Headlines News:
Home » » மழை பொய்த்தாலும், நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்!!!

மழை பொய்த்தாலும், நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்!!!

Editor By Yazhpanam on திங்கள், 31 அக்டோபர், 2016 | பிற்பகல் 4:53:00

வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (North East Monsoon) என்று குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வரத்தொடங்கியுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காலம் பொய்த்திருந்த இந்த பருவமழை கடந்த வாரம் முதல் ஆங்காங்கே பெய்ய ஆரம்பித்துள்ளதால் விவசாயிகள் தங்களது பெரும்போக நெல் பயிர்ச்செய்கை நிலங்களை உழுது பண்படுத்தி நெல் விதைக்கும் பணியை பரவலாக ஆரம்பித்துள்ளனர். 

வழமையாக செப்டெம்பர் மாத நடுப்பகுதி அல்லது இறுதியில் ஆரம்பமாகும் பருவ மழை இம்முறை காலம் தப்பி ஒக்டோபர் மாத பிற்பகுதியில் பெய்ததால், விவசாயிகள் காலம் பிந்தியே நெல் விதைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பில் newsetv விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தது, 

வழமையாக விதைப்பு பணிகள் முடிந்து ஒக்டோபர் மாத பிற்பகுதியில் நெற்பயிர்கள் ஒரு சாண் அளவுக்கு வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், இம்முறை விதைப்புக் காலம் தள்ளிப் போனதால், அறுவடையும் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளது. 

அறுவடை ஜனவரி மாத இறுதியிலோ, பெப்ரவரி மாத தொடக்கத்திலோ நிகழும் சாத்தியங்கள் உள்ளன. வழமையாக ஜனவரி மாத நடுப்பகுதியில் பொங்கல் காலத்தை ஒட்டி மழை பெய்வதால், அறுவடை நேரம் மழை வந்து பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று விவசாயிகள் அச்சமும் கவலையும் தெரிவித்தனர். 

இதனால், இம்முறை விவசாயிகள் குறைந்தளவு நம்பிக்கைகளுடன் விவசாயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் வணிக நோக்கத்தில் அல்லாமல், சுயதேவை உணவு உற்பத்தியை நோக்கமாகக் கொண்டே நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மழையைக் கண்டவுடன் தங்களது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்த விவசாயிகள், நிலங்களை உழுது, பசளைகளை பரப்பி, நெல் விதைப்பு பணியினை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இரண்டாவது மழை அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இன்னமும் பெய்து கொடுக்காததால் நெற்பயிர்கள் முளைக்கும் சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுவதாகவும் மனவருத்தம் தெரிவித்தனர்.

இம்முறை பருவம் தப்பி மழை பெய்ததினால் வழமையாக விதைக்கும் நெல்லினங்களை விடவும் குறைந்த காலத்தில் அறுவடை செய்யக்கூடிய நெல்லினங்களையே விவசாயிகள் விரும்பி இருந்தனர். ஆனால், வடமாகாண விவசாயத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை தங்களுக்கு குறைந்த காலத்தில் அறுவடை செய்யக் கூடிய நெல்லினங்களை வழங்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

கடந்த காலங்களில் மானிய அடிப்படையில் உரங்கள், விதைகளை வழங்கி வந்த கமநல சேவைகள் திணைக்களம் இம்முறை விவசாயிகளுக்கு, அவர்கள் நெல் பயிரிடும் ஏக்கர் அடிப்படையில் பணமாக வழங்க உள்ளது. 

நெல் பயிரிடும் நிலத்துக்கான காணி உறுதி, குத்தகை பத்திரம், வங்கி கணக்கு புத்தகம், பிறப்புச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கமக்கார அடையாள அட்டை, கிராம அலுவலர் கடிதம், போன்ற பல்வேறு சான்றுப் பத்திரங்களை கோரி, இந்த செயற்பாட்டில் கடுமையான கெடுபிடிகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிய வருகின்றது.

உள்ளுரில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், வெளிநாடுகளிலுள்ள தங்களின் உறவினர்கள், நண்பர்கள் ‘பராமரிக்குமாறு கூறி நம்பிக்கை அடிப்படையில் வழங்கிய காணிகளிலேயே’ காலம் காலமாக விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் இத்தகைய ஆவணங்களை கோருவதால், அழுத்தங்களையும் - நெருக்குதல்களையும் எதிர்நோக்கியுள்ள இந்த பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டுள்ள விவசாயிகள் கமநல சேவைகள் திணைக்களத்தின் குறித்த நிதித்திட்டத்திலிருந்து விலகி, தனியார் கம்பனிகள், தனி நபர்களிடம் கடன்களைப் பெற்று கடனாளியாகும் ஆபத்துகளும் நிறையவே உள்ளன. 

வடமாகாண விவசாயத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், குரலற்றவர்களின் குரலான நியூஸ்ஈ ரிவி உள்ளிட்ட ஊடகங்கள் இரசாயன உரம் மற்றும் நஞ்சு மருந்துகள் பாவனை காரணமாக ‘மலடு ஆகி வரும் நிலம்’ தொடர்பில் விவசாயிகள் மத்தியில் மேற்கொண்ட விழிப்புணர்வு காரணமாக இம்முறை, விவசாயிகள் இயற்கை உரங்களையும், வேதியல் மருந்துகளையும் அதிகம் பாவித்து நெற்பயிர் செய்கையை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் இரசாயன உரப்பாவனையை மட்டுப்படுத்துவதாக வைராக்கியமும் வளர்த்துள்ளனர். 

செயற்கை கிருமி நாசினிகளுக்குப் பதிலாக இயற்கை கிருமி நாசினிகளான வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகாவிய கரைசல் போன்றவற்றை சில விவசாயிகள் பயன்படுத்துவதை காணுகின்றபோது, ‘மண் வளத்தை பாதுகாத்து நாளைய சந்ததியும் உணவு உற்பத்தி செய்து உயிர்வாழும் கலையை’ அளிக்கும் சிந்தனை மாற்றம் மகிழ்ச்சி தருகின்றது. 

வழமையாக அளவுக்கு அதிகமாக செயற்கை உரங்களான யூரியா, அமோனியா போன்றவற்றை விவசாயிகள் பயன்படுத்துவதால், மண்ணுக்கு ஊட்டம் வழங்கும் விவசாயிகளின் உற்ற தோழனாகிய மண் புழு, இன்னபிற நுண்ணுயிர்கள் செத்து மடிந்து மண் மலடாகி கல்லாகி வருவதுடன், குறித்த வயல்களில் விளையும் தூய போசனைப் பெறுமானம் அற்ற விதை - தானியங்களை உண்பதால் புற்றுநோய்கள், ஒவ்வாமை உள்ளிட்ட பல தொற்றா நோய்கள் மனிதர்களுக்கு பெருகி வரும் உயிருக்கு அச்சுறுத்தலான உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் தொடர்பில் மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு, எச்சரிக்கையும் செய்யப்பட்டு வருகின்றது. 

இம்முறை போகம் பிந்தியுள்ளதால் 3 மாதம், 3 1/2 மாத கால நெல்லை விதைக்க விரும்பும் விவசாயிகள், அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகளில் கிளிநொச்சி - பரந்தன், வவுனியா, முருங்கன் ஆகிய இடங்களில் உள்ள அரச விதை உற்பத்தி கூட்டுத்தாபனத்தில் விதை நெல்லை  பெற்றுக்கொள்ளலாம் என்பதனை அறியத்தருகிறோம்.  

நன்றி
Newsetv செய்திக்குழுமம்

Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger