Headlines News:
Home » » அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டியில் நான் வாகை சூடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!!!

அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டியில் நான் வாகை சூடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!!!

Editor By Yazhpanam on செவ்வாய், 5 டிசம்பர், 2017 | முற்பகல் 9:44:00

கோலாலம்பூர், டிசம்.5- 
‘’அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டியில்  நான் வாகை சூடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ‘மலேசியா போலே’ என்பதை நான் நிலைநாட்டி இருப்பதில் சந்தோசப் படுகிறேன்’’ என்று மாணவர் ரவின் அசோக் நாய்க்கர் கூறினார்.
ஜொகூர், கங்கார் புலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ரவின், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான 4ஆவது அனைத்துலக மாணவர் முழக்கம்-2017 பேச்சுப் போட்டியில் வாகை சூடி வெற்றிக் கோப்பை, 3,000 ரிங்கிட் ரொக்கம், மற்றும் சான்றிதழ்களைப் பெற்றார்.
ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் இந்த அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டி, புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் மண்டபத்தில்  நடந்தது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், ஐக்கிய அரபு சிற்றரசு மற்றும் மலேசியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் இந்த மாபெரும் இறுதிச் சுற்றில் போட்டியிட்டனர். 
இவர்களில் நால்வர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். ரவினுடன், இந்தியாவைச் சேர்ந்த ஆர்த்தி வள்ளீஸ்வரன், இலங்கை, கொக்குவில்லைச் சேர்ந்த தாருகன் பஞ்சநாதன்  மற்றும் மலேசியாவின் ஜொகூர், மசாய் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த சஸ்வின் ராஜ் செல்வமணி ஆகியோரே அந்த நால்வர் ஆவர்.
இந்தப் போட்டியில் முதன் முறையாக மலேசிய மாணவர் ரவின் சாம்பியன் பட்டத்தை வாகை சூடினார். தன்னுடைய வெற்றிக்குப் பின்னர் அந்த மகிழ்ச்சியை வணக்கம் மலேசியா இணையச் செய்தியுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது ரவின் மேலும் கூறியதாவது:
“நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கேன். ‘மலேசியா போலே’ என நிருப்பிச்சிருக்கேன். நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேணும். எனது பள்ளி, தலைமையாசிரியர். பயிற்சி அளித்த ஆசிரியர்கள் குழு, பயிற்சிகளை ஒருங்கிணைத்த செல்வ சுப்பிரமணியம், இவர்களுக்கும் மேலாக மிகப் பெரிய வாய்ப்பை தந்து, அனைத்துலக அரங்கத்திலே மேடையேற வைத்த ஆஸ்ட்ரோ வானவில் மற்றும் வணக்கம் மலேசியா நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நான் மனமார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
“இந்த அனைத்துலக போட்டியிலே முதல் மூன்று முறையும் இந்தியா தான் ஜெயிச்சிருக்கு.. முதல் முறையான வெற்றிக் கோப்பையை நாம ஜெயிச்சிருக்கிறோம். மலேசியாவிலே இருக்கிற எல்லா தமிழ்ப்பள்ளிகளுக்கும் இது சந்தோசத்தை தந்திருக்கும் என்று நினைக்கிற போது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு..,

இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியாவின் ஆர்த்தி வள்ளீஸ்வரன் கூறிய போது:
‘’நான் கடைசி வரை சிறப்பாகவே போட்டி கொடுத்ததாக நம்புகிறேன். நான் படிக்கும் பள்ளி வேலம்மா பள்ளி. எல்லா துறைகளிலும் சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் பள்ளி. 
‘’எனவே,  2ஆவது இடத்தை பிடித்ததில் சற்று வருத்தம் தான் என்றாலும் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு இது படிக்கல்லாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த வெற்றி எனது பள்ளிக்கும் எனது ஆசிரியர்களுக்கும் எனது பெற்றோர்களுக்கு உரிய வெற்றி’’ –இவ்வாறு ஆர்த்தி சொன்னார்.

இந்த மாணவர் முழக்கப் போட்டியில் இரு மூன்றாவது வெற்றியாளர்களில் ஒருவரான இலங்கை சேர்ந்த தாருகன் பஞ்சநாதன்  கூறியதாவது:
மூன்றாவது பரிசோடு போறேன். எங்க டீச்சர் கொஞ்சம் முறைப்பாடு  கொடுப்பார். இருந்தாலும் மகிழ்ச்சி மனசுக்குள் கிடக்கெ தானே செய்யும். ஏன்னா, சமீபமா, ‘பேசு தமிழா பேசு’ போட்டியிலே எங்க மண்ணைச் சார்ந்த அண்ணன் சாருகன் மெய்யகழன் வென்றார். அவரு என்னோட மானசீக குருவானவர். அவரோட ஆசியைப் பெற்றுக் கொண்டுதான் நான் இங்ஙனம் வந்தவன். முதல் பரிசோடு போய், நான் அவரை பார்க்க நெனைச்சிருந்தன். இருந்தாலும் அவர் இந்த வெற்றிக்காக  என்னைத் தட்டிக் கொடுப்பார்.
இறுதிச் சுற்றுப் போட்டியின் போது என்னோட கைக் குறிப்பை எடம் தவறி வைச்சிட்டதாலே கொஞ்சம்  பதட்டப் பட்டுட்டேன். அது கைக்கு கெடச்ச பிறகு தெம்பாகிப் போயி, போட்டியிலே நின்னு தாக்குப் பிடிச்சேன். 
அடுத்து என்ன செய்ய உத்தேசம் என்று ‘வணக்கம் மலேசியா’ கேட்ட போது கொஞ்சமும்  தயங்காமல், மாணவர் முழக்கத்தின் தாக்கம் குறையாமல் மேடை பேச்சு பாணியில் பதில் தந்தார் தாருகன்.
“ஒரு கடன் முடிந்தது. மறுகடன் ‘வா மகனே வா’ என்று என்னை அழைக்கிறது. மாணவர் முழக்கத்தை அடுத்து, எனக்கு தாயக மண்ணிலே தேர்வுகள் காத்திருக்கின்றன. எனது அடுத்த போர் தேர்வு தான். அங்கே நான் முதலிடத்தைப் பிடிக்கவேண்டும். என்னோடு போட்டியிட்ட  அனைத்து போட்டியாளர்களும் எனது நண்பர்கள். அந்த நட்பை எப்படியாவது புலனத் தொடர்புகள் வழி தொடரவேண்டும். வணக்கம் மலேசியா அண்ணன்மார்களுக்கு நன்றி. எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு தாருகன் பதிலளித்தார். எது பற்றிக் கேட்டாலும் ஒரு மேடைப் பேச்சாளனைப் போலவே பேசும் தகுதி இவருக்கு இயல்பாகவே இருப்பது வியப்பளிக்கும் விடயம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்றொரு 3ஆவது வெற்றியாளரான ஜொகூர், மசாய் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த சஸ்வின் ராஜ் செல்வமணி இயல்பாகவே நகைச்சுவை உணர்வோடு பேசுவதில் கெட்டிக்காரர். அவர் தமது வெற்றி பற்றி கூறியதாவது:
‘’வெற்றி தோல்வியெல்லாம் சகஜம்ப்பா. நான் முதலிடத்திற்குத் தான் குறிவைத்தேன். ஆனால், என் நண்பன் ரவின் தட்டிச் சென்று விட்டான். எனக்குப் பெருமைதான்.. முடிவில், வென்றிருப்பது மலேசியா என்பதில்.
‘’இறுதிச் சுற்றின் போது எனது பேச்சினை நடுவர்களும் மக்களும் நிறைய ரசித்தார்கள் என்று நினைக்கிறேன். அதுதான் எனக்கு வெற்றி. முதலில் எனது பள்ளிக்கும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செல்வா, ஆஸ்ட்ரோ வானவில் மற்றும் வணக்கம் மலேசியா நிறுவனத்தினர் ஆகிய அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். களம் மாறலாம், என் பேச்சு மட்டும் மாறவே மாறாது’’ என்று வழக்கம் போலவே ‘பஞ்ச்’ வைத்து பேச்சை முடித்தார் சஸ்வின்.
இரண்டாவது சுற்று வரை முன்னேறி, இறுதிச் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை நழுவிட்ட கெடா, பாயா புசார் தமிழ்ப் பள்ளி மாணவர் சரத் சுதாகர் பேசிய போது, ‘நல்ல வாய்ப்பு கைநழுவியது எனக்கு வருத்தம்தான். நண்பன் ரவினும் நண்பன் சஸ்வினும் இறுதி வரை சென்று வென்றிருப்பது பெருமை தருகிறது.
எனக்கு வேறு வேறு இலக்குகள் உண்டு. அந்த இலக்கை நோக்கி பயணத்தைத் தொடர்வேன். பேச்சுப் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்பேன் என்று சரத் சுதாகர் கூறிய போது அருகிலிருந்த அவரது பெற்றோர்கள் உற்சாகத்துடன் மகனின் முதுகில் தட்டிக்கொடுத்தனர். 

நன்றி:வ.மலேசியா.
Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

உங்கள் கருத்துக்கள் என்ன?

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger