Header Ads

ஆவா குழுவினரை ஒடுக்குதல் என்கிற போர்வையில், தமிழ் இளைஞர்களை கைது செய்யும் TID!!!

திமிங்கிலங்களை தவிர்த்து விட்டு நெத்தலிகளை மட்டும் அமுக்கிப் பிடிக்கிறது TID

யாழ். குடாநாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அண்மைய கைது நடவடிக்கைகளை பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகின்றது. 

ஆவா குழுவினரை ஒடுக்குதல் என்கிற போர்வையில் தமிழ்த் தேசியத்துக்காக குரல் கொடுக்கும் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் TID யினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதனை காணக் கூடியதாக உள்ளது. 

வடக்கை அச்சுறுத்தும் ஆவா குழுவின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்களது ஆலோசனைக்கு அமைவாகவே அக்குழு செயற்பட்டுள்ளதாகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். 

ஆனால், இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கடந்த 5 ஆம் திகதி பியகமவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போது, ஆவா குழுவினருக்கும் அரசியல், இராணுவம், புலிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்று கூறியுள்ளார். 

இதேவேளை,  கோத்தபாய ராஜபக்ஸ தனக்கு விசுவாசமான முன்னாள் இராணுவ அதிகாரியொருவரைக் கொண்டே ஆவா குழுவை உருவாக்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கடந்த 2 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கூறியுள்ளார். 

ஆவா, குழுவை கோத்தபாய உருவாக்கியதாக கூறுகிறார் ராஜித, புலிகளுக்கும் ஆவாவுக்கும் தொடர்பில்லை என்கிறார் ருவான். 

ஆனால், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரோ ஆவாவுக்கும், புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக முடிச்சுப் போட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். 

ஆவா குழுவில் இணைந்து தொழிற்பட்ட படு பயங்கர குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றே தெரிகிறது. அவர்களுக்கும் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கும் நேரடித் தொடர்பு இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. 

தமிழ் மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற எழுகதமிழ் ஏற்பாடுகளில் முன்னின்று பங்கேற்ற நான்கு இளைஞர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஐந்து நாட்களில் தமிழ் பிரஜைகள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் தற்போதும் பாடசாலைகளில் கல்வி கற்று வரும் மாணவர்கள் என்பது கவனிப்புக்குரியது. 

மொத்தத்தில் திமிங்கிலங்களை தவிர்த்து விட்டு நெத்தலிகளை மட்டும் அமுக்கிப் பிடிக்கிறது TID

அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுக் கொன்ற பொலிஸார் மீது கூட சாதாரண சிவில் வழக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கூட பயங்கரவாத தடைச் சட்டம் பாயவில்லை. 

சிங்கள அரசும் அதன் இராணுவ இயந்திரத்துக்கும் தமிழ் இளைஞர்கள், வாள்வெட்டுக் குழுக்களாக இருப்பதும், கஞ்சா அடிப்பவர்களாக இருப்பதும், கலாச்சார சீர்கேடு உள்ளவர்களாக இருப்பதும் மிக்க மகிழ்ச்சியான விடயம்.

ஆனால், இந்த இளைஞர்கள் நாளை திருந்தி அரசியல் தெளிவுள்ள, தமிழ்த் தேசியம், சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள இளைஞர்களாக மாறிப் போய்விட்டால் தங்களின் ஆட்டு மந்தை, சலுகை அரசியலை நடாத்த முடியாமல் போய்விடும் என்பதாலேயே இவ்வாறான கைதுகள் சிங்கள அரசால் மிகவும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 

இப்படியான கைதுகள் ஊடாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும், தேசியம் சார்ந்த கட்சிகளின் எதிர்கால செயற்பாடுகளையும் முடக்கி விடலாம் என்று எண்ணுவது ஒரு பகற்கனவே. 
 
அடக்கி ஒடுக்கப்படும் மக்களே, இறுதியில் புதியதோர் வரலாற்றை படைப்பார்கள் என்பதே உலக நியதி. இந்த வரலாற்று உண்மையை இவர்கள் ஏனோ மறந்து விடுகின்றார்கள். 

நன்றி: Newsetv செய்திக்குழுமம்.
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.