கொரோனோ அபாயம் நிலவும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து எவரேனும் திருட்டுத்தனமாக யாழ்ப்பாணம் வந்து தலைமறைவாக இருந்தால் உடனடியாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுமென யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியிருப்பதாவது:
“இலங்கையில் சில பிரதேசங்கள் தொடர்ந்தும் கொரோனோ அபாய வலயங்களாக இருக்கின்றன. இந்த நிலைமையில் தொடர்ந்தும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டும் சில இடங்களில் தளர்த்தப்பட்டும் உள்ளன. இதில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை நீண்ட நாள் ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டு இருக்கின்றது.
இவ்வாறான நிலைமையில் கொரோனோ அபாயவலயமான கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லொறிகளில் பலரும் திருட்டுத்தனமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றனர். அவ்வாறு வந்தவர்களில் 7 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு எவரும் வரலாம் போகலாம். ஆனால் அதற்கான நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவேண்டியது என்பது மிக மிக அவசியமானது. அதிலும் சுகாதாரப் பிரிவினதும் பாதுகாப்புத் துறையினதும் அறிவுறுத்தல்கள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆயினும் அதனை எல்லாம் விடுத்து திருட்டுத்தனமான செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி யாரும் யாழ்ப்பாணத்துக்கு வருவது ஏற்றுக் கொள்ளத்தக்கல்ல. இவ்வாறான வருகைகள் என்பது இங்குள்ள மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைகின்றன.
ஆகவே கொரோனோ அபாய வலயங்களிலிருந்தோ அல்லது வேறு மாவட்டங்களிலிருந்தோ யாழ்ப்பாணத்துக்குத் திருட்டுத்தனமாக எவரேனும் வந்திருந்தால் அவர்கள் உடனடியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார்.
Source:Thinakkural.Lk
No comments:
Post a Comment