'வேதாந்தா குரூப்' நிறுவனம் சார்பில், துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்தது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையால், பொது மக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. நிலத்தடி நீரில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என, ஆலைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அத்துடன் ஆலையை மூடக்கோரிய போராட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். இதையடுத்து, ஆலையை மூடி, 'சீல்' வைக்க, கடந்த 2018 மே, 28 ஆம் திகதி, தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் மூடப்பட்ட ஆலையை திறக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
எனினும் ஆலையை திறக்கக் கூடாது என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். பல நாட்களாக இவ்வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை 2020 ஜனவரி 8 இல் திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இவ்வழக்கில் இன்று (18.08.2020) 815 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்றும், ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லுபடியாகும் எனக்கூறி, வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடினர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.