Headlines News:
Home » » கடல் காற்றை விடவும் பலமாக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சிறீலங்கா அரசு!!!

கடல் காற்றை விடவும் பலமாக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சிறீலங்கா அரசு!!!

Editor By Yazhpanam on சனி, 19 நவம்பர், 2016 | முற்பகல் 11:48:00

கடல் காற்றை விடவும் பலமாக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சிறீலங்கா அரசு! (Video) 


இலங்கையில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. காற்று பலமாக வீசுவதால் கடல் கொந்தளிப்பு அபாயம் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் தொழிலுக்கு செல்வது தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமெனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்தநிலையில் கடல் அலைகள் பெருத்த இரைச்சலுடன் மூசிக்கொண்டு கொந்தளித்து உயர எழுந்துகொண்டிருப்பதால், மீனவர்கள் எவரும் படகுகளை கடலில் இறக்கி தொழில் செய்ய முடியாத கையறுநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜீவனோபாய தொழில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடமராட்சி பிரதேச மீனவர்களின் நலனில், Newsetv கரிசனை கொண்டு கவனம் செலுத்திய போது: 

பொதுவாகவே வருடந்தோறும் நவம்பர் மாத பிற்பகுதியில் இருந்து ஜனவரி மாத இறுதிவரை மீன்பிடித் தொழில் என்பது மந்தமாகவே இருக்கும். இம்முறையும் அப்படித்தான். தற்போது மூன்று நாட்களாக தொழிலுக்கு செல்ல முடியவில்லை. இந்த மூன்று நாட்களும் அன்றாடம் வாழ்வை நடத்திச் செல்வதே பெரும்பாடாக இருக்கின்றது. இன்னும் எத்தனை நாளைக்கு தான் தாக்குப்பிடிப்பது? என்பதே புரியாத புதிராக உள்ளது. 

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் அரசாங்கமோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ நிவாரணப்பொருட்களையோ அன்றி நிதியுதவிகளையோ வழங்கினால் பேருதவியாக இருக்கும். நிவாரண உதவிகள் எதுவும் இல்லாத பட்சத்தில் வாழ்க்கையை எப்பாடுபட்டாவது கொண்டு நடத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அபாய எச்சரிக்கையையும் மீறி கடலுக்கு செல்லும் பல மீனவர்களை கடல் காவு கொண்டது தான் மிச்சம். என்று வடமராட்சி பிரதேச மீனவர்கள் பெருமூச்சை உள்ளிழுத்தப்படி கூறிமுடிக்கும் போது, அவர்களின் ஒற்றைக்கண்களில் கடந்த கால வாழ்க்கை கோலத்தின் சோகக்கீறல்களையும் மற்றைய கண்களில் வாழ்க்கை பற்றிய புதிய தேடலையும் காண முடிந்தது.

கவனிக்குக: கடலை ‘ஆழி’ என்பார்கள். ஆனால் கடலோடிகள், கடல்கரையில் அலை பொங்குமிடத்தையே ‘ஆழி’ என்று அழைக்கிறார்கள். கரையில் இருந்து சில மீற்றர்கள் தொலைவில் பாறைகளில் அலைமோதி பொங்கித்தெறித்து உயர எழுந்து விழும் இடமே அது. ஆழ்கடலைக் கண்டு பயப்படாதவர்கள் கூட ஆழிக்கு பயப்படுவார்கள். கடல்கரையிலிருந்து புறப்பட்டு ஆழியைக் கடந்து செல்லும் போதும் சரி, மீன் பிடித்து திரும்பி ஆழியைக் கடந்து கரைக்கு வரும் போதும் சரி, பெருத்த சிரமங்களையும் துயரங்களையும் எதிர்கொள்வார்கள். 

படகுகள் குப்புற கவிழ்ந்து உயிர் மற்றும் சொத்திழப்புகள் ஏற்படவோ, அன்றி கட்டுப்பாடு அற்று நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு எத்தனையோ கிலோமீற்றர்களுக்கு அப்பால் (பிற நாடுகளில் கூட) கரை ஒதுங்கவோ வாய்ப்புகள் உண்டு. அதுவும் கடல் கொந்தளிப்பு நேரங்களில் ஆழியைக் கடப்பதென்பது ‘கல்லில் நார் உரிக்கும்’ வேலைக்கு ஒப்பானதாகும். ஒவ்வொரு முறையும் ஆழியைக் கடந்து விட்டாலே போதுமானது அந்த மீனவர்கள் மறுபிறவி எடுத்து விட்டார்கள் என்றே கருதப்படுவார்கள். 

மீனவர்கள் நித்தமும் செத்து செத்துப் பிழைக்கும் ஒரே இடமும் - மரணத்தோடு மோதி விளையாடும் ஒரே இடமும் இந்த இடம் தான். எழுத்துக்கட்டுக்குள் அடக்கிவிட முடியாத கணப்பொழுதுகள் அவை. ‘ஐயகோ… செத்து விடுவோம் என்கிற மரண பீதியும் - இல்லை இன்னும் உயிர் வாழ்வோம்’ என்கிற ஆசையும் எதிரெதிர் (முரண்தளத்தில்) மின்னல் வேகத்தில் சந்தித்துப் பிரியும் இடம் அது.  

ஒருபுறம் அத்துமீறி உள்நுழைந்து வலைகளை சேதப்படுத்தி மீன்வளத்தை அள்ளி வாரிச்சுருட்டிக்கொண்டோடும் இந்திய மீனவர்களோடும், மறுபுறம் இத்தகைய இயற்கைச் சீற்றங்களோடும் மல்லுக்கட்டியே இவர்களின் வாழ்க்கையின் பெரும் பகுதி கடந்து போய்க்கொண்டிருக்கிறது. 

‘ஓ என்று இரையும் காற்று, மூசி மோதி உயர எழும் கடல் அலைகள்’ என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தாலும், வாழ்க்கை காலத்தை கொண்டு நகர்த்த ஆழிகளைக் கடந்து ஒவ்வொரு முறையும் மறுபிறவி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மீனவர்கள்! மீனவர்களின் உயிர் என்ன, சிறீலங்கா நாட்டு அரசாங்கத்துக்கு அவ்வளவு மலிவானதா? 

செய்தி அறிக்கையிடல்: Newsetv.
Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger