Header Ads

அற்புதமான சிற்ப கலைஞர் ஆனது எப்படி? முன்னாள் போராளியான இளைஞனின் ஒரு அனுபவப் பகிர்வு!!!

ஒரு இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஒரு இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் தமிழர் வாழ்வியலில் சிற்பக்கலை தொன்றுதொட்டு தனிச்சிறப்பு பெற்றுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இந்தியாவை எல்லோரும் திரும்பிப் பார்ப்பதற்கு அங்குள்ள பண்டைய சிற்பங்களும் தற்போது எழுச்சி பெற்று வரும் சிற்பங்களுமே காரணம். ஆனால் இந்தியாவில் இருந்து சிற்பக் கலைஞர்கள் வந்து செல்கின்ற அதன் அயல்நாடான இலங்கையில் அந்த நிலை இல்லை என்ற கவலை சிற்பாச்சாரியர்களிடம் நிறைந்தே உள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில் வவுனியா, நொச்சிமோட்டையில் ஸ்ரீ கிருஸ்ணன் சிற்பாலயத்தில் சிறப்பக்கலையில் ஈடுபட்டு வரும் தர்மலிங்கம் தர்மரட்ணம் என்பர் தனது அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அழகழகான சிற்பங்கள், இந்து கடவுள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சிற்பங்களுக்கு மெருகூட்டும் வர்ணப்பூச்சுக்கள் என அவரது சிற்ப வேலைத்தளத்தில் பல வேலைப்பாடுகள் நடைபெற்றன.
இவற்றுக்கு மத்தியில் நடுவில் இருந்து சிவன், பார்வதி சிலையை செதுக்கி வரும் சிற்பக்கலைஞனை சந்தித்தோம். அவரது கருத்தில் பல உண்மைகள் மறைந்திருந்தன அத்துடன் ஏக்கங்களும் நிறைந்திருந்தன.
இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வந்து இலங்கையில் பல சிற்பங்களை செய்து வருகின்றனர். அங்கிருந்து தான் சிற்பக்கலை வந்திருந்ததாக நான் அறிந்திருந்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இலங்கையில் அதனை வளப்படுத்த உதவிகள் இல்லை என்பது அவரது குற்றச்சாட்டாக இருந்தது.

வவுனியா, ஓமந்தை வண்ணாங்குளத்திலுள்ள அரசர்பதி கண்ணகை அம்மன் கோவிலில் சிற்ப வேலைக்காக இந்தியாவில் இருந்து வந்திருந்த மாரியப்பன் ஆச்சாரியாரிடம் ஏதேற்சையாக சிற்பக்கலையை கற்று முயன்று இன்று நானாகவே சிற்பங்களை செய்து பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதாக கூறும் இவ் இளைஞனின் துணிச்சல் சிறப்பே.

ஓமந்தை, நெல்வெலிக்குளம் கிராமத்தில் பிறந்து ஓமந்தை மத்திய கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை கற்ற இவர், யுதத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளுக்குள் அகப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினராக சிறிது காலம் செயற்பட்டிருந்தார். யுத்த நிறைவின் பின்னர் புனர்வாழ்வுக்காக 2 ஆண்டுகள் தன் இளமையை கழித்த இவ் இளைஞன் தன் முயற்சியில் இருந்து பின் வாங்காமல் மல்லாவியில் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.  சிறுவயதில் இருந்து பழகிய தான் அதிக பக்தி கொண்ட ஓமந்தை, வண்ணாங்குளம் அரசர் பதி கண்ணகை அம்மன் கோவிலுக்கு வழிபட வந்துள்ளார். அங்கு ஆலய திருத்த வேலைகள் நடைபெற்றன.
1997 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசர்பதி கண்ணகை அம்மன் கேவிலுக்கு வந்த இவர் அங்கு இடம்பெற்ற சிற்ப வேலைகளில் தன்னை மறந்து அதில் ஈடுபட துணிந்தார். இந்தியாவில் இருந்து வந்த சிற்பக்கலைஞர்களுடன் கூலியாளாக பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.


பொறுமை, நேரம் தவறாமை, தொழிலுக்கு மதிப்பு என்பவற்றை தன் தாரக மந்திரமாக கொண்டு சிற்பக்கலைஞர்களுக்கு உதவிய இவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிற்பங்களை செய்யும் நுட்பத்தை கலைஞர்களிடம் இருந்து கற்றும் இருக்கின்றார். கோபுர முடியில் இருந்து தவறி விழும் சீமெந்து கரண்டியை மேலே இருந்து இறங்கி வந்து எடுத்து மீண்டும் மேலே ஏறி அதனை சிற்பாச்சாரியரிடம் கொடுத்த சம்பவங்கள் பல என்கிறார் இந்த இளைஞன்.
இவ்வறான முயற்சியே இன்று தனித்து ஒரு சிற்பக்கலைஞனாக மிளிர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது இவர் தன்னை பெருமிதம் கொள்ள வைக்கும் செயலாக உள்ளது.

எதிர்கால சந்ததி தொழிலுக்காக அலையும் நிலை மாற வேண்டும் என்பதுடன் தொழில் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதே இவர் வாதம். பொறுமையும், தொழில் பக்தியும் உள்ளவர்களுக்கு கற்றுக் கொடுக்க விரும்பும் இவர் மூத்த கலைஞர்கள் சிலர் தமது தொழிலை கற்றுக் கொடுக்காமையே இன்று சிற்பக்கலை வீழ்ச்சி அடைந்து செல்ல காரணமாகின்றது என்ற தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கின்றார்.


கற்றதை கற்பித்தால் மட்டுமே அடுத்த ஜென்மத்திலும் இக் கலை இருக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு சிற்பங்களை செய்து வரும் இக் கலைஞனை ஊக்கப்படுத்துவதோடு இன்னும் பல கலைஞர்களையும் வட பகுதியில் உருவாக்க வேண்டிய பொறுப்பு வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுதுறை அமைச்சுக்கும் அது சார் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும் உரித்தாக இருக்கும் என்பதே இக் கலைஞர்களின் எதிர்பார்ப்பாகும்.


                     நன்றி: சமகாலம்
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.