Headlines News:
Home » » நெடுந்தீவு மாணவி மரணத்துக்கு யாழ். மருத்துவர் சமூகமே பொறுப்புக் கூறவேண்டும்!!!

நெடுந்தீவு மாணவி மரணத்துக்கு யாழ். மருத்துவர் சமூகமே பொறுப்புக் கூறவேண்டும்!!!

Editor By Yazhpanam on வெள்ளி, 14 அக்டோபர், 2016 | பிற்பகல் 5:04:00

யாழ். மருத்துவர் சமூகமே நெடுந்தீவு மாணவி மரணத்துக்கு பொறுப்புக் கூறவேண்டும்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவி டிலாஜினி ரவீந்திரன் (வயது - 18) கடந்த புதன்கிழமை 12.10.2016 அன்று கடும் நோயில் வீழ்ந்து நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 
டிலாஜினியின் மரணம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள அனைத்து ஊடகங்களும் குறித்த மாணவியின் மரணத்துக்கான மூல வேரைக் கண்டறியாமல் எழுந்தமானமாகவே செய்திகளை வெளியிட்டுள்ளன. 

அதாவது கிளைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. மாறாக, 'இப்படித்தான் செய்தி அறிக்கை இடுவோம்' எனில் அது இன்னும் பல உயிர்களை காவுகொள்ளத்தான் போகிறது. இது யாருக்குத்தான் மகிழ்ச்சி தரும்? இதனால் தமிழ் சமூகத்துக்கு என்ன பயன்? இப்போதும்கூட, எல்லோரும் உயிரிழந்த மாணவி டிலாஜினி ரவீந்திரன் தொடர்பில் அனுதாப செய்திகளையே வெளியிட்டவாறு உள்ளனர். 

ஆனால் உண்மையில் தவறு எங்கே நடந்துள்ளது? எங்கே குறைபாடு உண்டு? 

மாணவியின் உயிரைப்போல இன்னும் பல மனித உயிர்களைக் காவுகொள்ள காத்துக்கிடக்கிறது நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை. இதற்கு உரிய தீர்வைக் காண்பதே, குரலற்றவரின் குரலான நியூஸ் ஈ.ரி.வி  செய்தி அறிக்கையிடலின் நோக்கமாகும். இதன் அசைவும் - விளைவும் மண் பயனுறுதலாகவே அமையட்டும். 

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தின் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியான டிலாஜினிக்கு கடந்த புதன்கிழமை பாடசாலையிலேயே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய பாடசாலை கற்றலை இடைநடுவில் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்ற டிலாஜினி, தனது அம்மம்மாவின் மடியில் தலை சாய்த்து சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் உணவருந்தி விட்டு, அம்மம்மாவிடம் கோப்பியும் வாங்கிக் குடித்துள்ளார். ஆயினும் மூச்சிழுக்க சிரமப்பட்ட டிலாஜினியை ஆபத்தான நிலையில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு பிற்பகல் 3.10 மணியளவில் கூட்டிச் சென்றுள்ளனர். 

ஆனால், அங்கு வைத்தியர் கடமையில் இருக்கவில்லை. குறித்த வைத்தியர் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையிலிருந்து நான்கு கிலோமீற்றர்கள் தூரத்துக்கு அப்பால் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றிலும் கடமையில் ஈடுபடுவது வழமையான செயற்பாடாகும்.

இத்தகைய இடர்நிலையில், மருத்துவத் தாதிமார் கூட சேவைக்கு அமர்த்தப்படாத நெடுந்தீவு வைத்தியசாலையில் கீழ்நிலை ஊழியர்கள் இருவரே கடமையில் இருந்துள்ளனர். மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டிலாஜினிக்கு உடனடியாக என்ன சிகிச்சையினை அளிப்பது? என்பது தொடர்பில் அங்கிருந்த கீழ்நிலை ஊழியர்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். 

இந்த பதட்டச்சூழலை அவதானித்த, அங்கு ஏனைய நோயாளிகள் போலவே தானும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வயதான தாதி ஒருவர், தனக்கு உட்செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த சேலைன் மருந்தையும் கழட்டி எறிந்து விட்டு பதறி வந்து மாணவியை பரிசோதித்து மாணவியின் உடல் குளிர் ஏறியிருப்பதையும் உணர்ந்த பின்னர் மருத்துவரை எப்படியாவது அழையுங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடமையில் இருந்த மருத்துவருக்கு தகவல் வழங்கப்பட்டு ஒரு மணித்தியாலம் ஐந்து நிமிடங்களுக்கு பின்னர் தள வைத்தியசாலைக்கு வருகை தந்த மருத்துவர், மாணவி ஏலவே இறந்து விட்டதனை உறுதிப்படுத்தி உள்ளார். 

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் தனது மருத்துவ அறிக்கையில், மாணவிக்கு மாரடைப்பு வந்தே மரணம் சம்பவித்துள்ளதாக கூறியுள்ளார். மாணவியின் உடல் இன்று (14.10.2016) வெள்ளிக்கிழமை காலை நெடுந்தீவில் தகனம் செய்யப்பட்டுள்ளது. 

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தின் கலைப் பிரிவில் அரசியல், கிறிஸ்தவம், தமிழ் ஆகிய பாடங்களை கற்று வந்த டிலாஜினி இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்தவர். கடந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6A, 3B  புள்ளிகளைப் பெற்று பாடசாலை சமூகத்துக்கு பெருமை சேர்த்தவர்.

இம்முறையும் டிலாஜினி A/L பரீட்சையில் திறமைச் சித்திகள் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும், பிரதேசத்துக்கும் பெருமை சேர்ப்பார் என்று கல்விச்சமூகத்தினர் பெருத்த நம்பிக்கைகளோடு காத்திருந்தனர். சிறிய வயதிலேயே தந்தையாரும் நோயில் வீழ்ந்து இறந்துவிட, முன்னாள் கிராம சேவையாளரான தாயின் அரவணைப்பிலேயே டிலாஜினியும் அவரது சகோதரியும் வளர்ந்து வந்துள்ளனர்.  தற்போது டிலாஜினியின் அம்மம்மாவும், தாயும், தங்கையும் உள்ளார்கள். 

மாணவியின் மரணத்துக்கு வைத்தியசாலை நிர்வாகத்தை குற்றம் கூறியும், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவிவரும் மிகவும் மோசமான வளப்பற்றாக்குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தியும்  நேற்றுக்காலை (13.10.2016) பிரதேச மக்களால் நெடுந்தீவு மாவிலி இறங்கு துறையில் இருந்து நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனை வரை கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் தராதரம் தான் என்ன?  

4500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நெடுந்தீவில் இன்றுவரை நிரந்தரமான தள மருத்துவர் ஒருவர் இல்லை, மருத்துவத்தாதிகள் என்று எவரும் இல்லை, மருந்துக் கலவையாளர் இல்லை,  பாதுகாப்பு உத்தியோகத்தர் இல்லை, தாய் - சேய் மகப்பேற்று, இரத்தவங்கி, விசக்கடி முதலுதவி சிகிச்சை என்று உடனடியாக வைத்தியசேவை வழங்கும் எந்த பிரிவும் - வளமும் அங்கு இல்லவே இல்லை. 
 
பாம்புக்கடியால் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவோர், பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுவோர், ஒவ்வாமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் - சிறுவர்கள், வயோதிப கால நோய்களால் பாதிக்கப்படும் முதியவர்கள் என்று இந்த மக்களுக்கு அவசர - அடிப்படை சிகிச்சைகள் அளிக்கத் தேவையான வசதிகள் கூட இல்லாமல், அங்குள்ள ஊழியர்கள் மிகக்குறைந்த பௌதீக வளங்களோடு நாளாந்தம் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். 

கடந்த வாரம் கூட நிறைமாதக் கர்ப்பிணித் தாயார் ஒருவர், குழந்தை பிறப்பில் ஏற்பட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக குறித்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு  உரிய சிகிச்சை வழங்க முடியாத பௌதீக வளப்பிரச்சினைகளால் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்துள்ளார். அது விவரிக்க முடியாத மரண வலி. திக்... திக்... நிமிடங்கள்!  

மருத்துவத்தில் அதி உன்னதமான தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ள 21 ஆம் நூற்றாண்டிலும் கூட இலங்கை மத்திய அரசால் குறித்த மக்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்க முடியாமல் அவர்களது பெறுமதியான உயிருக்கு உலை வைக்கும் செயலை என்னவென்று சொல்வது? தீவுப்பகுதி மக்களின் உயிர்கள் என்ன அவ்வளவு மலிவானவையா? இவர்களையும் மனிதர்களாகவே யாரும் மதிக்கவே இல்லையா?

அங்குள்ள மக்களுக்கு தகுந்த வகையில் வைத்தியசாலையின் பௌதீக, மனித வளங்களை கரிசனையோடு கையாண்டிருந்தால் மாணவி டிலாஜினி இன்று எம்மோடு உயிருடன் இருந்திருப்பார். தமிழ்ச்செய்தி உலகம் அவளது மரண செய்தியை அல்ல,  A/L பரீட்சையில் திறமைச் சித்திகள் பெற்று பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த செய்தியை எழுதி எழுதி பக்கம் நிரப்பியிருக்கும்.   
கதை கதையாம் காரணங்கள். கிளைகளை கலைவதை விடுத்து மூலவேரை பிடுங்குவோம்  வாருங்கள். 

யாழ். மருத்துவர் சமூகத்தின் வறட்சி சிந்தனையே... மாணவியை கொன்றது.  
எமது யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவர் சமூகத்தினர், 'எமது மண் - எமது மக்கள் - எமது மக்களின் வாழ்வும் வளமும் நிறைவும் என்ற நேசிப்போடு, தேசிய சிந்தனையோடு சேவையாற்ற மறுத்ததன் விளைவே' நெடுந்தீவு மாணவியின் மரணமாகும். 

இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள குரலற்றவரின் குரலான நியூஸ் ஈ.ரி.வி  செய்தி குழுமம் அலைபேசியூடாக வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கத்தை தொடர்பு கொண்டது. இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 

'நாங்கள் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்ற போது வடக்கு மாகாணத்தில் 37 வைத்தியசாலைகளுக்கு ஒரு மருத்துவரும் இருக்கவில்லை. ஆனால், தொடர்ந்து நாங்கள் மத்திய அரசாங்கத்துடன் கதைத்ததன் பலனாக 13 வைத்தியசாலைகளுக்கு நிரந்தரமாக மருத்துவர்களை நியமித்து, அந்த எண்ணிக்கையை 24 ஆக குறைத்துள்ளோம். வடக்கு மாகாணத்தில் தற்போதும்  24 வைத்தியசாலைகளுக்கு ஒரு மருத்துவர் கூட இல்லை.

ஆனால், நாங்கள் அந்த 24 வைத்தியசாலைகளுக்கும் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், சேவையை இடைநிறுத்தி விட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு நாட்டுக்கு மீளவும் திரும்பியுள்ள மருத்துவர்கள், மருத்துவ பல்கலைக்கழக படிப்பை முடித்து விட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் மருத்துவர்கள் போன்றோரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து சேவையை வழங்கி வருகின்றோம். மருத்துவர்களையோ, மருத்துவ தாதியரையோ நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமே உள்ளது.' என்றார். 

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் தற்போது கடமையில் உள்ள மருத்துவரும் ஓய்வு பெற்றவர். ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றார் என்பதும் இங்கு உன்னிப்பாக கவனிப்புக்குரியது. 

மாணவி டிலாஜினியின் மரணத்துக்கு மட்டுமல்ல, 'மானுடநேய உன்னத மருத்துவ சேவை கிடைக்கப்பெறாமல்' ஈழத்தில் நமது நிலத்தில் இன்னும் நிகழப்போகின்ற பல நூறு அநாவசிய மனித உயிரிழப்புகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட மருத்துவர் சமூகமும் முக்கிய பொறுப்பாளிகளாவார்கள். மக்களின் வரிப்பணத்தை இலட்சக்கணக்கில் செலவழித்து இலவச கல்வி வழங்கப்பட்டே ஒரு மருத்துவர் உருவாக்கப்படுகின்றார். 

யாழ்ப்பாணம் மருத்துவப் பல்கலையில் இருந்து பட்டம் பெற்று வருடாந்தம் 135 மருத்துவர்கள், சமுகத்துக்கு மானுடநேய மருத்துவசேவையை வழங்குவோம் என்று புறப்பட்டு வருகின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு வருடமாவது எமது தமிழ் மக்களுக்காக நெடுந்தீவு போன்ற மிகவும் பின்தங்கிய பல கஷ்ட பிரதேசங்களில் சேவை செய்ய வேண்டுமென்று வைராக்கியம் வளர்த்திருந்தால், தூர நோக்கு தூய சிந்தனை கொண்டிருந்தால் எமக்கு இப்படி ஒரு மருத்துவ அவலம் நிகழ்ந்திருக்காது. 

இவ்வருடம் கூட இங்கிருந்து வெளியேறிய மருத்துவ மாணவர்களில் ஒருவர் தானும் நெடுந்தீவு போன்ற பின்தங்கிய பல கிராமங்களில் வைத்திய சேவையை, எமது மண் - எமது மக்கள் - எமது மக்களின் வாழ்வும் வளமும் நிறைவும் என்ற நேசிப்போடு, தேசிய சிந்தனையோடு வழங்க விண்ணப்பிக்கவில்லை என்பது அவமானம். 

சகல சௌபாக்கியங்களும் நிறைந்து கிடக்கும் நகர்ப்புற மருத்துவமனைகளில் மட்டுமே 'பழம் தின்று கொட்டை போடுவோம்' என்ற சொகுசு வாழ்க்கை மோகமே 'நமது மண், நமது மக்கள் என்கிற தேசிய சிந்தனையை - மானுடநேய மருத் சேவை வழங்கும் மனப்பான்மையை' இல்லாமல் செய்து விட்டது. இந்த சிந்தனை வறட்சி இன்னும் எத்தனை மக்களின் உயிர்களை காவு கொள்ளப் போகின்றதோ?
 
 
செய்தி அறிக்கையிடல்,
நியூஸ் ஈ.ரி.வி  
செய்தி குழுமம்
 
Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger