Header Ads

அலெக்ஸ் கைதின் மூலம் என்னத்தைச் சாதிக்க முயல்கிறது TID?!!!

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்தில் இருந்து கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பொலிஸார் அலெக்ஸ் என்ற இளைஞரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

ஆவா குழுவில் இணைந்து செயற்பட்டதாக கூறியே மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் குறித்த கட்சியினருடன் இணைந்து செயற்பட்ட அலெக்ஸ் ஒரு தீவிர அரசியல், சமூக செயற்பாட்டாளராக அறியப்பட்டவர். 

எப்போதும் சுறுசுறுப்பாகவும், தன் உடலை வருத்தியும், வியர்வை சிந்தியும், சமூகப் பற்றோடு தீவிர களப்பணியாற்றும் ஒருவராகத் தான்   அலெக்ஸ் அறியப்பட்டிருக்கிறார். தன்னை அறிந்தவர்களுக்கு என்ன துன்பம் என்றாலும் கடைசி வரை உடனிருந்து உதவுவார். தடைகளைப் பற்றி கவலைப்படமாட்டார். 

போரினால் பாதிக்கப்பட்ட, வாழ்வாதாரத்தை இழந்த, அடிநிலை மக்களுக்காக களத்தில் நின்று உறுதியுடன் பணியாற்றுபவர்.

தேசியமும், சமூக மாற்றமும் என்கிற சிந்தனையின் பால் மிக உறுதியாக நிற்பவர். 

தமிழ்த் தேசிய அரசியலின்பால் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதல் கரிசனம் உடையவர். 

இவ்வாண்டு பேரெழுச்சியுடன் இடம்பெற்ற எழுகத்தமிழ் நிகழ்வை திறம்பட நடாத்துவதற்கு கடுமையாக உழைத்தவர்களில் இவரும் ஒருவர். 

எந்தவொரு சமூக அரசியல் செயற்பாடாக இருந்தாலும் தூக்கத்தை மறந்து தன் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றும் வல்லமை பொருந்தியவர். 

அலெக்ஸ் கைதின் பின்னணியில் செயற்படுவது யார்?

சமூக விரோதக் குழுக்களை கைது செய்யும் பாணியில் தமிழின உணர்வாளரான அலெக்ஸ் போன்ற இளைஞர்களை  கைது செய்வதன் மூலம் இலங்கை தனது அரச பயங்கரவாதத்தை மேலும் நிலைநிறுத்த முயல்வதாகவே தெரிகிறது. 

பொதுவாகவே அரசியல் சமூக பிரக்ஞை பொருந்திய இப்படியான இளைஞர் சமுதாயம் தான் எமக்கு என்றும் தேவையாக உள்ளது. தமிழ்த் தேசியத்துக்காக போராடி உயிரை மாய்த்த உறவுகளின் நினைவு நாள் நெருங்கி வரும் போது, இப்படியான செயற்பாட்டாளர்களை கைது செய்வதன் மூலம் என்னத்தைச் சாதிக்க முயல்கிறது அரசு. 

இப்படியான கைதுகள் மூலம் எழுக தமிழ் போன்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களைக் கூட ஒடுக்கப் பார்க்கின்றதா அரசு?

ஆவா குழுவை யாழில் உருவாக்கியது இராணுவ உயரதிகாரி ஒருவர் என்பதனை அமைச்சரவை பேச்சாளரே பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில், குறித்த இராணுவ உயரதிகாரியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தாமல், வெறும் காழ்ப்புணர்வு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்  இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதனை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 

ஒரு கட்சியின் அலுவலகத்துக்குள் இருந்து அக் கட்சித் தலைவரின் அனுமதி இல்லாமல் ஒரு கள்ளனைப் பிடிப்பது போல் பிடிப்பதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது. 

ஆவா என்கிற சமூக விரோதக் குழுவுடன் தேவையில்லாமல் ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கு முடிச்சுப் போடுவதன் மூலம் சர்வதேச அரங்கில் ஏதோவொன்றை அரசு நிலைநிறுத்த முயல்வதாக தெரிகிறது. 

பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரே, முதலில் குறித்த இராணுவ உயரதிகாரியை கைது செய்யுங்கள், பின்னர் அதன் முக்கிய புள்ளிகளை கைது செய்யுங்கள், இதனை தற்போது இயக்குபவர்களை கைது செய்யுங்கள். அதனை விடுத்து இந்த சமூகத்துக்கு சேவையாற்றும் மனிதாபிமான சேவையாளனை கைது செய்வதன் மூலம் நல்லிணக்கத்தின் முக்கிய தூணான மீள நிகழாமையை மீண்டும் மீண்டும் உடைத்து சுக்கு நூறாக்காதீர்கள். 

போர் முடிவடைந்ததன் பிற்பாடு இராணுவ உயரதிகாரிகளால் ஆவா குழு என்கிற பெயரில் பல இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டது உண்மை. அதற்காக ஒருவனின் கடந்த வருடங்களை, அவரின் கடந்த கால செயற்பாடுகளை சரியாக ஆராயாமல் கைது செய்வதனை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. 

கடைசியாக அலெக்ஸ்சை பார்த்த நண்பர் ஒருவர் எமக்கு கருத்து தெரிவிக்கையில், அலெக்ஸ்சை ஒரு செயற்பாட்டாளனாகவே எனக்குத் தெரியும்.  கடந்த வாரம் புலம்பெயர் தேசம் ஒன்றிலிருந்து வந்திருந்த உறவு ஒருவர் வறுமையான ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வாங்கி கொடுத்திருந்தார். அதனை அலெக்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொப்பிகள், பேனை, கொம்பாஸ் என்று தனித்தனிப் பைகளில் பொதியிட்டு குறித்த மாணவர்களிடம் வழங்கும் பணியை மத்தியானச் சாப்பாட்டையும் மறந்து  செய்ததை தான் நேரில் பார்த்ததாக கூறுகிறார். 

இப்படி தேவையில்லாத கைதுகள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மேலும் விரக்தியை ஏற்படுத்தி அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லுமே ஒழிய நல்லிணக்கத்திற்கு ஒரு போதும் உதவாது. 

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? என்றொரு முதுமொழி இதற்கு நன்றாக பொருந்தும். அதன் விளக்கம் வருமாறு,  
அம்பு தானாக வில்லிலிருந்து பாய முடியாது. அந்த அம்மை எய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அவன் அம்பை எய்திருக்க அவனை நோகாமல் அம்பை நோவது (குறைகூறுவது) எதனால்? குற்றம் செய்தவன் ஒருவன் இருக்க மற்றவனைக் குறை சொல்லி, அவனை நொந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை.

நன்றி: Newsetv செய்திக்குழுமம்.
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.