தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை
ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மருந்து கடைகள் காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், அங்குள்ள காமராஜர் சிலை அருகில் செல்போன் விற்பனைக்கடை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடைகள் திறக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 19 தேதி, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும்,கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்சுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தந்தை மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இதில் இருவருக்குமே நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
"அப்பாவ கண்ணு முன்னாடி அடிச்சா, எந்த மகன் தான் பொறுத்துகுவான். அதை தட்டிக் கேட்டதுக்கு என் தம்பிய அடிச்சே போலிஸ் கொன்னுடாங்க," என்று கேட்கிறார் உயிரிழந்த இளைஞரின் சகோதரி.
தந்தை மகன் மரணத்தில் மர்மம்
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி கடந்த 2 தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் தந்தை ஜெபராஜூம் மரணமடைந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகன் மரணத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
வழக்குப்பதிவு செய்யுங்க
இந்த நிலையில் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற செய்தியை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் இது போன்ற அநீதி வரும்காலத்திலும், எக்காலத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.
News Source: ThatsTamil
No comments:
Post a Comment