சிறீலங்கா தலைமை அமைச்சர் ரணிலின் மடிச்சூட்டின் கதகதப்பில் சொக்கிக்கிடந்து காசு கறக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்வதாகவும், தேர்தல்களின் போது வடக்கு கிழக்கு இணைப்புக்கு தமிழ் மக்களிடம் ஆணை பெற்றுவிட்டு இப்போது வடக்கு கிழக்கு பிரிப்பை ஏற்றுக்கொண்டு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து தமிழர்களின் பூர்வீக நிலத்தை சிங்கள மயமாக்குவதாகவும் தெரிவித்து, யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் 833 நாட்களாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினரால் 01.06.2019 சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட இப்போராட்டத்தில்...
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையை காணாமல் ஆக்க 'கம்பெரலிய' உமக்கு வழங்கப்பட்ட இலஞ்சமா?, சுதந்திர பசியோடு இருக்கும் மக்களை சோற்றுப்பசிக்கு மடை மாற்ற 'பனை நிதியம்' உங்களுக்கு மற்றுமொரு கையூட்டுத்தானே?,
தமிழ் அரசுக்கட்சியா? இல்லை 'ஏக்கிய ராஜ்ஜிய' கட்சியா?,
ரணிலின் திருட்டு அரசைக் காப்பாற்ற 'இரண்டு கோடி ரூபாய்' இலஞ்சப்பணம் வாங்கிய கூட்டுக்களவாணிகளே தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்யாதே!,
உங்கள் இருவருக்கும் இடையிலான 'கணக்கு வழக்குகளை – கொடுக்கல் வாங்கல்களை' ரணில் வேண்டுமானால் மறக்கட்டும். மன்னிக்கட்டும். ஆனால் உங்கள் தமிழினத் துரோகத்தை தமிழ் மக்கள் மறக்கார்! மன்னிக்கார்!,
தமிழ் அரசுக்கட்சியா? இல்லை கொழும்புக்கு ஒரு முகமும் வடக்கு கிழக்குக்கு மறுமுகமும் காட்டும் 'டபுள் அரசு' கட்சியா?,
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீங்கள் அடித்த மற்றுமொரு ஆப்புத்தானே அவசரகாலச் சட்டம்!, இன்னும் இன்னும் தமிழ் இளையோரை சிறை தள்ளவா அவசரகாலச் சட்டத்துக்கு கைகளைத் தூக்கினீர்?,
ஏன் போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து கால அவகாசம் கொடுத்தீர்கள்?, ஏன் சர்வதேச விசாரணையை உள்நாட்டு விசாரணையாக மாற்றினீர்கள்?,
ஏன் எஸ்.டி.எவ் பாதுகாப்போடு தமிழ் பிரதேசங்களுக்கு விசிட் அடிக்கிறீர்கள். நீங்கள் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட சிங்கள முகவர்களா?, உங்களால் இயலாது என்று காட்டி விட்டீர்கள். புதிய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குங்கள்.,
உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு தாயகத்தாய்மார் தமது பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். இப்போராட்டத்தின் போது மக்களை உள்நுழைய விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் தமிழரசுக்கட்சியின் அலுவலக முகப்பு வாயில் கதவை கட்சி உறுப்பினர்கள் இழுத்துப்பூட்ட முனைந்ததால் அங்கு முறுகல்நிலை ஏற்பட்டது. (குறித்த காணொளி இணைக்கப்பட்டுள்ளது.)
சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற இப்போராட்டத்தினையடுத்து மக்கள் கலைந்து செல்லும் தருணத்தில், இலங்கை தமிழரசு கட்சியினரால் யாழ்.நகர பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு 40க்கும் மேற்பட்ட பொலிஸார் பேரூந்தில் வரவழைக்கப்பட்ட போதிலும் அவ்விடத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்று தெரியவருகின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.