அரச அதிகார மையத்தின் கோடரிக்காம்பு சுமந்திரன்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, February 22, 2017

அரச அதிகார மையத்தின் கோடரிக்காம்பு சுமந்திரன்!!!


சுமந்திரன்: அரச அதிகார மையத்தின் கோடரிக்காம்பு - தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் அறிக்கை.

‘இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்பட்டோர் தேசியப்பிரச்சினையை 14 குடும்பங்களின் தனிப்பட்ட பிரச்சினை’ ஆக்கியவர் அரச அதிகார மையத்தின் கோடரிக்காம்பு சுமந்திரன் எம்.பி என்று, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

வணக்கத்துக்குரிய அருள்தந்தைகளும், கண்கண்ட சாட்சிகளான பாதிக்கப்பட்ட மக்களும் பங்குபற்றியிருந்த அரச தரப்பினருடனான நேரடி பேச்சுவார்த்தைக்குள், வெள்ளாட்டு கூட்டத்துக்குள் ஒரு கறுப்பாடு போலவும் - சிவபூஜைக்குள் கரடி போலவும், சுமந்திரன் எம்.பியும் அவரது சகாக்களும் புகுந்ததால், கடுமையான வாய்த்தர்க்கங்கள் ஏற்பட்டு நம்பிக்கையும், திருப்தியும், தீர்வும் இன்றி பேச்சுவார்த்தை குழப்பத்தில் முடிவடைந்ததாகவும், அதனை ஒழித்து மறைத்து பேச்சுவார்த்தை தொடர்பில் குதர்க்கமும் கெடுதலுமான விசமக்கருத்துகளை சுமந்திரன் எம்.பி தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றமைக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர். 

கடந்த 09.02.2017 வியாழக்கிழமை அன்று அலரிமாளிகையில் நடந்தது என்ன? என்பது தொடர்பில் விளக்கமளித்து குறித்த சங்கத்தின் தலைவர் கா.ஜெயவனிதா, தலைமை ஒருங்கிணைப்பாளர் கோ.ராஜ்குமார், பேச்சுவார்த்தை குழுவின் சார்பாக ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் கையொப்பமிட்டு, இன்று (22.02.2017 புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், 

'கர்த்தர் கூட்டத்துக்குள் ஒரு யூதாஸ், ஸீஸர் கூட்டத்துக்குள் ஒரு புரூட்டஸ், பண்டாரவன்னியன் கூட்டத்துக்குள் ஒரு காக்கைவன்னியன், கனி மரங்களுக்கிடையே ஒரு நச்சு மரம், விளைநிலங்களுக்கிடையே ஒரு மலட்டு (தரிசு) நிலம், நல்ல பயிர்களுக்கிடையே ஒரு கொடிய களை, பூந்தோப்புகளுக்கிடையே ஒரு முள்புதர்' போன்று இருந்துவரும் சுமந்திரன் எம்.பி, பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் மூன்று நாள்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்று, அவருக்கு காலக்கெடுவையும் விதித்துள்ளனர். 

(சுமந்திரன் எம்.பியின் குதர்க்க கருத்துகளுக்கு எதிர்வினையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த ஊடக அறிக்கையின் முழுவிவரமும் இணைக்கப்பட்டுள்ளது.) 

ஊடக அறிக்கை:
21.02.2017

பெறுநர்:
ஆசிரியர்கள், 
(பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்கள்)
மற்றும் சமுகவலைத்தள பதிவர்கள்

திரு.சுமந்திரன்: அரச அதிகார மையத்தின் கோடரிக்காம்பு

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள், அரச தரப்பினருடன் 09.02.2017 வியாழக்கிழமை அன்று அலரிமாளிகையில் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில், இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன், அங்கு நடந்த உண்மைச்சம்பவம் எதுவோ? பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாகி குழப்பத்தில் முடிவடைந்தமைக்கான காரணம் என்னவோ? அவற்றை மறைத்து, புனைக்கதைகளையும் திரிபுபடுத்திய கருத்துகளையும் ஊடகங்களுக்கு கூறிவருகின்றார். 

திரு.சுமந்திரனின் இத்தகைய புனைக்கதைகளையே, மயக்கமாகவும் பூடகமாகவும் ஊடகங்களும் வெளியிட்டு வருவதால், ‘மெய்நிலைவரத்தை தமிழ்மொழி பேசும் மக்களுக்கு வெளிப்படுத்தும் விளக்கச்செய்தியாகவும், சுமந்திரனுக்கு எமது எதிர்வினையாகவும்’ இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகின்றோம். ‘சுமந்திரனால் குற்றம் சாட்டப்பட்ட தரப்பும், சிறீலங்கா அரசால் அநீதி இழைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களும்’ ஆகிய எமது நீதிக்குரலுக்கு, சுமந்திரனின் புனைக்கதைகளுக்கு வாய்ப்பளித்த ஊடகங்கள் அதே சமவாய்ப்பை (தணிக்கைசெய்யாது) அளித்து, ‘ஊடக அறம்தக நடக்கக்கடவது’ என்றும் வேண்டுகின்றோம். 

அரச பிரதிநிதிகளாக சமுகமளித்திருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு:
உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காம் நாள் 26.01.2017 வியாழக்கிழமை அன்று அமைச்சர் ருவான் விஜேவர்தன, வவுனியாவுக்கு நேரில் வருகைதந்து, எம்மோடு நடத்திய கலந்துரையாடலின் போது 16 பெயர் கொண்ட குழுவோடு அரச தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார். ஆயினும், எமது குழுவின் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார், யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.வி.பி.மங்களராஜா அடிகளார், சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், சங்கத்தின் 8 மாவட்டத்தலைவிகள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுகள் உட்பட 30 பேர் கலந்துகொள்வார்கள் என்று, அமைச்சர் ருவானுக்கு 01.02.2017 புதன்கிழமை அன்றே அறிவித்திருந்தோம். 

இதன்பிரகாரம் 09.02.2017 வியாழக்கிழமை அன்று, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி, உடல்பரிசோதனைகளை முடித்துக்கொண்டு காலை 11.00 மணிக்கு அலரிமாளிகைக்குள் பிரவேசிக்கின்றோம். அங்கு ஏலவே இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சாள்ஸ் நிமலநாதன், ரெலோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சமுகமளித்திருந்தனர். இவர்கள் எமது குழுவைக்கண்டதும், ஏதோ பயங்கரவாத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்களை பார்ப்பது போலவும், தீண்டத்தகாத சமுகம் ஒன்றைக்காண்பது போலவும் நடந்துகொண்டனர். ஒப்புக்குத்தானும், ‘வணக்கம், உள்ளே வாங்கோ’ என்று கூறவில்லை. சிறு புன்னகையைக்கூட காட்டவில்லை. மாறாக முகத்தை திருப்பிக்கொண்டனர்.    

சில நிமிடங்களுக்கு பின்னர், பாதுகாப்புத்துறை பிரதி அமைச்சர் ருவான் விஜேவர்தன, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸே, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் உள்ளே பிரவேசித்தனர். அப்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரும், எழுந்து கைலாகு கொடுத்து சிரித்தவாறு அமைச்சர்களை வரவேற்றனர். 

‘பேச்சுவார்த்தையில் இந்த மூவரும் கலந்துகொள்வர்’ எனும் தகவல், எங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறியத்தரப்பட்டிருக்கவில்லை. குறித்த மூவரையும் நமது கண்களால் அங்கு நேரில் கண்ட பின்னரே, நம்மால் அதை ஊகித்துக்கொள்ளவும் முடிந்தது. பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தர வருகை தந்ததும், அமைச்சர் ருவான் தனது தொடக்க உரையில் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி வரவேற்று உரையாற்றினார். 

பதிலுக்கு எமது குழுவின் சார்பாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் அவர்களும், (ஆங்கில மொழியில்) எல்லோருக்கும் வணக்கம் சொல்லி வரவேற்று உரையாற்றிவிட்டு, ‘குறித்த பேச்சுவார்த்தை அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நேரடி பேச்சுவார்த்தை என்பதால், இங்கு சமுகமளித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களை வெளியேறிச்செல்லுமாறு அவர்களிடம் மிகவும் பணிவாக கேட்டுக்கொள்வதாக’ தெரிவித்தார். எமது குழுவினால் மிகவும் மரியாதை நிமித்தமாக (ப்ளீஸ் பண்ணி) விடுக்கப்பட்ட இந்தக்கோரிக்கை தொடர்பில், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவரும் எவ்வித சலனமும் அற்று இருந்தனர். கண்டுகொள்ளாத அமைச்சர் ருவானும், பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதிலேயே முனைப்புக்காட்டினார்.   

ருவானை இடைமறித்த நாம், ‘பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்னர், இங்கு அழையாமல் மூன்றாம் தரப்பாக புகுந்துள்ள சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிமலநாதன் எம்.பிக்கள் மூவரையும் வெளியேற்றவும்.’ என்று வலியுறுத்தினோம். 

அதற்கு ருவான், ‘இல்லை இல்லை… அவர்களுக்கு நாங்கள் தான் அழைப்பு விடுத்து வரவழைத்தோம்.’ என்றார். (அப்போதுதான் குறித்த அமைச்சர்களோடு அரச தரப்பு பிரதிநிதிகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்களும் கலந்துகொண்டுள்ளமையை எம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது.) 

‘எங்கள் தரப்பிலிருந்து நோக்கும்போது இவர்கள் அழையாமல் புகுந்தவர்கள். உங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், இந்த பேச்சுவார்த்தையில் நீங்கள் வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ளவில்லை என்று நாங்கள் எடுத்துக்கொள்வோம். அப்படியென்றால், இவர்களின் வருகை தொடர்பில் எங்களுக்கு ஏன் நீங்கள் ஏலவே தகவல் தெரியப்படுத்தவில்லை.’ என்று ருவானிடம் மறுகேள்வி எழுப்பினோம். (தாங்கள் வவுனியாவில் ஒப்பமிட்டு தந்துள்ள கடிதத்தில் இப்படி ஒரு விடையம் குறிப்பிடப்படவில்லையே என்று கூறி அந்த கடிதத்தையும் காட்டினோம்.)

‘ஆமாம், உங்கள் வாதம் நியாயம்தான். திடீரென்று எடுத்த அவசர முடிவு என்பதால் தகவல் தர முடியாமல் போய்விட்டது. அது தவறுதான். இந்தப்பிரச்சினைக்கு (காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை) இவர்களையும் வைத்துக்கொண்டு தான் பேசி தீர்வு காண முடியும்.’ என்றார் ருவான். 

‘கடந்த ஏழு வருடங்களாக இந்த விடையங்கள் தொடர்பாக பேசி முடிவு காணுமாறு அரசியல் அதிகாரத்தை நாங்கள் (தமிழ் மக்கள்) தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தோம். இந்த ஏழு வருடத்தில் நீங்கள் (இருதரப்பும்) சாதித்தது தான் என்ன? உருப்படியாக என்ன காரியங்கள் தான் நடந்திருக்கு? உங்களுடைய அரசியல் அணுகுமுறையால் நாங்கள் நொந்து வெறுப்பும் சலிப்பும் வேதனையும் அடைந்து வீதிக்கு வந்துவிட்டோம். உயிரை பணயம் வைத்துப்போராடி செத்துப்பிழைத்து இன்று இந்த பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறோம். ஏழு வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களாகிய எங்களுக்கு (சிவில் சமுகத்தினருக்கு) கிடைத்துள்ள அரிய வாய்ப்பை சரிவர பயன்படுத்த விரும்புகின்றோம். தயவுசெய்து இவர்களை வெளியேற்றுங்கள்.’ என்று ருவானின் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்தோம். 

கூட்டமைப்புக்காக இரந்து பரிந்து பேசிய அரச அமைச்சர்கள்:

‘இல்லை, இந்த விடையங்கள் தொடர்பாக இவர்கள் (த.தே.கூட்டமைப்பு) பல தடவைகள் எங்களை (அரச தரப்பை) நேரில் சந்தித்தும், தொலைபேசியிலும் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்போதும் இவர்கள் அக்கறையோடு தொடர்ந்தும் செயல்பட்டு வருகின்றார்கள். உங்களுக்காக (தமிழ் மக்களுக்காக) பல தடவைகள் இவர்கள் பாராளுமன்றத்துக்குள் குரல் கொடுத்திருக்கிறார்கள். பிரேரணைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்னர் கூட சபையை ஒத்திவைத்தார்கள். நீங்கள் மட்டுமல்ல, வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள மக்கள் இவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே இவர்கள் உங்களின் பிரதிநிதிகள். அவர்களை இப்படி நீங்கள் நிராகரிப்பதும், அவமானப்படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும் சரியல்ல. இந்தப்பேச்சுவார்த்தையில் இவர்களும் பங்கேற்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இவர்களையும் வைத்துக்கொண்டுதான் தீர்வைக்காண முடியும். இப்படியிருக்கும் போது இவர்களை வெளியேற்றுமாறு நீங்கள் கூறுவது ஏன்?’ என்று அமைச்சர் சாகல ரட்நாயக்க கேட்டார். 

‘நீங்கள் சொல்கிறீர்கள் இவர்கள் (த.தே.கூட்டமைப்பு) உங்களின் பிரதிநிதிகள் என்று. அதுதானே நாங்களும் தெளிவாக சொல்லிவிட்டோம், இவர்களில் நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம் என்று. காணாமல் ஆக்கப்பட்டோர் - அரசியல் கைதிகள் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாகவும், சிவில் சமுக வெளியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் நாங்களும், இவர்களும் (த.தே.கூட்டமைப்பு) முன்வைக்கின்ற கோரிக்கைகள் பரிந்துரைகளுக்கு இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் உண்டு. நாங்கள் சமஸ்டி என்றால் இவர்கள் ஒன்றுபட்ட இலங்கை என்கிறார்கள். நாங்கள் சர்வதேச விசாரணை என்றால் இவர்கள் உள்ளக விசாரணை என்கிறார்கள். நாங்கள் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு என்றால் இவர்கள் புனர்வாழ்வு என்கிறார்கள். நாங்கள் தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து இராணுவ வெளியேற்றம் என்றால் இவர்கள் படைக்குறைப்பு என்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட அடிப்படை முரண்பாடுகளை கொண்டிருக்கும் இவர்களையும் வைத்துக்கொண்டு எப்படி பேசுவது? தயவுசெய்து வெளியேற்றுங்கள்.’ என்று வலியுறுத்தினோம்.

அதற்கு சாகல ரட்நாயக்க, ‘நீங்கள் எடுத்ததும் முதலாவதாக இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்து, எங்களை பெரிய சங்கடத்துக்குள் தள்ளிவிட்டீர்கள். உங்களிடம் ப்ளீஸ் பண்ணி கேட்கிறோம். இந்த கோரிக்கையை வாபஸ் பெறுங்கள்.’ என்று கெஞ்சல் ஸ்தாயியில் கேட்டார். 

‘நீங்கள் அவர்களோடு பேச வேண்டும் என்றால், பிறிதொரு சந்திப்பை ஏற்படுத்தி பேசிக்கொள்ளுங்கள். இது எங்களுக்கான வாய்ப்பும் காலமும். எனவே இதை நாங்கள் பயன்படுத்த விரும்புகின்றோம். சொன்னதையே மறுபடியும் மறுபடியும் சொல்கிறோம். தயவுசெய்து வெளியேற்றுங்கள். இவர்களை வெளியேற்றும் வரைக்கும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க விடப்போவதில்லை.’ என்று காரசாரமாக கூறிவிட்டோம்.  

அணு குண்டு உற்பத்தியில் இலங்கை! கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம்: 

இதன்போது குறுக்கிட்ட பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தர, ‘இப்படி நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தபோது சம்பந்தன் ஐயா என்னை நேரில்கண்டு சந்தித்து, நீங்கள் இந்தப்பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவை எடுக்காவிட்டால் தானும் உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக கூறி விடாப்பிடியாக இருந்தார். நாங்கள் தான், இல்ல ஐயா… பேசி சுமுகமாக முடிவு காணலாம் என்று கூறி, அவரது முடிவை மாற்ற வைத்தோம். அவர் தனது முதுமை மற்றும் நோயைப்பாராமல் உங்களுக்காக இந்த கடினமான முடிவை எடுத்திருந்தார்.’ என்று தெரிவித்தார். (பொலிஸ்மா அதிபரின் பேச்சைக்கேட்டதும், உலக நாடுகளுக்கு தெரியாமல் இலங்கையும் மறைமுகமாக அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு அணு வல்லரசு ஆக முயற்சித்துக்கொண்டிருக்கும் இரகசியத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.)

பொலிஸ்மா அதிபரின் இந்தப்பேச்சுக்கு, ‘நாங்கள் புத்திர சோகத்தோடும் நெஞ்சமெல்லாம் வலியோடும் இங்கு வந்துள்ளோம். நீங்க வேற… சும்மா காமடி பண்ணாதீங்க சேர்.’ என்று எமது குழுவிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர் ஏளனச்சிரிப்போடு பதில் கூறினார். 

இதன்போது அமைச்சர் ருவான், (தனது முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு) ‘இதுதான் உங்கள் முடிவா?’ என்று கேட்டார். 

‘ஆமாம். நாங்கள் வவுனியாவில் சாகக்கிடக்கும் போது, உவங்கள் ஏது? என்னது? என்று எட்டிக்கூட பார்க்கவரவில்லை. எங்களை சாகவிட்டவங்கள். இப்ப என்னத்துக்காம் கோர்ட் சூட்டை மினுக்கிக்கொண்டு உதுக்குள்ள வந்திருக்கிறாங்கள்?’ என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு தாயார் கேட்டார். ‘உள்ளதுக்கே சிறைச்சாலைகள் எல்லாம் நிறைஞ்சு வழியுது. இதுவேற போதாதென்று கிளைமோர் எம்.பி, அலரிமாளிகைக்கு கிளைமோர் குண்டு வைக்க வந்தவர்கள் என்று சொல்லி எங்களை சிறையில பிடிச்சுப்போட்டாலும் போட்டுவிடுவார். தயவுசெய்து எங்கட பாதுகாப்புக்காக வெளியேற்றுங்கள்.’ என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இன்னுமொரு தாயார் ரொம்பவும் சலித்துக்கொண்டு கூறினார்.  

‘ஒன்று அவர்களோடு பேசுங்கள். இல்லை எங்களோடு பேசுங்கள். அவர்களுடன் தான் பேசப்போகின்றீர்கள் என்றால் பேசுங்கள். நாங்கள் வெளியேறிச்செல்கின்றோம்.’ என்று கூறி, எமது முடிவில் நாங்கள் உறுதியாக இருந்துவிட்டோம். 

(மேலே குறித்த உரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, சுமந்திரன் எம்.பியை பார்த்து ‘வாங்கோ வெளியேறி போவோம்’ என்று கை சைகையால் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு சுமந்திரன் எம்.பி, ‘இல்லை இல்லை… பொறும் நான் பார்த்துக்கொள்ளுறன்’ என்றவாறான தோரணையில், செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை அமரும்படி கை சைகை காட்டிக்கொண்டிருந்தார். அமைச்சர் சுவாமிநாதன் குனிந்த தலையை நிமிர்த்தாமல் தனது கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தார். அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸே கொடுக்குக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்.) 

நாங்கள் எமது எதிர்ப்பை பலமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், அரச தரப்பே அவர்களுக்கு (த.தே.கூட்டமைப்புக்கு) அழைப்பு விடுத்திருந்தமையினால் தங்களது வாயாலேயே அவர்களை ‘வெளியேறிப்போங்கள்’ என்று எப்படிக்கூறுவது? என்று தெரியாமல், அமைச்சர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள் எவ்வளவோ இரந்து பரிந்து பேசியும், நாங்கள் எமது முடிவில் விடாப்பிடியாக இருந்துவிட்டோம்.   

இந்தநிலையில் சுமந்திரன் எம்.பி, ‘இல்லை… நீங்கள் வெளியேறிச்செல்ல வேண்டியதில்லை. நாங்கள் போகின்றோம். நீங்கள் பேசுங்கள். ஆனால் போவதற்கு முன்னர் சிறுகுறிப்பு ஒன்றை நான் சொல்ல வேண்டும். இங்கு திரு.ரட்ணவேல் அவர்களும் இருப்பதால், நான் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும்.’ என்று கூறி தான் சொல்ல வந்த சேதியை ஆங்கிலத்திலும் பின்னர் அதை தமிழிலும் மொழிபெயர்த்து கூறினார். 

சுமந்திரன் எம்.பியின் குதர்க்கமும் - செல்வம் எம்.பியின் உள்குத்தல் பேச்சும்!

‘வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதோடு, ஒரு சிலர் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்தப்பிச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள மக்கள் எங்களுக்கு (த.தே.கூட்டமைப்புக்கு) வாக்களித்து, தமது பிரதிநிதிகளாக எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் வடக்கு மாகாணத்தை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்தி அதாவது, யாழ்.கிளி தேர்தல் தொகுதியிலிருந்து நானும், வன்னி தேர்தல் தொகுதியிலிருந்து செல்வம் அடைக்கலநாதனும், சாள்ஸ் நிமலநாதனும் இங்கு வந்துள்ளோம். ஆகவே ஒரு குறிப்பிட்ட 14 முதல் 15 பேர் கொண்ட குழு எங்களை வெளியேறிச்செல்லுமாறு கூறமுடியாது. (அமைச்சர் ருவானை பார்த்து சுமந்திரன் கூறுகின்றார்) இவர்கள் வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் பரந்துபட்ட சமுக பிரச்சினையை பற்றி இங்கு பேசமுடியாது. அந்த அதிகாரமும் மக்கள் ஆணையும் எங்களுக்குத்தான் உண்டு. இவர்கள் இந்த 14,15 பேரும் வேண்டுமானால், தங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையை பற்றி மட்டும் இங்கு பேசலாம். 

இந்த இடத்தில், இதே மேசையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் வைத்துக்கொண்டு, இவர்களுக்கும் அதிகமான அமைச்சர் குழுவோடு இருந்து 50க்கும் மேல்பட்ட தடைவைகள் காணாமல் ஆக்கப்பட்டோர் - அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பாக பேசியுள்ளோம். (எமது குழுவை பார்த்து கூறுகின்றார்) நீங்கள் உண்ணாவிரதமிருந்தபோது நான் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் இருவரும் பிரதமர் ரணில் அவர்களை நேரில் கண்டு கதைத்ததன் காரணமாகத்தான், அவர் அமைச்சர் ருவானை வவுனியாவுக்கு அனுப்பி உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்தோடு நான் சாள்ஸ் ஐ உண்ணாவிரத இடத்துக்கு சென்று நிலைமைகளை அவதானித்து சொல்லுமாறு அனுப்பி, சாள்ஸ் உம் அங்கு வந்திருந்தது. (சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தலையை ஆட்டுகின்றார்) ஆனால், நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ருவானை கேட்டால், உண்மை என்னவென்று உங்களுக்கு தெரியவரும். (அமைச்சர் ருவானும் சுமந்திரன் எம்.பியின் கருத்தை ஆமோதித்து தலையை ஆட்டுகின்றார்)

இந்தக்குழு தனிப்பட்ட ஒரு அரசியல் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில், ஒரு சிலரது சுயலாபங்களை அடைவதற்காகவும், அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் வேலை செய்கின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. உங்களைப்போல, ஒருமுறை அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தபோது, அதற்கு ஒரு தீர்வைக்காண்பதற்கு சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன். திரு.ரட்ணவேலும் அங்கு வந்திருந்தார். அப்போது அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்வது என்று முடிவெடுத்திருந்தோம். அதை திரு.ரட்ணவேல் அவர்கள் தடுத்தார். எங்கள் விடுதலைக்கு இதுதான் வழியென்றால், நாங்கள் அதன்படியே போகின்றோம். எங்களைத் தடுக்காதீர்கள் என்று அரசியல் கைதிகள் அவரிடம் கேட்டனர்.’ 

இதன்போது குறுகிட்டு சுமந்திரன் எம்.பியின் பேச்சுக்கு கடுமையான ஆட்சேபனையை தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் அவர்கள், ‘நீங்கள் செய்யாத ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டு புனர்வாழ்வுக்கு செல்லுமாறு அவர்களை வற்புறுத்தினீர்கள். நிந்தித்தீர்கள். இதுவே ஒரு அடிப்படை மனிதஉரிமை மீறல். அதைத்தான் நான் சுட்டிக்காட்டி கண்டித்தேனே தவிர, நீங்கள் கூறுவது போல இல்லை.’ என்று தெரிவித்தார். இதன்போது அருட்தந்தை செபமாலை அடிகளார் சுமந்திரன் எம்.பியை நோக்கி, ‘நீங்கள் பொதுப்பிரச்சினையை மட்டும் இங்கு பேசலாமே தவிர, தனிநபர்களை குறிப்பிட்டு பேச முடியாது.’ என்று கண்டனம் தெரிவித்தார். அதற்கு ‘இல்லை… நான் பேசுவேன். அப்படித்தான் பேசுவேன். நான் எதைப்பேச வேண்டும். எதைப்பேசக்கூடாது என்று மற்றவர்கள் கூறமுடியாது. கூறக்கூடாது’ என்று சுமந்திரன் எம்.பி மல்லுக்கட்டினார்.  

‘இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்படல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள முப்பத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நீதியும் தீர்வும் கேட்டு, நாங்கள் இங்கு பேசவந்துள்ளோம். நீங்கள் சும்மா எழுந்தாமானமாக ஆயிரக்கணக்கானோர்… ஆயிரக்கணக்கானோர்… என்று கூறிக்கொண்டிருக்கிறீயள். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் இந்த ஏழு வருடத்தில் நீங்கள் எவ்வளவு கரிசனையோடும் கவனிப்போடும் இருந்திருக்கிறீயள் என்பதற்கு இதுவே சாட்சி.’ என்று நாங்கள் கூற, ‘நான் எங்கே அப்படிக்கூறினேன்?, ‘நான் எங்கே அப்படிக்கூறினேன்?’ என்று சுமந்திரன் எம்.பி வாதிட்டுக்கொண்டிருந்தார். அப்போது சாள்ஸ் நிமலநாதன் எம்.பி, ஆயிரக்கணக்கானோர்… என்று தனது குரலை குரலை தாழ்த்தி இழுக்க… ‘ஓ அது தப்பா? அது தப்பா? ஆயிரக்கணக்கானோர் என்று சொல்வது தப்பா?’ என்று மறுபடியும் சுமந்திரன் எம்.பி முரண்டுபிடித்துக்கொண்டிருந்தார்.

‘இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், ஒரு முழுமையான தகவல் திரட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் இருக்கா? இல்லையா? உண்டு அல்லது இல்லை. எங்களுக்கு ஒரே பதில் தான் வேண்டும். இழுத்து அலட்டக்கூடாது.’ என்று நாங்கள் மறுகேள்வி கேட்க, சுமந்திரன் எம்.பி பதில் கூறாது முகத்தை திருப்பிக்கொண்டார்.  

‘மேலும், 14 முதல் 15 பேர் கொண்ட குழு என்று திரும்பத்திரும்ப அழுத்திக்கூறிக்கொண்டிருந்தீர்கள். நாங்கள் இந்த 14,15 குடும்பங்களுக்கும் நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவில்லை. பாதிக்கப்பட்டுள்ள முப்பத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கும் நீதியும் தீர்வும் கேட்டுத்தான் உயிரைப்பணயம் வைத்துப்போராடினோம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் வாதத்தின்படியே வைத்துக்கொள்வோம். நீங்கள் மட்டும் என்ன, இங்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்த ஒரு குழுவாகவா வந்திருக்கிறீயள்? இல்லையே… அப்படியென்றால், நீங்கள் யார் மூவரும் இதைத்தீர்மானிப்பதற்கு? என்று நாங்கள் மற்றுமொரு எதிர்க்கேள்வியை கேட்க, அதற்கும் கூட சுமந்திரன் எம்.பி பதிலளிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டார். 

‘இந்த இடத்தில், இதே மேசையில் இருந்து, ஐம்பது தடைவைகளுக்கும் மேல் பேசியிருப்பதாக கூறினீர்களே? அதுதான் என்ன பேசினீர்கள்? என்று தானே நாங்களும் கேட்கின்றோம். உங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுக்கல்வி புலமைப்பரிசில் திட்டம் வழங்குவது பற்றியா பேசினீர்கள்? அல்லது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகள் பங்கீடு பற்றியா பேசினீர்கள்? இல்லையேல், குடும்பத்தோடு வெளிநாட்டு சுற்றுலாச்சவாரி பற்றியா பேசினீர்கள்? ஏனெனில் அரசியல் கைதிகள் பற்றி பேசியிருந்தால், நிச்சயம் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறாதபடியால், இதுக்குள்ள வேறு ஏதோ கள்ளடீல்தான் பேசப்பட்டிருக்க வேண்டும். 50 தடைவைகள் பேசியும் சிறு துரும்பைக்கூட இந்த அரசு தூக்கிப்போடாதநிலையில், எந்த அடிப்படையில் தமிழ் மக்களை நம்பிக்கை வைத்து பயணிக்க கேட்கின்றீர்கள்?’ என்று சுமந்திரன் எம்.பியை கேள்விகளால் துளைத்தெடுத்தோம்.      

இந்தநிலையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, ‘நாங்கள் வெளியேறி போறம். இந்தப்பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர் - அரசியல் கைதிகள்) தொடர்பில் நீங்கள் பேசி ஒரு நல்ல முடிவு கண்டால், அது எங்களுக்கும் சந்தோசம் தான்.’ என்று கூறினார். (முடிந்தால் நீங்கள் பேசி ஒரு நல்ல முடிவு எடுத்துவிட்டால் பார்ப்போம்? என்று சவால் விடும் தொனியில் அவரது இந்த உள்குத்தல் பேச்சு அமைந்திருந்தது.) 

இறுதியாக சுமந்திரன் எம்.பி எழுந்து நின்றுகொண்டு, (நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் அடிக்கடி தமது மேலங்கியை (கோர்ட் சூட்டை) சீர்செய்துகொண்டிருப்பதைப்போல செய்தவாறு) ‘போகட்டுமா? போகட்டுமா?’ என்று கேட்டுக்கொண்டிருந்தார். ‘இல்ல சேர், போகாதீங்க…’ என்று நாங்கள் கெஞ்சி மன்றாட்டமாகக்கேட்போம் அல்லது அரசாங்க தரப்பில் அமைச்சர்கள் யாராவது, ‘மிஸ்டர் சுமந்திரன் போகாதீங்க… ப்ளீஸ் ப்ளீஸ் இருங்க…. நீங்க இல்லாமல் பேச்சுவார்த்தையை எப்படி கொண்டு நடத்துவது?’ என்று, பதறித்தன்னை மறிப்பார்கள் என்றவாறான நப்பாசையில் அசடு வழிய சுமந்திரன் எம்.பி நின்று கொண்டிருந்தார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர், ‘போகத்தானே சொல்லுறம். திருப்பித்திருப்பி அதையே கேட்டுக்கொண்டிருக்கிறீயள். நாங்கள் ஒன்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் போல, சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிக்கையை மட்டும் விடுத்துவிட்டு அரச பதவி கேட்டவர்கள் அல்லர். நான்கு நாள்களாவது சாகக்கிடந்தவர்கள். நாங்கள் எங்கட பிரச்சினையை நேரடியாகவே பேசுறம். எங்களுக்கு யாரும் இனி இடைத்தரகர்கள் தேவையில்லை. இந்த இழுபறிக்கே 15 நிமிசம் போயிட்டுது.’ என்று மிகவும் சினந்துகொண்டு பேசினார். 

அப்போது சுமந்திரன் எம்.பி குனிந்து, அமைச்சர் ருவானின் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்துவிட்டு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, சாள்ஸ் நிமலநாதன் எம்.பி இருவரையும் ‘வாங்கோ போவம்’ என்று அழைத்துக்கொண்டு வெளிக்கிளம்பிச்சென்றார். 

14 ஐ தாண்டக்கூடாது. சுமந்திரன் எம்.பி அரசுக்கு கட்டளை!

இவர்கள் மூவரும் வெளியேறிச்சென்ற பின்னர் அமைச்சர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 குடும்பங்களின் பிரச்சினைகள் தொடர்பில் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். ‘இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்படல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள முப்பத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நீதியும் தீர்வும் கேட்டு, நாங்கள் இங்கு பேசவந்துள்ளோம். தயவுசெய்து நீங்கள் எமது போராட்டத்தை இப்படி குறுக்கி சிறுமைப்படுத்தி பேசிவிட்டுப்போக முடியாது.’ என்று எமது பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் அமைச்சர்களுக்கு தெரிவித்தோம். 

அதற்கு அமைச்சர் ருவான், ‘ஆமாம். உண்மைதான். உங்கள் உணர்வை விளங்கிக்கொள்கிறோம். ஆனால் அது மிகவும் கடினமான, சவாலான பணியாகும். முப்பத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்குமான நீதி விசாரணைகளை தொடங்குவது என்பது நீண்ட காலத்தை எடுக்கும். இதில் நாங்கள் மட்டுமல்ல, ஜனாதிபதி பிரதமர் உள்பட பல தரப்பினரும் சம்பந்தப்படுகின்றனர். ஆகவே இப்போதைக்கு அது சாத்தியப்படாது. ஆகையால் முதல் கட்டமாக இந்த 14 குடும்பங்களின் உறவுகளுக்கும் என்ன நடந்தது? என்பதைக்கண்டறிய, பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குழுவொன்றை அமைப்போம்.’ என்று தெரிவித்தார். 

சர்வதேச விசாரணைக்கே இருதரப்பும் கையை தூக்கிக்கொண்டு போவோம்! 

‘நாங்கள் பல ஆட்சி மாற்றங்களை கண்டுவிட்டோம். பல அரசுகளை கடந்துவந்துவிட்டோம். வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளை தேடிக்கண்டறிவதற்காக ஒவ்வொரு அரசுகளினாலும் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைக்குழுக்கள், விசேடகுழுக்கள் முன்பாகவும் நாங்கள் ஆஜராகிவிட்டோம். இந்தப்புதிய ஆட்சி மாற்றத்தினுடைய ‘கிங்மேக்கர்’ என்று சொல்லப்படுகின்ற சந்திரிகா காலத்திலிருந்தே இந்த பித்தலாட்டங்களை எல்லாம் பார்த்துவிட்டோம். அவற்றின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டதா? வருடங்கள் பல கடந்துபோய்விட்டன. இந்தக்காலப்பகுதியில் நாங்கள், எத்தனை சாட்சியங்களை நோய்க்கும் முதுமைக்கும் பறிகொடுத்துவிட்டோம். காலத்தை நீட்டிப்புச்செய்து சாட்சியங்களை களைப்படையச்செய்யும், சாகடிக்கும் இத்தகைய ஏமாற்று நாடகங்கள் இனியும் செல்லாது. 

நாங்கள் ஒன்றும் கோமாநிலையில் இல்லை. இராணுவத்தினரிடம் எமது உறவுகளை ஒப்படைத்த கண்கண்ட சாட்சிகளாகவும், பொலிஸ் மற்றும் முப்படைகளும் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக எமது உறவுகளை வலிந்து கூட்டிச்சென்றதை நேரில் கண்ட உறவுகளாகவும் உள்ளோம். இராணுவத்தின் எந்தப்பிரிவிடம்? எந்த அதிகாரியிடம்? எந்த இடத்தில்? எந்த சந்தர்ப்பத்தில்? எப்போது எமது உறவுகளை கையளித்தோம்? அல்லது எமது உறவுகளை எங்கு? எப்படி? எப்போது? யார் அழைத்துச்சென்றார்கள்? அந்த வாகன இலக்கம் என்ன? மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண்கள் என்ன? என்பதை எம்மால் மிகத்தெளிவாக கூறவும், அடையாளம் காட்டவும் முடியும். இப்பவே அவர்களை உள்ளே இழுத்துப்போட்டு மிதிக்க உங்களால் முடியுமா? அதைச்செய்வதற்கு உங்களுக்கு நெஞ்சுரமும் நேர்iமைத்திறனும் உண்டு என்று நீங்கள் நம்புகின்றீர்களா? இடுப்பில உடுப்பு தங்காத மாதிரி வெட்கத்தை விட்டுச்சொல்லுங்கள். உங்களால் அது முடியாது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். உங்களால் கடத்தல்காரர்களையும், யுத்தக்குற்றவாளிகளையும் பாதுகாக்கத்தான் முடியும்.      

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், மக்ஸ்வெல் பரணகம தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இதுவரையில் இருபத்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளை தெரிவித்து சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளோம். நீங்கள் கூட (மைத்திரி - ரணில் கூட்டு அரசு) அந்த ஆணைக்குழுவின் காலத்தை நீட்டிப்புச்செய்தவர்கள் தானே? சொல்லுங்கள் அந்த முறைப்பாடுகளுக்கு நீங்கள் எடுத்த நடவடிக்கை தான் என்ன? சாட்சியங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உங்களால் செய்ய முடிந்ததா?  

நாட்டுக்குள் அத்தனை ஆணைக்குழுக்களின் முன்பும் சமுகமளிக்கச்சொல்லி ஏன்? எதற்காக? பாதிக்கப்பட்டுள்ள மக்களை அலைக்கழித்தீர்கள்? யாருக்காக? எதற்காக? ஓ.எம்.பி அலுவலகத்தை திறக்க இத்தனை முனைப்பு காட்டுகின்றீர்கள்? காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்காக அரசால் இத்தனை மில்லியன் டொலர்கள் ஏன்? எதற்காக? நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன? இவ்வாறு பல நூறு கேள்விகள் உங்களை நோக்கி எங்களிடம் உண்டு.

நாங்கள், ‘உள்நாட்டு செயல்முறைகளிலும், உள்நாட்டு ஆணைக்குழுக்களிலும்’ நம்பிக்கை இழந்தவர்களாகவே உள்ளோம். ‘காணாமல் ஆக்கப்பட்டோர் - அரசியல் கைதிகள்’ இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாகவும் நாட்டுக்குள் நீதி விசாரணைகளை முன்னெடுக்கும் நெஞ்சுரமும் நேர்மைத்திறனும் முன்னைய அரசுகளுக்கோ, தற்போதைய உங்கள் அரசுக்கோ, இனிவரவுள்ள அரசுகளுக்கோ கிடையாது. நீதி நியாயத்தை எதிர்பார்க்கவும் முடியாது. எனவே சும்மா கலப்பு விசாரணை, கைப்பிறிட் வைப்பிறேட், அது உது என்று சொல்லிக்காலம் கடத்தாமல் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு வாங்கோ, எல்லோரும் கையை தூக்கிக்கொண்டு சர்வதேச விசாரணைக்கே போவம்.’ என்று வலியுறுத்தினோம். 

நாங்கள் படபடவென்று பொரிந்துதள்ளியதும், சகல அமைச்சர்களும் அப்படியே கப்சிப் ஆகிவிட்டனர். சில நொடிகள் மயான அமைதிக்குப்பின்னர் சுதாகரித்துக்கொண்டு, ‘இன்றுதான் எனக்கு ஒரு உண்மையை விளங்கிக்கொள்ள முடிந்தது. இந்த பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக சந்திக்கும் ஒரு வாய்ப்பு இன்றுதான் எனக்கு முதல்முறையாக கிடைத்துள்ளது. இதுநாளும் நான் அறிந்தவை வேறு. ஆனால் உங்களை சந்திக்கும்போது அவற்றுக்கு புறம்பாக பல விசயங்களை அறிந்துகொண்டேன். (தான் இதுவரை சந்தித்த உங்கள் தமிழ் அரசியல் பிரதிநிதிகள், உண்மைக்குப்புறம்பான கதைகளை தனக்கு கூறிவந்துள்ளனர் எனும் அர்த்தப்பட அவர் பேசினார்.) நாட்டுக்குள் சகல நீதிப்பொறிமுறைகளிலும் நீங்கள் சலிப்பும் வெறுப்பும் விரக்தியும் அடைந்து நம்பிக்கை இழந்தவர்களாகிவிட்டீர்கள். அது உண்மைதான். முன்னைய விசாரணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு நடந்தவிதம் அப்படி. எல்லோரும் தவறிழைத்திருக்கிறோம். ஓ.எம்.பி அலுவலகத்தில் கூட நீங்கள் நம்பிக்கை வைக்கப்போவதில்லை. பழையவற்றை மறந்துவிடுங்கள். கடந்த காலத்தை விட்டுவிடுங்கள். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி அடுத்து என்ன? என்று யோசிப்போம். இப்போதைக்கு ஒரு தீர்வுக்குப்போக, பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குழுவொன்றை அமைத்து விசாரணைகளை தொடங்குவோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.’ என்று தெரிவித்தார் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸே.  

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வைக்கப்பட்ட கெடு! 

‘முதலில் உங்களில் நாங்கள் நம்பிக்கை வைத்து பயணிக்கவேண்டும் என்றால், காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதை விடவும் உயிரோடு உள்ளவர்களை விடுவிப்பது இலகுவான காரியம் தானே. முதலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் ஏதுமின்றி உடனடியாக விடுதலை செய்து உங்கள் இதயசுத்தியையும், நல்லெண்ணத்தையும் எமக்கு (தமிழ் மக்களுக்கு) வெளிப்படுத்துங்கள். இதற்காக உங்களுக்கு ஒரு வாரகால அவகாசம் தருகின்றோம்.’ என்று கூறினோம். எம்மால் வைக்கப்பட்ட இந்த கெடுவுக்கு அரச தரப்பு உரிய பதிலும் சொல்லவில்லை. தகுந்த பொறுப்பும் கூறவில்லை. ஒருவார காலக்கெடுவையும் கொடுத்துவிட்டு, தமிழர் தாயகப்பிரதேசங்கள் எங்கும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவோம் என்ற எச்சரிக்கை செய்தியையும் (நாமாகவே எமது முடிவை) கூறிவிட்டு அலரிமாளிகையிலிருந்து வெளியேறி வந்துவிட்டோம். 

நீ நான் என்று தரக்குறைவாகவும், வா போ என்று அஃறிணையாகவும் சம்பாசணைகள் இடம்பெறாத குறையாக, ஆக்ரோசமாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, அமைச்சர்கள் சாகல ரட்நாயக்க, விஜேயதாச ராஜபக்ஸே ஆகியோர் நிதானம் இழந்து இடைநடுவில் வெளியேறிச்சென்று விட்டனர். (வார்த்தைப்பிரயோகங்கள் எல்லாவற்றையும் எழுத்து வடிவத்தில் பிரஸ்தாபிக்க, அவை அதிக பக்கங்களுக்கு நீண்டு செல்லும் என்பதால், ஒரு பகுதி உரையாடல்களின் சாராம்சத்தையே இங்கு பகிரங்கப்படுத்தியுள்ளோம். பலவற்றை 09.02.2017 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கே, கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடுசெய்து, ஒரேஒரு பேச்சுவார்த்தையிலேயே இந்த அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருந்தோம்.)

சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் அவர்கள்:

மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் (CHRD) பணிப்பாளர் திரு.கே.எஸ்.ரட்ணவேல் அவர்கள், குறித்த பேச்சுவார்த்தை குழுவில் கலந்துகொள்ளவேண்டும் என்று, அவராகவே எங்களிடம் எத்தகைய வேண்டுகோள்களையும் விடுத்திருக்கவில்லை. ‘பல சிறைச்சாலைகளுக்கு நேரில் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை அவதானித்து வருகின்றீர்கள். அவர்களால் (அரசியல் கைதிகளால்) நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ சட்டத்தரணி என்றவகையில் பல வழக்குகளில் அவர்கள் சார்பாக ஆஜராகி நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றீர்கள். எங்களை விடவும், அவர்கள் (அரசியல் கைதிகள்) தொடர்பில் உங்களுக்கே உண்மைநிலைவரம் என்ன? என்பது குறித்து தெரியும். ஆதலால் நீங்கள் வந்து கதைப்பதே இன்னும் பொருத்தமும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.’ என்று கூறி, நாங்கள் தான் அவரை வலிந்து அழைத்துச்சென்றிருந்தோம். இலங்கைக்குள் தமிழ்மொழி பேசும் மக்களின் சமகால வாழ்வுரிமை பிரச்சினைகள், அடிப்படை மனிதஉரிமை மீறல் பிரச்சினைகள் சார்ந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சார்பாக (தனிநபர் அரசியல் கடந்து) ஆஜராகி வழக்காடிவரும் ஒரு சிறந்த மனிதநேயப்பண்பாளர் என்பதும்கூட, அவரை அழைத்துச்சென்றிருந்தமைக்கு ஒரு காரணமாகும். 

திரு.கே.எஸ்.ரட்ணவேல் அவர்கள், அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான கைதிகளுக்காக முன்னிலையாகி வழக்காடி, ‘அவர்கள் குற்றமற்றவர்கள்’ என்பதை நிரூபித்து அவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்துள்ளார். கிளிநொச்சி தருமபுரம் ஜெயக்குமாரி அம்மாவின் கைது வழக்கு, விசுவமடு இரட்டைச்சகோதரிகள் வன்புணர்வு வழக்கு என்று, ‘அரச பயங்கரவாதத்துக்கு எதிரான பல வழக்குகளில்’ வெற்றிகளை பெற்றுள்ளதோடு, அரச பயங்கரவாதத்துக்கு எதிராக பல வழக்குகளில் இப்போதும் பலத்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஆஜராகி வாதாடி வருகின்றார். 
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு, 2009ம் வருடம் மே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு என்று பலவற்றில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கை அளிக்கத்தக்க அளவில் வழக்கை முன்நகர்த்திச்செல்கின்றார்.  

2009க்கு முன்னர் யுத்த காலத்தில்கூட குமரபுரம் படுகொலை, மயிலந்தனை படுகொலை, மிருசுவில் படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, தம்பலகாமம் படுகொலை, வங்காலை படுகொலை உள்ளிட்ட ‘பொலிஸ் மற்றும் அரச முப்படைகளுக்கும் எதிரான வழக்குகளில்’ உயிர் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் ஆஜராகி வழக்காடியவர். செம்மணி படுகொலைகள் (மாணவி கிருஷாந்தி), மூதூர் படுகொலைகள் (அக்சன் பெய்ம்) வழக்குகளுக்கும் தனது சட்ட நிறுவனத்தின் ஒருமித்த பங்களிப்பையும் வழங்கியிருந்தவர். இதைவிடவும் அவரது சட்ட நிறுவனம், ஆசிய கண்டத்துக்குள் மனிதஉரிமைகளுக்காக சிறந்த சேவையாற்றிய அமைப்புகளுக்கு தாய்லாந்து அரசாங்கத்தால் வருடாவருடம் வழங்கப்படும் CHRD is being selected to receive the ‘2014 Asia Democracy and Human Rights Award (ADHRS)’ விருதை, இரத்தக்காட்டேறி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலேயே (2014ம் ஆண்டு) வென்றிருந்தது. 

சூடு வாங்கிய பூனை சுமந்திரன் எம்.பி:

இப்படி உலகம் முழுவதும் அறியப்பட்ட திரு.கே.எஸ்.ரட்ணவேல் அவர்களின் சட்டஅறிவு, சட்டப்புலமை, நுணுக்கமாக வழக்காடும் அவரது வாதத்திறமைக்கு முன்னால், சுமந்திரன் எம்.பி பல தடவைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் குட்டுப்பட்டு, சூடுவாங்கி, அடிக்கு மேல் அடிவாங்கி அவமானப்பட்டு, தோல்விகளையே சந்தித்துள்ளார். 

சுமந்திரன் எம்.பி இதுவரை, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் எத்தனை தடைவை ஆஜராகி உள்ளார்? அவற்றில் எத்தனை வழக்குகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார்? அரசியல் கைதிகளுக்காக அவரால் வழக்குகளில் ஆஜராக முடிந்ததா? அப்படி ஆஜராகும் வெள்ளை உள்ளமும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மனஉறுதியும் அவரிடம் உண்டா? இத்தனை வருடத்தில் அவர் தனது சட்டஅறிவு மற்றும் சட்டபுலமையால் சாதித்தது தான் என்ன? அவரால் நெஞ்சுரத்தோடும் நேர்மைத்திறனோடும் பட்டியல் போட்டு கணக்கு காட்ட முடியுமா? 

இந்த வெட்கம் அவமானத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாத சுமந்திரன் எம்.பிக்கு, திரு.கே.எஸ்.ரட்ணவேல் அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி எண்ணமும் வன்மபுத்தியும் ஈகோவாக (நீயா- நானா பெரியவன்? எனும் தாழ்வு மனநோய்ச்சிக்கல்) மேலெழுந்து கண்ணை மறைப்பதால், வணக்கத்துக்குரிய அருள்தந்தைகளும், கண்கண்ட சாட்சிகளான பாதிக்கப்பட்ட மக்களும் பங்குபற்றியிருந்த ஒரு கூட்டத்தில், இவர்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே தனது கவனத்தில் எடுத்துக்கொள்ளாது, பேச்சுவார்த்தை தொடர்பில் குதர்க்கமும் கெடுதலுமான விசமக்கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார். சுமந்திரன் எம்.பி, தன்னால் எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு, கூடியசீக்கிரமே (இனியும் காலம் தாழ்த்தாது) ஒரு நல்ல மனநலச்சிகிச்சை வைத்தியரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது அவருக்கு எஞ்சியுள்ள காலத்துக்காவது நலம் பயக்கும். என்பதே அவருக்கு நாங்கள் கூறும் அறிவுரை. 

சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற குறித்த பேச்சுவார்த்தைக்குள், வெள்ளாட்டு கூட்டத்துக்குள் ஒரு கறுப்பாடு போலவும், சிவபூஜைக்குள் கரடி போலவும், சுமந்திரன் எம்.பியும் அவரது சகாக்களும் புகுந்ததால், கடுமையான வாய்த்தர்க்கங்கள் ஏற்பட்டு நம்பிக்கையும், திருப்தியும், தீர்வும் இன்றி குழப்பத்தில் முடிவடைந்துள்ளது. 

சுமந்திரன் எம்.பி: கர்த்தர் கூட்டத்துக்குள் ஒரு யூதாஸ், ஸீஸர் கூட்டத்துக்குள் ஒரு புரூட்டஸ், பண்டாரவன்னியன் கூட்டத்துக்குள் ஒரு காக்கைவன்னியன், கனி மரங்களுக்கிடையே ஒரு நச்சு மரம், விளைநிலங்களுக்கிடையே ஒரு மலட்டு (தரிசு) நிலம், நல்ல பயிர்களுக்கிடையே ஒரு கொடிய களை, பூந்தோப்புகளுக்கிடையே ஒரு முள்புதர், இப்படி பல அகோர அவதாரங்களை வகித்துவரும் சுமந்திரன் எம்.பி, ‘இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்பட்டோர் தேசியப்பிரச்சினையை 14 குடும்பங்களின் தனிப்பட்ட பிரச்சினை’ ஆக்கிய அரச அதிகார மையத்தின் கோடரிக்காம்பு. 

இந்த மெய்நிலை அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்பட்ட மூன்று நாள்களுக்குள், பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் சுமந்திரன் எம்.பி பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். அவருக்கு மூன்று நாள்கள் காலக்கெடுவை நாங்கள் வழங்குகின்றோம். 

இங்ஙனம்,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைமைக்குழு மற்றும் உறுப்பினர்கள். 
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)