திண்டுக்கல் மாவட்டம்(தமிழ்நாடு), சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்த சிவசக்தி என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது காதல் மனைவி லாவண்யா.. இவர்கள் சத்திரப்பட்டி பகுதியில் வசித்து வந்தார்கள். லாவண்யா பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், ஆன்லைனில் வேலைவாய்ப்பு விளம்பரங்களை பார்த்துள்ளார். அதில் ஒரு ஆன்லைனில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ரூ.5 லட்சத்தை பறிகொடுத்தார். இதனால் லாவண்யா எடுத்த முடிவு விக்கித்துப்போக வைத்துள்ளது.
இன்றைக்கு பார்ட் டைம் வேலை, வீட்டில் இருந்தே வேலை, பகுதி நேரம் வேலை செய்தாலே போதும், அந்த ஆப்பை டவுன்லோடு செய்தால் உங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்தும் தெரிந்துவிடும். இந்த ஆப்பை கற்றால் வேலை கிடைக்கும் என்று பல்வேறு வழிகளில் ஏமாற்ற புதிய திட்டங்களை தீட்டி வருகிறார்கள். பலரும் ஆன்லைன் வேலைவாய்ப்புகளை நம்பி பணத்தை கட்டி ஏமாறுகிறார்கள். சிலர் பணத்தை ஏமாந்தால் விரக்தி அடைந்து தவறான முடிவெடுக்கிறார்கள். திண்டுக்கல் லாவண்யாவும் அப்படித்தான் முடிவெடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்த சிவசக்தி என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யாவுக்கு 25 வயது ஆகிறது. கோவையில் பிறந்தவரான லாவண்யா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிவசக்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சத்திரப்பட்டியை அடுத்த கோபாலபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு வித்யூத் குமரன் (4) என்ற மகனும், அதிதி (2) என்ற மகளும் இருக்கிறார்கள்.
லாவண்யா வீட்டில் இருந்தபடியே அஞ்சல்வழிக்கல்வி மூலம் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். அத்துடன் வேலைக்கும் முயற்சி செய்து வந்திருக்கிறார். அப்போது அவர் சமூக வலைதளங்களில் வந்த வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டிருக்கிறார்.
அதில் பேசிய மர்ம நபர்கள், வேலைக்குச் சேர பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனை நம்பிய லாவண்யா, அவர்களுக்கு பல தவணைகளாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் மூலம் செலுத்தியிருக்கிறார். ஆனால், வேலை கிடைக்க வில்லை. மேலும் ஆன் லைன் மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஒரு கட்டத்தில் தான் ஆன்லைன் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பியதால், ஏமாற்றப்பட்டதை லாவண்யா உணர்ந்தார். சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம், சிவசக்தி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். குழந்தைகளுடன் வீட்டில் இருந்த லாவண்யா திடீரென தூக்கிட்டுள்ளார் குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிவசக்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, லாவண்யாவை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
தகவல் அறிந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாவண்யாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் பழனி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார். ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)






No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.