Headlines News:
Home » » களவு போகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் (பகுதி 2)

களவு போகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் (பகுதி 2)

Editor By Yazhpanam on செவ்வாய், 14 பிப்ரவரி, 2017 | முற்பகல் 12:34:00

களவு போகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் (பகுதி 2) செஞ்சுடர்.சே

பொதுக்கல்லறை கட்டும் பணியை தடுத்து நிறுத்துவதற்கு எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய, அவமானத்தால் செத்துப்பிழைத்து கம்சநாதன் குழுவினர் துயிலுமில்ல வளாகத்திலிருந்து வெளிக்கிளம்பிச் செல்கின்றனர். 

கம்சநாதன் குழுவினர் வெளியேறிச்சென்ற சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், வெள்ளை நிறக்கார் ஒன்று சடுதியாக துயிலுமில்ல வளாகத்துக்குள் நுழைகிறது. காருக்குள் இருந்து இறங்குகின்றார் கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொஹான் ராஜபக்ஸ. 

துயிலுமில்ல வளாகத்துக்குள் முன்னர் நடந்த கலவரம் தொடர்பில் அவருக்கு உள்ளவாறு தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் ராஜபக்ஸவும், ‘நாயைத் தடவிக்கொடுத்துக்கொண்டே கல்லைத்தேடும்’ ராஜதந்திரப்பாணியில் ஏற்பாட்டாளர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார். 

‘நாட்டில் நீண்ட நெடிய யுத்தம் நடைபெற்றதற்குப் பின்னர் சமாதானம் நிலவி வருகின்றது. யுத்தத்தில் இறந்த உங்கள் பிள்ளைகளை உறவுகளை, நினைவுகூரவும் வழிபடவும் உங்களுக்கு உரிமை உண்டு. உங்களின் உணர்வுகளை நான் விளங்கிக்கொள்கிறேன். ஆனால் இந்தக் காணி பிரதேசசபைக்கு உரித்துடைய காணி. பிரதேசசபையின் அனுமதி இன்றி இவ்வாறு எந்தவிதமான பணிகளிலும் ஈடுபட முடியாது.’ என்று கூறுகின்றார். 

இதற்கு ஏற்பாட்டாளர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். ‘இந்தக்காணி பொதுக்காணி. இன்னும் பிரதேசசபையிடம் பாரப்படுத்தப்படவில்லை. அப்படியென்றால் காணி உரித்து பத்திரத்தை செயலாளர் கம்சநாதன் காட்ட வேண்டும்.’ என்று கூறுகின்றனர். 

‘எதுவானாலும், கொழும்பு உள்பட நாட்டின் சகல நகரசபைகள் பிரதேசசபைகளிலும் உள்ளது போல, மயானங்கள் மைதானங்கள் அவர்களின் (பிரதேசசபை) பொறுப்புக்கு கீழ் தான் வரும். உங்களின் உறவுகளைப் போலவே ஏனையவர்களின் உறவுகளும் இந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளார்கள். இந்தக் காணிக்குள் சட்டவிரோத செயல்பாடு இடம்பெறுவதாக பொதுமக்களிடமிருந்து 119 தொலைபேசி அழைப்பு ஊடாக எங்களுக்கு முறைப்பாடு கிடைச்சிருக்கு.’ என்கிறார் றொஹான் ராஜபக்ஸ. 

‘கடந்த வருடம் மாவீரர் நாளன்று இதே துயிலுமில்லத்தில் சிறீதரன் எம்.பி விளக்கேற்றும் போதும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பாடலை ஒலிக்க விடும்போதும் உங்களுக்கு 119 க்கு முறைப்பாடு அழைப்பு கிடைக்கவில்லையா?’ என்று ஏற்பாட்டாளர்கள் றொஹான் ராஜபக்ஸவிடம் மறுகேள்வி கேட்டுத் தங்கள் பக்க நியாயங்களை எடுத்துரைக்கின்றனர். (றொஹான் ராஜபக்ஸ சிரிக்கிறார்) 

‘எல்லாவற்றையும் நான் விளங்கிக்கொள்கிறேன். முறைப்பாட்டின் அடிப்படையில் உங்களை கைதுசெய்துகொண்டு செல்ல முடியும். ஆனால் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. இப்போதைக்கு இந்தப்பணியை நிறுத்துங்கள். மாலை 4.00 மணிக்கு நீங்கள் பொலிஸ் நிலையத்துக்கு வாருங்கள். அரசாங்க அதிபரும், பிரதேச செயலாளரும் பிரதேசசபை செயலாளரும் வருவார்கள். எல்லோருமாக சேர்ந்து பேசி ஒரு முடிவை எடுக்கலாம்.’ என்று கூறிவிட்டு புறப்பட்டுச்செல்கின்றார் றொஹான் ராஜபக்ஸ. 

பொதுக்கல்லறைக் கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டு, பொலிஸார் சகிதம் எல்லோருமாக வெளியேறிச்செல்கின்றனர். 

கிளிநொச்சி பொலிஸ் நிலையம்:
மாலை 4.00 மணி. ஏற்பாட்டாளர்கள் சமுகமளித்திருந்தனர். றொஹான் ராஜபக்ஸ கூறியது போல அரசாங்க அதிபரோ, பிரதேச செயலாளரோ சமுகமளித்திருக்கவில்லை. கிளி.கரைச்சி பிரதேசசபையின் செயலாளர் கம்சநாதன் மட்டும் சமுகமளித்திருந்தார். 

இருதரப்பையும் கலந்துபேசி சுமுகமான தீர்வுக்குப் போகுமாறு கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த கேட்கின்றார். 

அத்தகையதொரு தீர்வுக்குச் செல்ல கம்சநாதன் ஓரளவுக்கு மனம் விரும்பினாலும் கூட, அவர் தனக்கு இருக்கக்கூடிய சிறப்புரிமையைப் பயன்படுத்தி நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஏலவே செய்திருந்தமையினால், அதிலிருந்து அவரால் விடுபட்டுவர முடியவில்லை. ஆதலால் அவர் முறைப்பாடு பதிவு செய்துதான் ஆகவேண்டும் என்பதில் உறுதியாகவிருக்கின்றார். 

‘எந்த அடிப்படையில் முறைப்பாடு பதிவு செய்யப்போகின்றீர்கள்?’ என்று ஏற்பாட்டாளர்கள் கம்சநாதனிடம் கேட்கின்றனர். 

‘தான் பிரதேசசபை ஒன்றின் செயலாளர் என்று தெரிந்திருந்தும், தனது கடமையை செய்ய இடையூறு விளைவித்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும்’ என்று கம்சநாதன் கூறுகின்றார். 

நீங்கள் பிரதேசசபையின் செயலாளர் என்பது தமக்கு தெரியாது என்றும், சிறீதரன் எம்.பியின் தனிப்பட்ட ஊடகப்பணியாளரை உங்கள் வாகனத்தில் ஏற்றி வந்ததால், நீங்கள் சிறீதரன் எம்.பியின் கையாள் என்று தாங்கள் நினைத்ததாகவும், ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். 

தினக்குரல் செய்தியாளரா? சிறீதரனின் பணியாளரா?
அவர் சிறீதரன் எம்.பியின் பணியாளர் என்பது தனக்கு தெரியாது என்றும், தான் சம்பவம் அறிந்து கனகபுரம் துயிலுமில்லத்துக்கு வரும் வழியில் வேலமாலிகிதன் இடைமறித்து வாகனத்தில் ஏற்றி விட்டதாகவும், அவரை தனக்கு தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளராகவே தெரியும் என்றும், கம்சநாதன் கூறுகின்றார். 

‘வேலமாலிகிதன் யார்? அவர் சிறீதரன் எம்.பியின் மாவட்ட அமைப்பாளர். நீங்கள் என்ன குழந்தை பிள்ளைக்கு கதை சொல்வது போல கூறிக்கொண்டிருக்கிறீயள்?’ என்று ஏற்பாட்டாளர்கள் சினக்க, பொலிஸ் நிலையத்துக்குள்ளும் தொடங்கியது கடுமையான வாய்த்தர்க்கம். 

‘இவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வவுனியா, முல்லைத்தீவு போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருக்கின்றனர்.’ என்று ஆனந்தவிடம் முறையிடுகின்றார் கம்சநாதன். 

‘மாவீரர்கள் ஒட்டுமொத்த தேசம் என்று சொல்லிப்போய் மடிந்தவர்கள். தயவுசெய்து அந்த மாவட்டம் இந்த மாவட்டம் என்று இப்பிடி பிரிச்சுப்பேசி மாவீரர்களை சிறுமைப்படுத்த வேண்டாம்.’ என்று கம்சநாதனுடன் ஏற்பாட்டாளர்கள் சண்டையிடுகின்றனர். 

ஒருவாறு இருதரப்பையும் சமரசப்படுத்திவிட்டு, ‘முறைப்பாட்டுக்கு உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா?’ என்று கம்சநாதனிடம் ஆனந்த கேட்கின்றார். 

கம்சநாதன் தனது கையடக்க தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்துகின்றார். மறுநிமிடமே, சிறீதரன் எம்.பியின் ஊடகப்பணியாளர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்து தனது கமராவில் பதிவுசெய்த காட்சிகளை பொலிஸாருக்கு காண்பிக்கின்றார். 

குறித்த காணொளியை ஆதாரமாக வைத்துக்கொண்டு பொலிஸார் ஏற்பாட்டாளர்கள் அறுவர் மீது குற்றப்பத்திரிகை பதிவுசெய்துவிட்டு, மறுநாள் (06.01.2017 அன்று) காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி நீதிமன்றத்துக்கு வருகை தருமாறு அறிவுறுத்தி விடுகின்றனர். 

கிளிநொச்சி நீதிமன்றம்: 
மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில், நீதிமன்றத்துக்கு சமுகமளிக்கின்றனர் குற்றம் சாட்டப்பட்ட தரப்பாகிய ஏற்பாட்டாளர்கள். கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் 11.42 மணிக்கு வழக்கு விசாரணைக்காக (வழக்கு எண்: பீ/14/17) எடுத்துக்கொள்ளப்படுகின்றது. வழக்கு தொடுநர் சார்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். 

ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழக்காடுவதற்காக, சட்டத்தரணிகள் ம.கிறேஷியன், சி.சிவபாலசுப்பிரமணியம் ஆகியோர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், மூன்றாவதாக சட்டத்தரணி திருமதி விஜயராணி சதீஸ்குமாரும் இணைந்து கொள்கின்றார். (நீதிமன்ற அமர்வு முடிவுக்குப் பின்னர் அவரிடம் இதுதொடர்பில் விசாரித்தபோது, ஏற்பாட்டாளர்கள் சட்;டத்தரணிகளை ஒழுங்கு செய்திருக்கிறார்களோ இல்லையோ, எதுவாயினும் இந்த வழக்கில் ஆஜராகி அவர்களுக்காக வாதாடுமாறு வடக்கு மாகாண நன்னீர் மீன்பிடி, போக்குவரத்துறை அமைச்சர் ப.டெனிஸ்வரன் தன்னிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.)

வழக்காட்டம் தொடங்கிற்று. பொலிஸார் நேற்றைய நாள் (05.01.2017) வியாழக்கிழமை அன்று, கனகபுரம் துயிலுமில்ல வளாகத்துக்குள் வைத்து இனிப்பு இனிப்பாக பேசிய மக்களுக்குள்ள வழிபாட்டுச்சுதந்திரம் - ஜனநாயகம் ஏனோ, இன்று (06.01.2017) வெள்ளிக்கிழமை அவர்களுக்கு திடீரென்று கசக்கத்தொடங்கியிருந்தது. முற்றிலும் நேர்மாறாக நீதிமன்ற கட்டடத்துக்குள் நடந்துகொண்டனர். நேற்றைய நாள் அதிகம் அதிகமாக மென்சக்தி பேசியவர்கள் இன்று எவ்வளவுக்கு எவ்வளவு வன்சக்தியை பிரயோகிக்க முடியுமோ? அதுவரை முயன்றுகொண்டிருந்தனர். பொலிஸாரின் சகல பிரயத்தனங்களையும் சட்டத்தரணிகள் தமது வாதாடும் திறமையால் அடித்து நொருக்கித் தள்ளிக்கொண்டிருந்தனர். 

பயங்கரவாத தடைச்சட்டம் பாய வேண்டும்:
‘நாட்டுக்குள் தடைசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத இயக்கத்துக்கு இவர்கள் கல்லறை கட்ட முயன்றுள்ளனர். இந்த வழக்கை பயங்கரவாத தடைச்சட்ட வழக்குக்கு மாற்றுமாறு’ நீதிபதி ஆனந்தராஜாவிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

பொலிஸாரின் இந்த கோரிக்கைக்கு, ‘சாதாரண குற்றவியல் சட்டத்துக்கு கீழ் பதிவாகியுள்ள குறித்த வழக்கை, பயங்கரவாத தடைச்சட்ட வழக்காக மாற்ற முடியாது.’ என்று சட்டத்தரணிகள் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தனர். 

சட்டப்பிரச்சினையல்ல, மனித உரிமை:
இந்தநிலையில் நீதிபதி ஆனந்தராஜா பொலிஸாரைப் பார்த்து, ‘இதை ஒரு சட்டப்பிரச்சினையாக பார்க்காதீர்கள். இதை ஒரு மனித உரிமை சார்ந்த பிரச்சினையாகப் பாருங்கள். யுத்தத்தில் இறந்த தங்களது உறவுகளை நினைவுகூரவும், வழிபடவும், கல்லறை கட்டவும், மலர் தூவவும், நினைவுச்சிலையோ தூபியோ எழுப்பவும் அவர்களது உறவினர்களுக்கு உரிமை உண்டு. உலகத்தில் உள்ள எல்லாச் சமுகங்களுக்கும் இந்த மனித உரிமை வாய்ப்பு உண்டு. உங்கள் வீட்டில் உங்கள் அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, தம்பி தங்கை என்று யாராவது இறந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதுபோல மனிதாபிமானத்துடன் இந்த பிரச்சினையையும் அணுகுங்கள். அவர்களின் உணர்வை, அவர்களுக்குள்ள உரிமையை புரிந்துகொள்ளுங்கள்.’ என்று, நாட்டில் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள வழிபாட்டுச்சுதந்திரம், நினைவுகூரல் சுதந்திரம் தொடர்பில் மிகவும் தெளிவானதொரு விளக்கத்தை பொலிஸாருக்கு போதித்தார். 

தொடர்ந்து, ‘இவர்கள் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது?’ என்று பொலிஸாரை நோக்கி மறுகேள்வி எழுப்பினார். 

இந்த கேள்விக்கு பொலிஸார், ‘அரச உத்தியோகத்தரான பிரதேசசபையின் செயலாளரை கடமையை செய்யவிடாது இடையூறு விளைவித்துள்ளனர். தகாத வார்த்தைகளாலும் ஏசியுள்ளனர்.’ என்று கூற, ‘வழக்கு தொடுக்கப்பட்டுள்ள விடையத்தை பிரஸ்தாபிப்பதை தவிர்த்துவிட்டு ஏன் சம்பந்தமில்லாத விவகாரத்தை (பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில்) இங்கு பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்.’ என்று பொலிஸாரை கண்டித்துவிட்டு, ‘எங்கே அவர்? (பிரதேசசபையின் செயலாளர் கம்சநாதன்) என்று நீதிபதி ஆனந்தராஜா கேட்கின்றார். 

கம்சநாதன் நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருக்காத நிலையில், ‘உடனடியாகச் சென்று அவரை அழைத்து வருமாறு’ பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, வழக்கை சிறிது நேர காலத்துக்கு ஒத்திவைக்கின்றார். 

11.58 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. கம்சநாதன் முன்னிலையாகியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட தரப்பாகிய ஏற்பாட்டாளர்களை நோக்கி, ‘இவர் தனது கடமையைச் செய்ய ஏன் இடையூறு விளைவித்தீர்கள்? என்று கேட்கின்றார் நீதிபதி ஆனந்தராஜா. 

இந்த கேள்விக்கு சட்டத்தரணிகள், ‘அரச உத்தியோகத்தரான இவர், அரச வாகனத்தில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது தனிப்பட்ட ஊடகப்பணியாளரை கூடவே ஏற்றிச்சென்றுள்ளார். ஆதலால் இவர்கள், கம்சநாதனை குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் செயல்பாட்டாளர் என்று நினைத்துவிட்டனர்.’ என்று தெரிவித்தனர். 

அரச பணி நீக்கத்துக்கு அலுவலா? 
நீதிபதி ஆனந்தராஜா கம்சநாதனை நோக்கி, ‘அவ்வாறு ஏற்றிச்சென்றீரா?’ என்று கேட்கின்றார். ‘ஆமாம்’ என்று கம்சநாதன் பதிலளிக்க, ‘நீர் ஒரு அரச உத்தியோகத்தர். அதுவும் ஒரு பிரதேசசபையின் செயலாளர். நீர் எவ்வளவு பெரிய தவறிழைத்திருக்கிறீர் என்பது உமக்குப் புரியுதா? ஊடகவியலாளர்கள் தங்களுக்குச் செய்தி வேண்டும் என்றால், அவர்கள் தாங்களாகவே போய்ச்செய்தி சேகரிக்கட்டும். நீர் காவிக்கொண்டு திரிய வேண்டியதில்லை. அவர்கள் எங்கும் போகலாம். வரலாம். செய்தி சேகரிக்கலாம். அது அவர்களுக்கு உள்ள ஊடகச் சுதந்திரம். இப்ப கூட இதற்குள் (நீதிமன்ற கட்டடத்துக்குள்) இருந்து அவர்கள் நடப்பவற்றை செய்தி ஆக்கக்கூடும். அது அவர்களின் பணி. உமது பணி எதுவோ அதை மட்டும் செய்யும். உமக்கு யார் செய்தியாளர்களை வாகனத்தில் கொண்டு திரியச் சொன்னது? யார் அனுமதி தந்தது? அப்படி செய்யச்சொல்லி எந்த தாபனக்கோவையில் விதிமுறை இருக்கு? யாராவது வழியில கையப்போட்டு மறிச்சா, கள்ளன் காவாலி, யார் எவர் என்று தெரியாமல், யாரை வேண்டுமானாலும் ஏற்றிக்கொண்டு போவீரா? அது வேற வேற பிரச்சினைகளை அல்லவா கொண்டுவரும். இப்ப பாரும். என்ன நடந்திருக்கு? இத்தனைக்கும் நீர் ஒரு பொறுப்புமிக்க அரச உத்தியோகத்தர். இப்படியா நடந்துகொள்வது?’ என்று கடுமையாக எச்சரித்தார் நீதிபதி ஆனந்தராஜா. 

‘அது தவறு தான்’ என்று ஒப்புக்கொண்டு, நீதிமன்றத்திடம் தனது தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் கம்சநாதன். ஆயினும் பொலிஸாரோ விடுவதாக இல்லை. ‘தகாத வார்த்தைகளால் ஏசினர்’ என்று, மற்றுமொரு குற்றச்சாட்டை நீதிபதியிடம் கூறினர். 

உண்மை பேசும் சமுக வலைத்தளம்:
இதற்கு சட்டத்தரணிகள், ‘பொலிஸாரால் உங்களிடம் தரப்பட்டுள்ள சீ.டி (இறுவட்டு) முழுமையான காணொளி கிடையாது. முன்னுக்கு பின் நடைபெற்ற சம்பவங்களை கட் பண்ணி விட்டு, இடைப்பட்ட ஒரு துண்டு வீடியோ காட்சியை மட்டுமே தந்துள்ளனர். உண்மையில் என்ன நடந்தது? என்பதை தெரிந்துகொள்ள, நேற்றைய நாள் (05.01.2017 வியாழக்கிழமை) சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளியை பார்த்தால் மாத்திரமே உங்களுக்கு உண்மை நிலைவரம் தெரியவரும்.’ என்று, நீதிபதி ஆனந்தராஜாவிடம் கேட்டுக்கொண்டனர். 

‘இப்போது அந்த காணொளி உங்களிடம் உள்ளதா?’ என்று நீதிபதி கேட்க, அதற்கு சட்டத்தரணி ம.கிறேஷியன், ‘நான் எனது கைப்பேசியில் அந்த வீடியோவை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் சமுக வலைத்தளங்களில் பார்க்க முடியும்.’ என்று தெரிவித்து தனது கைப்பேசியை நீட்ட, ‘சரி சரி, நான் பின்னர் பார்க்கிறேன்.’ என்று நீதிபதி ஆனந்தராஜா கூறிவிட்டார். 

கனகபுரம் களவர பூமியாகுமா?
மீண்டும் பொலிஸார், ‘இவர்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளி மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர்.’ என்று குற்றம் கூற, அதற்கு சட்டத்தரணிகள், ‘இவர்களின் உறவினர்கள் இங்கு தான் புதைக்கப்பட்டுள்ளனர். எங்கு புதைக்கப்பட்டுள்ளார்களோ? அங்கு தான் கல்லறை கட்ட வேண்டும்.’ என்று தெரிவித்தனர். 

நீதிபதி ஆனந்தராஜா பொலிஸாரைப் பார்த்து, ‘2009 மே மாதத்துக்கு முன்னர் இங்கு இருந்த நடைமுறைச் சூழலையும், நிலபுல அமைப்பையும் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.’ என்று கூறினார். 

தடுக்க வேண்டும்:
மறுபடியும் பொலிஸார் வரிந்துகட்டிக்கொண்டு, ‘இப்படி ஆளுக்கு ஆள் அங்கு போய் கல்லறைகள் கட்டினால் சமுக குழப்பங்கள், குழுச்சண்டைகள் இடம்பெற வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே துயிலுமில்ல வளாகத்துக்குள் யாரும் பிரவேசிக்க முடியாதவாறு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.’ என்று கோரிக்கை விடுத்தனர். 

கிளி. கரைச்சி பிரதேசசபையின் செயலாளர் கம்சநாதனை பார்த்து, ‘துயிலுமில்ல வளாகத்துக்குள் எவராவது உள்பிரவேசித்து தங்களது உறவுகளை வழிபடுவது, நினைவுகூறுவது தொடர்பில் உமக்கு ஏதேனும் ஆட்சேபனையோ, பிரச்சினையோ உண்டா?’ என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி ஆனந்தராஜா. 

அதற்கு கம்சநாதன், ‘யாரும் போகலாம் வரலாம். எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் அதற்குள் எந்த கட்டுமானப்பணிகளிலும் ஈடுபட முடியாது.’ என்று தெரிவித்தார். ‘அப்படியென்றால், நீங்கள் அந்த காணியில் என்ன செய்யப் போகின்றீர்கள்? வேறு ஏதேனும் திட்டங்கள் உங்களிடம் உண்டா?’ என்று, மறுகேள்வி எழுப்பினார் நீதிபதி ஆனந்தராஜா.

‘நானாக திட்டமிட்டு எதையும் செய்ய முடியாது. இது அரச மேல்மட்டத்தோடு தொடர்புபட்டுள்ள விடையம் ஆதலால்.’ என்று கம்சநாதன் கூறி முடிக்க, சட்டத்தரணிகளோ ‘துயிலுமில்லக்காணி சட்டப்படி இவருக்கு உரித்துடையதல்ல. இன்னும் அது கரைச்சி பிரதேசசபையிடம் பாரப்படுத்தப்படவில்லை.’ என்று தெரிவித்தனர். 

‘உம்மிடமும் திட்டங்கள் இல்லை. அவர்கள் தங்கள் உறவுகளுக்கு வழிபட கல்லறை கட்டப்போறம் என்று நிற்கினம். நீரோ பிரதேசசபைக்கு உரித்துடைய காணி என்று சொல்லிக்கொண்டு நிற்கிறீர். இப்பிடியே நீர் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அடுத்த தவணைக்கு சமுகமளித்து காணி உமக்கு உரித்துடையது என்று சட்டரீதியான ஆவணங்கள் ஊடாக நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு கட்டுறதுக்கான உரிமை போகும். ஏனென்டால், யாரோ எவரதோ காணிக்கு நீர் வந்து வழக்கு போட்டுக்கொண்டு இருக்க முடியாது தானே. காணி யாருக்கு சொந்தமோ, அவர் தான் வந்து வழக்கு போடனும். சரி தானே?’ என்று கம்சநாதனை பார்த்து நீதிபதி ஆனந்தராஜா கூறுகின்றார். 

பின்னர் ஏற்பாட்டாளர்களை பார்த்து, ‘நீங்கள் முறைப்படி அவரிடம் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ, அதன் பிரகாரம் ஒரு காலக்கெடுவை கொடுத்து ஒரு விண்ணப்பத்தை எழுதிக்கொடுங்கள். அதற்கு அவரிடமிருந்து உங்களுக்கு தெளிவான ஒரு முடிவு தெரிவிக்கப்படாது விட்டால், நீங்கள் மறுபடியும் உங்கள் சட்டத்தரணிகள் ஊடாக ஒரு வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு வாருங்கள். நீதிமன்றம் அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லும்.’ என்று கூறுகின்றார். 

பகையிடம் ஏன் பணிவும் குனிவும்?
இந்தநிலையில் சட்டத்தரணிகள், ‘கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்திரன் பூங்கா காணியும் இவரது பிரதேசசபை ஆளுகைக்குள் தானே வருகின்றது. அங்கு இராணுவத்தினர் ஆக்கிரமித்து உட்புகுந்து யுத்த வெற்றிச்சின்னம் கட்டியுள்ளனர். நேற்று (05.01.2017 வியாழக்கிழமை அன்று) இவர் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்துகொண்டது போல, சந்திரன் பூங்காவிலும் உள்நுழைந்து செயல்பட முடியுமா? இராணுவத்தினருக்கு எதிராக தனது அதிகாரத்தை காட்டுவாரா? சட்டத்தை பயன்படுத்துவாரா?’ என்று, காரசாரமான கேள்விகளை கிளி. கரைச்சி பிரதேசசபையின் செயலாளர் கம்சநாதனை நோக்கி எழுப்பினர். 

‘சரி சரி விடுங்கள். இதுபோன்ற அரசியல் ரீதியான பிரச்சினைகளை கதைச்சு, பிரச்சினையை மேலும் சிக்கலாக்க வேண்டாம். அறுவரையும், ஐம்பதாயிரம் ரூபாய் ஆள்பிணையில் செல்ல அனுமதிக்கின்றேன். இந்த வழக்கு அடுத்த மாதம் (20.02.2017 திங்கள் கிழமை அன்று) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும்.’ என்று கூறி, நண்பகல் 12.10 மணிக்கு விவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் நீதிபதி ஆனந்தராஜா. 

முடிந்த முடிவாக ஏற்பாட்டாளர்களின் நோக்கம், ‘மாவீரர்களுக்கு பொதுக்கல்லறை கட்டுவதா? சிறீதரன் எம்.பியை அம்பலப்படுத்துவதா?’ நோக்கம் எதுவாகவிருப்பினும், ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடியது போல’, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கனகபுரம் துயிலுமில்லத்தில் கடந்த 2016ம் வருடம் மாவீரர் நாள் அன்று ஆடியதன் விளைவே இது. 

மாவீரர்களுக்காக பொதுக்கல்லறை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளிகள் மீது வழக்கு தாக்கல்! இவ்வாறு வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளுக்கு அடுத்து, நீதிமன்ற தீர்ப்பு என்னவாக இருக்கும்? என்பதே சகல தரப்புகளினதும் பெருத்த எதிர்பார்ப்பு ஆகும். 

செஞ்சுடர்.சே

(பிற்குறிப்பு: இந்த பத்தி தீபம் பத்திரிகையில் சில தணிக்கைகளுடன் பிரசுரமாகியிருந்தது. நன்றி தீபம்)

Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger