யாழ்ப்பாணம் இருக்க… இன்னமும் ஜப்னா தேவையா? தமிழை மீட்டெடுங்கள்!!

யாழ்ப்பாணம் இருக்க… இன்னமும் ஜப்னா தேவையா? தமிழை மீட்டெடுங்கள்!!

6 10 99
யாழ்ப்பாணம் இருக்க… இன்னமும் ஜப்னா தேவையா? தமிழை மீட்டெடுங்கள்!! 10 6 99
வெள்ளைக்காரனுக்கு உச்சரிக்க கடினமாக இருந்தது என்று யாழ்ப்பாணத்தை ‘Jaffna’ ஆக்கினான். உச்சரிப்பு பிரச்சனை அவனுக்கே தவிர நமக்கில்லையே. பின்னர் எதற்காக இன்றுவரை ‘ஜவ்னா’ என்கிறோம்? அவன் நாட்டைவிட்டுப் போய் 75 வருடங்கள் ஆகிவிட்டதே. இன்னமும் ‘ஜப்னா’ தேவையா?
யாழ்ப்பாண மக்கள் எல்லோரும் சேர்ந்து, “இனிமேல் நாம் ‘ஜப்னா’ எனும் பெயரை பாவிக்க மாட்டோம். ‘யாழ்ப்பாணம்’ என்றே அனைவரும் கூறுவோம். ஆங்கிலத்தில் ‘Yazhppanam’ என்றே எழுதுவோம்” என்று தீர்மானம் எடுத்தால்..?
அதையே ஒரு கோரிக்கையாக எழுதி, ஐந்து இலட்சம் மக்களும் கையெழுத்துப் போட்டு அரசிடம் விண்ணப்பம் வைத்தால்….?
பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் ‘யாழ்ப்பாணம்’ எனும் சொல்லை ‘ஹஸ்டக்’ மூலம் பிரபலப்படுத்தி, Trend ஆக்கினால்…??
எப்படி இருக்கும்?
யாழ்ப்பாணம் என்ற சொல் பிரபலமாகும். எல்லோரும் அதையே உச்சரிப்பார்கள். இனிமேல் யாராவது வெள்ளைக்காரன் ‘உன் சொந்த இடம் எது?’ என்று கேட்டால் ‘யாழ்ப்பாணம்’ என்று சொல்லுங்கள்.
அவனுக்கு விளங்காது, உச்சரிக்கக் கஷ்டப்படுவான் என்றெல்லாம் பாவ புண்ணியம் பார்க்காதீர்கள். வெள்ளைக்காரனுக்கு இரக்கம் காட்டுவதில் எங்களை மிஞ்ச ஆள் இல்லைத்தான். இருந்தாலும் இந்த விடயத்தில் வேண்டாமே!
பூமியில் இருந்து செவ்வாய்க்கிரகத்துக்குப் போகத்தெரிஞ்ச வெள்ளைக்காரனுக்கு, கடலுக்கு அடியில் குகைதோண்டி அதற்குள் ரெயில் விட்ட வெள்ளைக்காரனுக்கு ‘யாழ்ப்பாணம்’ எனும் பெயரை உச்சரிப்பதா கஷ்டம்?
எனவே வெள்ளைக்காரனுக்கு ஆலாத்தி எடுக்கிறத விட்டுட்டு, நாம் ‘யாழ்ப்பாணம்’ என்று சத்தமாகச் சொல்லுவோம். My name is Rajeevan. I’m from Yazhppanam என்று சொன்னால், ‘ஓ யால்ப்பாணம்? வெரி நைஸ்’ என்று பாராட்டுவிட்டு ‘உன்னுடைய ஊரின் அர்த்தம் என்ன?’ என்று கேட்பான்.
இதுதான் சாட்டு என்று ‘யாழ்’ என்பது ஒரு அருமையான இசைக்கருவி… என்று ஆரம்பித்து நல்ல விளக்கம் கொடுக்கலாம். மாறாக நீங்கள் ‘I’m from Jaffna’ என்று சீன் போட்டீர்கள் என்றால் அவன் அர்த்தமும் கேட்கமாட்டான். ஒன்றும் கேட்கமாட்டான்.
மற்றது ‘யாழ்ப்பாணம்’ என்பதை பிரபலப்படுத்தினால் வெள்ளைக்காரனும் சரி மற்றைய இனத்தவர்களும் சரி ‘யால்ப்பானம்’ என்றல்லவா கொச்சையாக உச்சரிக்கப்போகிறார்கள் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். இங்கே அநேகமான தமிழ் வானொலி அறிவிப்பாளர்கள் ஏற்கனவே அப்படித்தான் உச்சரிக்கிறார்கள்.
எனவே ‘ஜப்னா’ என்பதை ‘பூபல் அடிச்சிட்டு’ ( குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு ) இனிமேல் ‘யாழ்ப்பாணம்’ என்றே எழுதுவோம் / சொல்லுவோம்.
ஊரில் இருப்பவர்கள் முதலில் யாழ் அரச அதிபரிடம் கோரிக்கை வைக்கலாம். எல்லோரும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு கோரிக்கை அனுப்பலாம். வர்த்தமானி அறிவித்தல் மூலம் ‘ஜவ்னா’ வை நீக்கிவிட்டு ‘யாழ்ப்பாணத்தைக்’ கொண்டுவரலாம்.
இப்படியே Trincomale, Batticalo போன்றவற்றை ஓரம்கட்டிவிட்டு, அழகிய ‘திருகோணமலை’ ‘மட்டக்களப்பு’ போன்ற சொற்களை நாம் மீட்டெடுக்கலாம். இது வேடிக்கை அல்ல. முயன்று பார்க்கலாம்

                                                                                                                               NewJaffna.com

0 Comments:

Post a Comment

TTN


Latest NewsLightBlog

TB

 
New Tamil News © 2011 | Distributed By My Blogger Themes | Design By Duy Templates
Top