Headlines News:
Home » » களவு போகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் (பகுதி 1) - செஞ்சுடர்.சே

களவு போகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் (பகுதி 1) - செஞ்சுடர்.சே

Editor By Yazhpanam on புதன், 1 பிப்ரவரி, 2017 | பிற்பகல் 3:46:00

சட்டத்துக்கு கண்கள் இரண்டு:
உலக சமுதாயங்களுக்கு சாந்தி சமாதானம் சமத்துவத்தை போதித்த புத்தர், 2009 மே க்குப் பின்னர், தமிழர் தாயகத்தில் ஒரு ஆக்கிரமிப்புச் சின்னமாக குடியேறியதைத் தொடர்ந்து, அதே சாந்தி சமாதானம் சமத்துவம் அஹிம்சையைப் போதித்த காந்தியும், சமகாலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஒரு ஆக்கிரமிப்புச் சின்னமாக குடியேறத் தொடங்கிவிட்டார். 

பிரதேசசபைகளின் அனுமதி பெறப்படாமல் ஆங்காங்கே புத்தர் சிலைகளும் - காந்தி சிலைகளும் முளைவிடும்போது பாயாத சட்டம், கடந்த 05.01.2017 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ‘தமிழ்த்தேசிய இனத்தின் மாவீரர்களுக்கு’ கல்லறை கட்டும்போது மட்டும் பாய்ந்திருக்கிறது. 

2016ம் வருடம் ‘மாவீரர் நாள் நவம்பர் 27’ அன்று, குறித்த கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில், இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசிய நினைவேந்தல் பாடலை பகிரங்கமாக ஒலிபரப்பி பொதுச்சுடர் ஏற்றும்போது பாயாத சட்டம், ‘அந்த மாவீரர்களுக்கு உரித்துடைய உறவினர்கள்’ மீது, அதே துயிலுமில்லத்தில் வைத்து பாய்ந்திருக்கிறது. 

இவ்விரண்டு சம்பவங்களையும் ஊகித்துக்கொண்டால் மாத்திரமே, கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல விவகாரத்துக்குப் பின்னால் உள்ள நுண்ணிய அரசியலை, எவரும் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியும். 

அரசியல் திருட்டு:
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 2009 மே மாதம் இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், மாவீரர் துயிலுமில்ல நிலங்களை ஆக்கிரமித்து குடியேறிய சிறீலங்கா அரச படைகள், மைத்திரி - ரணில் புதிய கூட்டாட்சி அமைந்ததை தொடர்ந்து, ஒருசில துயிலுமில்ல நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

சிறீலங்கா அரச படைகள் வெளியேறிச் சென்றதிலிருந்து, ‘மாவீரர் துயிலுமில்ல நிலங்களை பிரதேசசபைகளிடம் பாரப்படுத்த வேண்டும்’ என்று யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தொடர்ச்சியாக வலியுறுத்தியே வந்தார். அவரது இந்த பேச்சுக்குப் பின்னால் உள்ள நூதனமான அரசியல் திருட்டு, கடந்த 05.01.2017 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பூதாகரமாக வெளிக்கிளம்பியுள்ளது.

ஏலவே ‘பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்டத்துக்குள் ஒரு குறுநில மன்னர் போல தொழில்பட்டு வருகின்றார்’ என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் இதர கட்சிகளின் உறுப்பினர்களும் பலமாக குற்றம் கூறிவரும் நிலையில், சிவஞானம் சிறீதரன் ‘மாவீரர் துயிலுமில்லங்களை காலம் முழுவதும் குத்தகைக்கு எடுத்து வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முயற்சிக்கின்றார். மாவீரர் துயிலுமில்லங்களை மீளவும் புனரமைக்கும் நடவடிக்கை எனும் பெயரில் புலம்பெயர் தமிழர் தேசங்களில் நிதி சேகரிக்கின்றார்’ என்று, மாவீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும், முன்னாள் போராளிகளான மாவீரர்களின் நண்பர்களும் காரசாரமாக குற்றம் கூறத்தொடங்கிவிட்டனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமலும் இல்லை. ‘மாவீரர் துயிலுமில்லங்கள் புனரமைப்பு நடவடிக்கை எனும் பெயரில், பத்து இலட்சம் வரையான நிதியை சேகரித்துள்ளதாக’ சிவஞானம் சிறீதரன் தன்னிடம் கூறியதாக, வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கல்லறை கட்டும் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளியிடம் தெரிவித்தார் என்ற தகவல் ஒன்று உண்டு.

‘முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்’ எனும் நடவடிக்கையின் பெயரால் குறித்த பாராளுமன்ற உறுப்பினரால் புலம்பெயர் தமிழர் தேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதி, நியாயமாக தமக்கு கிடைக்கப்பெறவில்லை என்று குற்றம் கூறியும், தமது குடும்ப பொருளாதாரத்தை கொண்டு நகர்த்த வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தியும், கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இராணுவ முகாமை முற்றுகையிட்டு, கடந்த 02.01.2017 அன்று அழுத்தப் போராட்டம் ஒன்றை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் நடத்தியிருந்தமையும் இங்கு கவனிப்புக்குரியது.     

ஏகபோக உரிமை:
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களே, உள்ளூராட்சி தேர்தல்கள் ஊடாக கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் சிறீதரனின் மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்களாகவும், இணைப்பாளர்களாகவும், இளைஞர் அணி செயல்பாட்டாளர்களாகவும் உள்ளனர். இதைவிடவும், அரச உத்தியோகத்தரான குறித்த பிரதேசசபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன், சிறீதரனின் தனிப்பட்ட ஊடகப்பணியாளரான சகாதேவன் விமல்ராஜ் என்பவரை அரச சொத்துடைமையான பிரதேசசபைக்கு உரித்துடைய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கூடவே பயணித்துள்ளார் என்றால், கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சிவஞானம் சிறீதரன் அரசியலில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துகின்றார்? என்பதை ஊகிப்பதற்கு இந்தச் சம்பவமே நல்ல எடுகோள்.   

இவ்வாறு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகாக்களால் நிறைந்து வழியும், தனிநபர் அரசியல் ஆதிக்கம் புகுந்து விளையாடும், கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையிடம் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை பொறுப்புக்கொடுத்தால் நிலைமை என்னவாகும்? சாதாரண பொதுமக்களோ அன்றி சிவில் சமுக பொது அமைப்புகளோ தாங்கள் நினைத்தவாறு உள்பிரவேசித்து, தாங்கள் விரும்பியவாறு நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சிகளை அனுட்டிக்க முடியாதவாறு குறித்த பிரதேசசபையால் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும், தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும். மாறாக குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கே ஏகபோக உரிமை வழங்கப்படும்.  

கூடவே சகல பிரதேசசபைகளும் ‘அரச திணைக்களம்’ என்ற வரம்புக்குள் உள்ளது என்பதையும் கூடுதல் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஆதலால், ‘துயிலுமில்லங்களை பிரதேசசபைகளிடம் பாரப்படுத்த வேண்டும்’ என்ற முன்மொழிவுகள் அபாயகரமானவை. இதுபோதாதென்று தமிழ்த்தேசியத்துக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ள வேறு கட்சிகள் உள்ளூராட்சி தேர்தல்களினூடாக பிரதேசசபைகளை கைப்பற்றினால் உறவுகளின் நிலைமை அந்தோ பரிதாபம் தான்!

இத்தகையதொரு அரசியல் சூழமைவில், கடந்த 05.01.2016 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்தது என்ன?

மாவீரர்கள்: தனிநபர் சொத்தா? தேசிய சொத்தா?
அன்று காலை 9 மணி 30 நிமிடத்துக்கு, கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லம் அமைந்துள்ள வளாகமும் அதனை அண்மித்த பகுதிகளும் ஒருவகையான பதட்டத்தோடும் பரபரப்போடும் காணப்படுகின்றன. பிரதான வீதியால் போவோர் வருவோர் எனப்பலரும் துயிலுமில்லத்தை புதினம் பார்க்கத் தொடங்கி விட்டனர். செங்கற்கள், சீமெந்து பைகள், மணல் என்று கட்டடப்பொருள்கள் லேண்ட் மாஸ்டரில் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன.  

தொடக்கத்தில், துயிலுமில்ல வளாகத்துக்குள் என்ன நடக்கிறது? யார் இவர்கள்? என்பது தொடர்பில் பொதுமக்களிடையே ஒருவித குழப்பமும், தெளிவின்மையும் உணரப்பட்டது.  

‘முன்னாள் போராளிகளில் சிலர் துயிலுமில்ல வளாகத்துக்குள் உள்பிரவேசித்து, மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதற்காக பொதுக்கல்லறை ஒன்றை கட்டும் ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.’ 

இந்தத் தகவல், கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் செவி வழிச் செய்தியாக மெல்ல மெல்லப் பரவுகிறது. ஆமை வேகத்தில் ஆளுக்கு ஆள் பகிரப்பட்டுக்கொண்டிருந்த இந்தத் தகவல், இளசுகளின் பேஸ்புக் - டுவிட்டர் பதிவுகளால் இருபத்து நான்கு குதிரை வலு இயந்திரம் பூட்டிய கடல் கரும்புலிகளின் இடியன் படகு போல வேகம் எடுக்க, இராணுவப் புலனாய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் கனகபுரம் துயிலுமில்லத்தை சூழ்ந்து கொள்ளுகின்றார்கள். 

மெய்யாகவே மாவீரர்கள், ‘எனது கிராமத்தின், எனது பிரதேசத்தின், எனது மாவட்டத்தின், எனது சமுகத்தின், எனது மதத்தின் விடுதலை’ என்று குறுகிய வட்டத்துக்குள் சிந்தித்தவர்கள் அல்லர். இவற்றைக் கடந்து ‘நமது தேசம், நமது இனம், நமது மொழி’ என்று தேசிய அளவில் பரந்துபட சிந்தித்தவர்களை குறிப்பிட்ட சிறு குழுவோ, தனிப்பட ஒரு அமைப்போ உரிமை கொண்டாடிவிட முடியாது. 

ஆதலால், நினைவுகூரலுக்காக பொதுக்கல்லறை கட்டும் செயலில் ஈடுபட்டிருந்தவர்கள், இந்த விடையம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் போராளி குடும்பங்களுடனும், சிவில் சமுக பொது அமைப்புகளுடனும் திறந்தவெளி கலந்துரையாடலை நடத்தி, கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு, இந்தப் பணிக்கென சிறப்புக்குழுவொன்றை நியமித்து, அந்த நடவடிக்கை குழுவுக்கு மக்கள் மன்றத்தில் வைத்து அதிகாரங்களை வழங்கிச் செயல்பட்டிருக்க வேண்டும். இதுவே ஏதேச்சதிகாரம் அற்றதும், ஜனநாயக பன்மைத்துவத்தின் சமவாய்ப்பாகவும் இருந்திருக்க முடியும். அப்படி நடக்காதது ஒரு பெருங்குறையே. 

ஊடக விளம்பர மயக்கம்:
பொதுக்கல்லறைக்கான முதலாவது அடிக்கல்லை, கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல பராமரிப்பு பொறுப்பாளராக இருந்த தியாகு அண்ணன் சம்பிரதாயபூர்வமாக நாட்டிவைப்பதே ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கமைப்பாக இருந்தது. அவரது வருகைக்காக ஏற்பாட்டாளர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தார்கள். அவருக்காக முச்சக்கரவண்டி போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டிருந்தது. அரசியல் அழுத்தம் காரணமாகவோ அன்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவோ ‘அவர் கலந்துகொள்ளமாட்டார்’ என்ற தகவல் மட்டும் தெரியப்படுத்தப்பட்டது.  

இந்தநிலையில் காலை 12.30 மணியளவில் பொதுக்கல்லறைக்கான முதலாவது அடிக்கல்லை, முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி கு.பிரபாகரன் (எழிலன்) சம்பிரதாயபூர்வமாக நாட்டிவைக்க, அவரை வழித்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தவர்களும் அடிக்கற்களை நாட்டினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்த ஜனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி இளங்கதிர் என்பவர், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களிடம் ‘தமது கட்சியே பொதுக்கல்லறை கட்டும் பணியை முன்னெடுத்திருப்பதாக’ பேட்டி கொடுக்கிறார். அவரது இந்தப் பேட்டிக்கு, குறித்த பணியை முன்னெடுத்திருந்த ஜனநாயக போராளிகள் கட்சியைச் சாராத முன்னாள் போராளிகள் கடுமையான ஆட்சேபனையையும், கண்டனத்தையும் தெரிவிக்கின்றனர். அவரது பேட்டியை பிரசுரிப்பதையோ, ஒளிபரப்புவதையோ தவிர்த்துக்கொள்ளுமாறு ஊடகவியலாளர்களிடம் வினயமாக கேட்கின்றனர்.  

யாரோ ஒருவரதோ பலரதோ பெரும் உழைப்பில், அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு நடைபெறும் ஒரு வேலைத்திட்டத்தில், சிறுதுளி வியர்வை சிந்தாமல், ஒரு சதம் சில்லறைக்காசு கூடச் செலவு செய்யாமல், வருகை தந்து கேமராக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, மற்றவர்களின் உழைப்பைச்சுரண்டி உரிமை கொண்டாடி ஊடகங்களுக்கு பேட்டிக்கொடுக்கும் இத்தகைய அநாகரிக அரசியல் பழக்க வழக்கத்தை, மிகவும் மோசமான மனித நடத்தையை, ஜனநாயக போராளிகள் கட்சியினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் இருந்தே கற்றுத்தேறியிருக்க வேண்டும். தமிழர்களுக்கான அரசியலில் தலைவர்கள் எவ்வழியோ, அவ்வழியே இவர்களும்.  

செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் அவ்விடத்திலிருந்து புறப்படுகின்றார்கள். இராணுவ புலனாய்வாளர்கள் பலவித கோணங்களிலும் ஒளிப்படங்கள் எடுக்கும் தமக்கு பழக்கப்பட்ட பணியை, தமது வழமையான (மிரட்டும்) பாணியில் தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றார்கள். எதற்கும் அசராமல் பொதுக்கல்லறை கட்டும் பணி தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதுவரைக்கும் அவ்விடத்தில் எத்தகைய குழப்பங்களும் நிகழவில்லை. 

சிறீதரன் ஏவிய அம்பு:
நண்பகல் ஒரு மணி 40 நிமிடத்துக்கு, கரைச்சி பிரதேசசபைக்கு உரித்துடைய பிஎவ்-2343 இலக்கத்தகடு பொருத்திய வாகனத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த மற்றும் சிறீதரன் எம்.பியின் ஊடகப்பணியாளர் சகாதேவன் விமல்ராஜ் உடன் வந்து இறங்குகிறார் கரைச்சி பிரதேசசபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன். 

சுயாதீன ஊடகவியலாளர்கள் இல்லாத ஒரு சூழலில் நடக்கப்போகும் விபரீதத்தை ஊகித்துக்கொண்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அ.ஈழம் சேகுவேரா, முந்திக்கொண்டு தனது கைப்பேசியிலுள்ள  வீடியோ கேமராவை ஒன் செய்து அங்கு நடப்பவற்றை காணொளியாக பதிவு செய்கிறார். சிறீதரன் எம்.பியின் ஊடகப்பணியாளர் சகாதேவன் விமல்ராஜ், என்ன அறிவுறுத்தப்பட்டு அழைத்துவரப்பட்டாரோ, அதற்கமைய அவரும் தனது கேமராவில் அங்கு நடப்பவற்றை பதிவு செய்துகொண்டிருந்தார்.  

எனது சுடலை:
வந்ததும் வராததுமாக கம்சநாதன், ‘இங்கு என்ன செய்கிறீர்கள்?’ என்று அதிகாரத்தோரணையில் கேட்கிறார். அதற்கு, பொதுக்கல்லறை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான இலங்கை தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணித்தலைவரான த.ஈசன் என்பவர், ‘எனது குடும்பத்தில் அப்பா உள்பட நால்வர் மாவீரர். மூவர் போராளி. ஆதலால் மாவீரர்களின் உறவினர்களாகிய நாங்கள், ஒன்றுகூடி மாவீரர்களை நினைவுகூர்ந்து வழிபடுவதற்காக பொதுக்கல்லறை ஒன்றை கட்டிக்கொண்டிருக்கின்றோம்.’ என்று பதில் கூறுகின்றார். 

‘இப்பிடி இதில நீங்கள் கட்ட முடியாது.’ என்று கம்சநாதன் மறுப்புக்கூற, ‘இதைச்சொல்ல நீங்கள் யார்?’ என்று ஏற்பாட்டாளர்கள் மறுகேள்வி கேட்க, அதற்கு கம்சநாதன், ‘நான் பிரதேசசபை செயலாளர். இது எனது சுடலை. எனது பொறுப்பிலுள்ள சுடலையில் எனது அனுமதி பெறாமல், நீங்கள் இங்கு எந்தக் கட்டுமானப்பணிகளிலும் ஈடுபட முடியாது.’ என்று கூறுகின்றார். 

மாவீரர் துயிலுமில்லத்தை ‘சுடலை’ என்று கம்சநாதன் விளித்துக்கூறியதுதான் தாமதம், அது ஏற்பாட்டாளர்களின் மண்டைக்குள் ‘சுளீர்’ என்று வலித்திருக்க வேண்டும். தொடங்கியது கடும் வாய்த்தர்க்கம்.

இதுவா ஆண்மைத்தனம்?  
‘இராணுவத்தினர் துயிலுமில்லத்தை இடித்தழிக்கும்போதும், கட்டடங்களை கட்டும்போதும் பிரதேசசபையின் செயலாளராக இருந்தவர் நீங்கள் தானே. அப்போது நீங்களும் உங்கள் சட்டங்களும் எங்கே போயின? இராணுவத்தினரிடம் உங்கள் ஆண்மைத்தனத்தை காட்டாமல் பாதிக்கப்பட்ட மக்களிடமா காட்டுகின்றீர்கள்? நீங்கள் கூறுவதுபோல பார்த்தால், இராணுவம் உங்களிடம் முன்அனுமதி எடுத்தா இங்கு கட்டடம் கட்டியது? அப்படியென்றால், எங்கே இராணுவத்தினர் விண்ணப்பித்த அனுமதிக்கடிதத்தை காட்டுங்கள். இப்பவே பகிரங்கப்படுத்துங்கள்.’ என்று ஏற்பாட்டாளர்கள், கேள்விகளால் கம்சநாதனை வறுத்தெடுத்தனர்.

துரோகிகள்: வெளியில் அல்ல, உள்ளே!
கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கம்சநாதன், ‘பெயரைச் சொல்லும். ஐ.சி (அடையாள அட்டை) நம்பரைச் சொல்லும்’ என்று கேட்க, ‘நீர் யார் ஐ.சிய கேட்க? நீர் என்னப் பதிவெடுக்க பொலிஸ்ஸோ? இதோடா அப்பவந்து நடத்தும் பார்ப்பம். இவ்வளவு நேரமும் எங்களுக்கு இராணுவமோ, பொலிஸ்ஸோ, சீ.ஐ.டியோ கரைச்சல் தரேல்ல. நீர் என்ன சிறீதரன் எம்.பி ஏவி விட்டு எங்களுக்கு குடைச்சல் தர வாரீர்ரோ? எங்களுக்கு எல்லாம் தெரியும். சிறீதரன் இல்ல, வேறு யார் வந்தும் இங்கு ஒன்டும் புடுங்க முடியாது. துரோகிகள் வெளியில இல்ல. எங்களுக்கு உள்ளத்தான் இருக்கிறாங்கள். கல்லறை கட்டுறது அவங்களுக்கு (சிறீலங்கா அரசுக்கு) இல்ல, உங்களுக்குத்தான்டா பிரச்சினை. ஐம்பதாயிரம் மாவீரர்களில ஒரு பிள்ளையையாவது மாவீரனாய் கொடுத்தனீயாடா? இல்லாட்டி, உங்களுக்கு எங்கடா புரியப்போகுது எங்கட வலி? நாங்கள் சண்டை பிடிச்சு செத்த இடமடா இது. எதைப்பற்றியும் யோசிக்கமாட்டம்.’ என்று கூறியவாறு, கை முஸ்டியை முறுக்கிக்கொண்டு ஈசன் என்பவர் கம்சநாதனுடன் மோதலுக்குத் தயாராக, கனகபுரம் துயிலுமில்ல வளாகம் கலவரபூமி ஆகிவிட்டது.  

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த, கைகலப்பு ஏற்படாதவாறு இருதரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றார். ‘இப்ப கட்டுறத நிறுத்துங்க. அவர் பொதுக்காணி என்று சொல்லுறார். ஆனா உங்க பக்கம் நியாயம் இருக்கு சரியா. நாளைக்கு கடிதம் எழுதிக்கொண்டு வாங்க, நான் பொறுப்பு நிக்கிறது. என்ன நம்புங்க. நான் உங்களுக்கு கட்டுறதுக்கு செயலாளரிட்ட அனுமதி கேட்டு வாங்கித்தாரது.’ என்று, பொய் வாக்குறுதிகளை கதை கதையாய் அள்ளி விடுகின்றார். ஆனந்தவின் வார்த்தை ஜாலங்களை நம்பிப்பணிந்து போக ஏற்பாட்டாளர்கள் தயாரில்லை. 

ஆத்மா மன்னிக்காது:
இந்தநிலையில், நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு பெறப்போவதாக கம்சநாதன் மிரட்டுகின்றார். அதற்கு முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி கு.பிரபாகரன் (எழிலன்), ‘மாவீரர்களுக்காக நீதிமன்றப்படி ஏறவும் நாங்கள் தயார். போய் அதைச்செய்யும்.’  என்று பதில் கூறுகின்றார். ‘சிறீதரன் உசுப்பிவிட மக்களின்ட உணர்வு சம்பந்தப்பட்ட விசயத்தோட விளையாடிட்டீயள். இதோட சம்பந்தப்பட்டுள்ள சகலருக்கும் தகுந்த தண்டனை கிடைக்கும். மாவீர ஆத்மாக்கள் உங்களை சும்மா விடப்போவதில்லை. அவர்கள் மன்னிக்கமாட்டார்கள். எக்காலத்துக்கும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. நீங்களாகவே அழிஞ்சு இருந்த இடம் தெரியாமல் போகப்போறீயள். அதுக்குத்தான் அலுவல் பார்த்திருக்கிறீயள்.’ என்று, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார் எச்சரிக்கின்றார். 

பொதுக்கல்லறை கட்டும் பணியை தடுத்து நிறுத்துவதற்கு எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய, அவமானத்தால் செத்துப்பிழைத்து கம்சநாதன் குழுவினர் துயிலுமில்ல வளாகத்திலிருந்து வெளிக்கிளம்பிச் செல்கின்றனர். 

தொடரும்...Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger