

ஹெச்ஐவி / எய்ட்ஸ் என்பது என்ன?
ஹெச்ஐவி (மனித நோய் எதிர்ப்பை குறைக்கும் நச்சுயிரி - HIV) என்பது கனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பை பாதிப்படையச் செய்து, நோய் தொற்றுக்களையும், நோய்களையும் எதிர்த்து போராடுகின்ற திறனை பலவீனப்படுத்துவதாகும்.
பாதுகாப்பு இல்லாத பாலுறவு, நோய் தொற்றிய ஊசிகளை பகிர்ந்து கொள்வது, ஹெச்ஐவி தொற்று இருக்கின்ற தாயிடம் இருந்து பிறக்கின்ற குழந்தைகளுக்கு, பிறப்பு மற்றும் தாய்ப்பாலுட்டுதல் ஆகியவற்றால் ஹெச்ஐவி பரவுகிறது.
இதற்கு மருந்துகள் இல்லை. இந்த தொற்று இருப்போர் பெரும்பாலும் எவ்வளவுக்கு நீண்ட மற்றும் ஆரோக்யமான வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே சிகிச்சைகள்அளிக்கப்படுகின்றன. குணப்படுத்த முடியாது.
வாழ்க்கையை முடித்துவிடும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட முடியாத ஹெச்ஐவியின் கடைசி நிலையே எய்ட்ஸ்.
நெஞ்சை உறைய வைத்த நேரம்
"காலை 8.30 மணிக்கு நாங்கள் பரிசோதனையை தொடங்கினோம். மதிய வேளையில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதனால் தேனீர் அருந்த இடைவேளை எடுத்துச் சென்றோம். திரும்பி வந்தபோது, மருத்துவர் ஜார்ஜ் பாபுவும் நானும் முதலில் ஆய்வகத்தை சென்றடைந்தோம்" என்று நிர்மலா நினைவு கூர்கிறார்.
"மருத்துவர் ஜார்ஜ் பாபு மூடியை திறந்தார். திறந்த வேகத்தில் மூடினார். 'விளையாடாதே' என்று என்னை எச்சரித்தார். அங்கே ஆறு ரத்த மாதிரிகள் மஞ்சளாக மாறியிருந்ததை என்னால் காண முடிந்தது. நான் அதிர்ச்சியடைந்து உறைந்து நின்றேன். இது போல் நடக்கும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை".
ஒரு நிமிடத்திற்கு பின்னர் சிமியோஸ் உள்ளே வந்தார். அவரும் முடிவுகளை சோதனை செய்தார். "சில முடிவுகள் ஹெச்ஐவி தொற்று இருப்பதை காட்டுகின்றன" என்று கூறிவிட்டு, மருத்துவர் ஜானை அழைக்க அறைக்கு ஓடினார்.
இனி ஹெச்ஐவி தொற்று இருப்பதாக அவர் அந்த ரத்த மாதிரிகளை பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்களின் முகமே அதனைக் காட்டி கொடுத்தது.
"இந்த ரத்த மாதிரிகளை எங்கே சேகரித்தீர்கள்" என்று மருத்துவர் ஜான் நிர்மலாவிடம் கேட்டார்.
சென்னைக்கு திரும்புவதற்கு முன்னால், நிர்மலாவும், அவருடைய கணவரும் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டனர்.
"இது உணர்வலைகளை எழுப்பக்கூடிய விடயம். இதனை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டோம்" என்று ராமமூர்த்தி கூறுகிறார்.
சென்னைக்கு திரும்பியவுடன் மருத்துவர் சாலமன் அலுவலகத்திற்கு சென்ற நிர்மலா, அந்த செய்தியை அவரிடம் மட்டும் தெரிவித்தார்.

 
வாசிப்பதில் ஆர்வம் அதிகம்

உடனடியாக அந்த தடுப்பு இல்லத்திற்கு சென்றார்கள். இந்த முறை மருத்துவர்கள் சாலமன், பாபு மற்றும் சிமியோஸ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
அவர்கள் இணைந்து அந்த ஆறு பெண்களிடம் இருந்து மீண்டும் ரத்த மாதிரியை சேகரித்தனர்.
மருத்துவர் சிமியோஸ் அந்த ரத்த மாதிரிகளைக் கொண்டு அமெரிக்கா பறந்து சென்றார். அங்கு மேற்கு போல்டில் நடைபெற்ற பரிசோதனையில் ஹெச்ஐவி தொற்று எய்ட்ஸ் - உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவிஉண்மையிலே இந்தியாவை வந்தடைந்து பரவி வருவது உறுதியானது.
இந்த கவலைக்குரிய செய்தி இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும், அப்போதைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச். வி. ஹண்டேவுக்கும் இச்செய்தியை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அறிவித்தது.
மருத்துவர்கள் நிர்மலாவும், சாலமனும் பார்வையாளர்கள் அரங்கில் வீற்றிருக்கையில் மே மாதம் சட்டப்பேரவையில் அமைச்சர் ஹண்டே இந்த செய்தியை அறிவித்தார்.
தொடக்கத்தில் மக்கள் யாரும் இதனை நம்பவில்லை. சிலர் பரிசோதனையை கேள்விக்குட்படுத்தினர். சிலர் மருத்துவர்கள் தவறிழைத்து விட்டனர் என்றனர்.
கடந்த ஆண்டு இயற்கை எய்திய மருத்துவர் சாலமன், மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர் ஆனதால் தனிப்பட்ட முறையில் அவர் மீது விமர்சனங்கள் பாய்ந்தன.

 
ஆரவாரமில்லாத வெற்றி என்ற தலைப்பில் வெளிவந்த மருத்துவர் நிர்மலா பற்றிய செய்தி

"மக்கள் மிகவும் கோபமாக இருந்தனர். இந்தியாவின் வட பகுதியை சேர்ந்த ஒரு பெண், நாம் மிகவும் மோசமானவர்கள் என்று எவ்வாறு சொல்லலாம் என்று கொதித்தார்கள்.
ஆனால், இதனை அறிய வந்தது முதல் என்னுடைய தாய் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தோம்" என்கிறார் அவருடைய மகன் சுனில் சாலமன்.
ஆட்சியாளர்கள் எதேதோ பதில்களை சொல்லி கேள்விகளை சந்திக்க முடியாமல் குழம்பிப் போயினர்.
"இந்த சோதனையில் பெரியதொரு பனிக்கட்டியின் நுனியை மட்டுமே அறிய வந்துள்ளோம். நாம் உடனடியாக இறங்கி வேலை செய்தாக வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆய்வகப் பேரைவையின் இயக்குநர் என்னிடம் கூறினார்" என நிர்மலா தெரிவிக்கிறார்.
பெரிய அளவில் பரிசோதனை மற்றும் ஹெச்ஐவி தடுப்பு திட்டங்களை ஆட்சியாளர்கள் செயல்படுத்த தொடங்கினர்.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஹெச்ஐவி-எய்ட்ஸ் இந்தியாவில் விரைவாக நாட்டின் எல்லா மூலைகளிலும் பரவிய நோயாக மாறிவிட்டது.

 
மருத்துவர் நிர்மலாவின் ஆய்வு பற்றிய செய்திகள்

பல ஆண்டுகளாக 5.2 மில்லியன் ஹெச்ஐவி தொற்றுடையோர் இந்தியாவில் இருப்பதாக நம்பப்பட்டு வந்த நிலையில், 2006 - ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அந்த எண்ணிக்கையில் பாதிதான் உள்ளதாக தெரிவிக்கிறது.
இருப்பினும் இன்றும் 2.1 மில்லியன் மக்கள் ஹெச்ஐவி தொற்றுடையோராக இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இன்று வரை உயிர்க் கொல்லியாக விளங்கும் இந்த நோய்க்கு மருந்து இல்லை.
தன்னுடைய பங்கிற்கு நிர்மலா தன்னுடைய படிப்பை தொடர்ந்தார். தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க பரிசோதனை செய்வதாக சொல்லியிருந்த 200 ரத்த மாதிரிகளில் இன்னும் நூறுக்கும் அதிகமானவற்றை அவர் சேகரிக்க வேண்டியிருந்தது.
அடுத்த சில வாரங்களுக்கு பாலியல் தொழில் செய்வோர் மற்றும் ஒரு பாலுறவுக்காரர்களின் தடுப்பு இல்லங்களை சந்திப்பதை நிர்மலா தொடர்ந்தார்.
1987 ஆம் ஆண்டு "தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கண்காணிப்பு" என்ற தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். தேர்வுகளில் வெற்றி பெற்று, சென்னையில் இருக்கும் கிங் தடுப்பு மருந்து நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்புத் திட்டத்தில் இணைந்தார். அதிலிருந்து 2010 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றிருக்கிறார்.
மிகவும் திருப்புமுனையாக அமைந்து, இந்தியாவில் ஹெச்ஐவி-எய்ட்ஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு சரியாக 30 ஆண்டுகளுக்கு பின்னர் நிர்மலாவை அனைவரும் மறந்து விட்டனர்.
அவருடைய வெற்றிகரமான பரிசோதனையைப் பற்றி அவ்வப்போது சில ஊடகச் செய்திகளை தவிர அவருடைய பரிசோதனை பணி பற்றி மிகவும் குறைவான அங்கீகாரமே அவருக்குக் கிடைத்திருக்கிறது.
உங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எப்போதாவது உணர்ந்தது உண்டா?
"நான் ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட்டவள். இத்தகைய விடயங்கள் பற்றி யாரும் உணர்ச்சிவசப்படவோ அல்லது மனம் நொந்து போகவோ மாட்டார்கள். எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் மகிழ்கிறேன். நான் சமூகத்திற்காக ஏதோ செய்திருக்கிறேன்" என்று மன நிறைவுடன் நிதானமாகப் பதிலளித்தார் நிர்மலா.

News Source: Copyright © 2016 பிபிசி.

பிரதான செய்திகள்

News
Loading...
Yazhpanam.Net
Loading...

BBC TAMIL

Random Post

Name

BBC Tamil,1,Eeladhesam,1,India,1,London,2,News,26,POLITICS,5,Sri Lanka,4,Swiss,1,Tamilwin,1,World,1,ஆய்வு கட்டுரை- Topics,2,ஃபிடல் காஸ்ட்ரோ,2,நியூஸ் 1st தமிழ்,1,பிரசுரங்கள்,17,வக்கிரங்கள்,5,
ltr
item
Yazhpanam: கசப்பான உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி!!!
கசப்பான உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி!!!
http://ichef-1.bbci.co.uk/news/624/cpsprodpb/17B7C/production/_91184179_2095bd15-6627-458e-93c9-339c3b823387.jpg
Yazhpanam
http://www.yazhpanam.com/2016/09/blog-post_85.html
http://www.yazhpanam.com/
http://www.yazhpanam.com/
http://www.yazhpanam.com/2016/09/blog-post_85.html
true
6603642903893878307
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL மேலும் வாசிக்க... Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Sample Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy