முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது?

Thursday, July 16, 2020

July 16, 2020
கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு கூர்மையான அவதானி என்னிடம் கேட்டார் ‘முன்பு புலிகளின் ஆட்சிக்காலத்தில் அந்த அமைப்புடன் சேர்ந்து செயற்பட்ட பலரும் இப்பொழுது ஒன்றில் கூட்டமைப்புடன் நிற்கிறார்கள் அல்லது சந்திரகுமாரோடு நிற்கிறார்கள். எப்படி அவர்களால் அப்படி நிற்க முடிகிறது?’ என்று.
நான் சொன்னேன், “அவர்களில் பலர் புலிகளின் காலத்தில் கொள்கை ரீதியாக புலிகளோடு இணைந்து நின்றார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அங்கேதான் பிழை விடுகிறீர்கள். அவர்கள் விடுதலை இலட்சியத்தோடு சேர்ந்து நிற்கவில்லை. மாறாக அதிகாரத்தோடு சேர்ந்து நின்றார்கள்.
அந்தக்காலம் புலிகள் இயக்கமே ஓர் அதிகார மையமாக காணப்பட்டது. எனவே அந்த அதிகார மையத்தை நோக்கி அவர்கள் சார்ந்து நின்றார்கள். இப்பொழுது கூட்டமைப்பு ஒரு அதிகார மையம், சந்திரகுமார் மற்றொரு அதிகார மையம். எனவே அதிகார மையங்களை நோக்கி அவர்கள் இப்போதும் சார்ந்து நிற்கிறார்கள்.
இது விடயத்தில் மக்களை போதிய அளவிற்கு அரசியல் மயப்படுத்தத் தவறிய எல்லா தரப்புகளும் தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் மயப்படுத்தப்படாத மக்கள் இப்படித்தான் அதிகாரத்தை நோக்கி எப்பொழுதும் சாய்வார்கள்.
தவிர இதில் மற்றொரு அம்சமும் உண்டு. முன்பு புலிகள் இயக்கத்தோடு நின்ற ஒரு பகுதியினர் இப்பொழுது தற்காப்பு உணர்வோடு சந்திரகுமாரோடு நிற்கிறார்கள். ஏனெனில் முன்னாள் இயக்கத்தவர்கள் இப்பொழுதும் இலங்கை தீவில் அதிகம் சந்தேகிக்கப்படும் ஒரு தரப்பாக காணப்படுகிறார்கள்.
அதனால் இலங்கை தீவில் அதிகம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஒரு தரப்பாக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களே காணப்படுகிறார்கள். எனவே அவர்கள் தற்காப்புக்காக வெவ்வேறு தரப்புக்களோடு இணைந்து நிற்கிகிறார்கள்.
இதில் அதிகம் விமர்சிக்கப்பட வேண்டியது ஒரு அதிகார மையம் என்பதற்காக ஒரு கட்சியை அல்லது ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை சார்ந்து நிற்பதுதான். எனவே இந்த விசயத்தில் இலட்சியத்தைப் போட்டுக் குழப்பத் தேவையில்லை” என்று அவரிடம் சொன்னேன்.
கடந்த 11 ஆண்டு கால அரசியல் எனப்படுவது பெருமளவுக்கு இலட்சிய வாதத்துக்கு எதிரானதாகவே திரும்பி விட்டது. தேர்தல் அரசியல் எனப்படுவது பெருமளவிற்கு இலட்சியவாத அரசியலுக்கு எதிரானதாகத்தான் காணப்படுகிறது.
2009இற்கு முன்புவரை தமிழ் அரசியலானது இலட்சியவாதத் தன்மை மிகுந்ததாக காணப்பட்டது. அப்பொழுது அரசியலுக்குள் இறங்குபவர்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் 2009இற்குப் பின்னர் அப்படியல்ல. தியாகம் செய்யத் தேவையில்லாத, ஆனால் தியாகம் செய்வது போல வேசம் காட்டிக் கொண்டு பிழைப்பதற்கான ஒரு துறையாக அரசியல் மாறிவிட்டது. இப்பொழுது அரசியல் எனப்படுவது பெருமளவிற்கு ஒரு பிழைப்பு, ஒரு நடிப்பு, ஒரு மிகப் பெரிய பொய்.
ஆனால், இப்படி பொய்கூறி மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களே ஒரு இனத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கப் போகிறார்கள் என்பதுதான் இங்குள்ள கொடுமையாகும். இந்த நிலைமையை எப்படி மாற்றுவது?
‘நீ முன்னுக்கு வரவில்லை என்று சொன்னால் உன்னைவிட தகுதி குறைந்தவர்களால் ஆளப்படுவதற்கு தயாராக இரு’ என்று அரிஸ்டோட்டிலின் கூற்று ஒன்று உண்டு.
தமிழ் சமூகத்தில் தேர்தல் அரசியலை விமர்சிக்கும் பலரும் அதில் ஈடுபடத் தயாரில்லை. குறிப்பாக புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும் இது விடயத்தில் களத்தில் இறங்கத் தயாரில்லை.
தேர்தல் அரசியல் எனப்படுவது சாக்கடை போன்றது என்றுதான் பலரும் கருதுகிறார்கள். அந்த சாக்கடைக்குள் இறங்கி சேற்றை பூசிக்கொள்ள நிதானமானவர்கள் நேர்மையானவர்கள் பின்னடிக்கிறார்கள். இதனால் நேர்மையற்றவர்களும் மோசடிக்காரர்களும் பிழைப்புவாதிகளும் இரட்டை நாக்கால் கதைப்பவர்களும் அரசியலை தங்களுக்கு உரிய சிறப்புத் துறையாகக் கருதி அதில் இறங்குகிறார்கள்.
இதுதான் பிரச்சினை. தமிழ் அரசியலில் நேர்மையானவர்களும் நிதானமானவர்களும் இலட்சியவாதிகளும் அதிகமதிகம் இறங்க வேண்டும். ஆயுத மோதலுக்குப் பின்னரான சமூகத்தில் இது விடயத்தில் வெற்றிடம் அதிகம் இருக்கும்தான்.
ஏனெனில், ஆயுத மோதலின்போது அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களும் அதை ஆதரிப்பவர்களும் அந்த ஆயுத மோதல் தோற்கடிக்கப்பட்ட பின்பு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் ஆயுத மோதல் காலகட்டத்தில் தியாக சிந்தையுடன் அர்ப்பணிப்பு உணர்வோடும் வீர உணர்வோடும் அரசியலில் இறங்கிய பலரும் அந்தப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதனால் பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்ற பலரும் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மாறுகிறார்கள். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் அரசியல் பரப்பில் முன்னணியில் நிற்கும் அநேகர் அவ்வாறு பாதுகாப்பான இறந்த காலத்தை பெற்றவர்கள்தான்.
அவர்களுக்கு எப்படி பாதுகாப்பான கடந்தகாலம் கிடைத்தது? எப்படியெனில் அவர் கடந்த காலத்தில் போராடவில்லை அல்லது போராட்டக் களத்தில் வசிக்கவில்லை, ரிஸ்க் எடுக்கவில்லை. அவ்வாறு ரிஸ்க் எடுக்காத பலர் இப்பொழுது அரங்கை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலைமையை மாற்ற வேண்டும். தமிழ் அரசியலை பிழைப்பு வாதத்தில் இருந்து இலட்சிய பாங்கானதாக மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? தேர்தலுக்கு இன்னமும் கிட்டத்தட்ட நான்கு கிழமைகளே உண்டு. இந்த நான்கு கிழமைகளுக்குள் மக்களை அவசரமாக அரசியல் மயப்படுத்த முடியாது. தேர்தல் அரசியலை திடீரென்று திருத்தி அமைக்கவும் முடியாது.
இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களில் ஒப்பீட்டளவில் நேர்மையானவர்களை, இலடச்சியவாதிகளை, கறைபடாத கரங்களைக் கொண்டவர்களை ஆதரிக்கலாம். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோசமாகத் தோற்பதிலிருந்து ஓரளவுக்குத் தப்பலாம். அதைத்தவிர இப்போதைக்கு வேறு எதையும் செய்ய முடியாது.
ஆனால், தமிழ் அரசியலை நீண்டகால நோக்கில் செயற்பாட்டு ஒழுக்கம் மிக்க இலட்சியவாதம் நிறைந்த நேர்மையான ஒரு வழியில் செலுத்துவதாக இருந்தால் அதற்கு முதலில் ஒரு தமிழ் தேசியப் பேரியக்கத்தைத் தொடங்க வேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே பேரியக்கமாக தொடங்கத் தேவையில்லை. ஒரு சிறிய இயக்கமாக தொடங்கலாம். ஒரு பண்பாட்டு இயக்கமாகத் தொடங்கலாம். குறைந்தது வாக்காளர்களுக்கு அறிவூட்டி அவர்களை விமர்சன பூர்வமாக சிந்திக்கும் வாக்காளர்களாக மாற்றுவதற்குரிய அறிவூட்டும் இயக்கமாக ஒன்றைத் தொடங்கலாம்.
ஏனெனில் தேர்தல் அரசியலில் இலட்சியவாதிகள் வெல்வதென்றால் அதற்கு வாக்காளர்களைத் தயார்படுத்த வேண்டும். வாக்காளர்களை எப்படி தயார்படுத்துவது?
முதலில் வாக்காளர்களை விமர்சனபூர்வமாகச் சிந்திக்கச் செய்ய வேண்டும். குருட்டு வாக்காளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கும்பலோடு கோவிந்தாவாக பழகிய கட்சிக்கு பழகிய சின்னத்துக்கு அல்லது பெரிய கட்சிக்கு வாக்குகளை வழங்கி விட்டுச் சென்றுவிடுவார்கள்.
வாக்களிக்க முன்பு யார் தங்களை ஆளப்போவது என்பதனை எந்த அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்று மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு விமர்சன பூர்வமாக மக்கள் சிந்திக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வாக்களிப்புக் கோலத்தை மாற்றலாம். தலைவர்களையும் மாற்றலாம். தமிழ் மக்களின் தலைவிதியையும் மாற்றலாம்.
எனவே, நேர்மையானவர்களையும் துணிந்தவர்களையும் தியாக சிந்தை கொண்டவர்களையும் மக்கள் பிரதிநிதிகளாக தெரிந்தெடுப்பதற்கு முதலில் மக்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும். கடந்த பதினோரு ஆண்டுகளாக தேசிய நீக்கம் செய்யப்பட்ட ஒரு வாக்கு வங்கி தமிழ் மக்கள் மத்தியில் பலம்பெற்று வருகிறது.
இதில் படித்தவர்கள் உண்டு. நடுத்தர வர்க்கத்தவர்கள் உண்டு. நலிவுற்ற சமூகப் பிரிவினரும் உண்டு. படித்தவர்களும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் தற்காப்பு உணர்வோடு சிந்திக்கிறார்கள். எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் தங்களுடைய நடுத்தர வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சிந்திக்கிறார்கள்.
எந்தக் கட்சி தமது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் என்று சிந்திக்கிறார்கள். எந்தக் கட்சி அரசியலில் தங்களை தியாகம் செய்யச் சொல்லி கேட்காது என்று பார்க்கிறார்கள். அந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்.
அதேசமயம், நலிவுற்ற சமூகப் பிரிவுகளை குறிவைத்து தென்னிலங்கை மையக் கட்சிகள் வேலை செய்கின்றன. தமிழ் தேசியக் கட்சிகளால் போதிய அளவுக்கு உள்ளீர்க்கப்படாத சமூகங்களை தென்னிலங்கை மையக் கட்சிகள் சலுகைகள் மூலம் கையாளப் பார்க்கின்றன. அல்லது சமூக முரண்பாடுகளை பெரிதாக்கி அவர்களை தேசியவாத வாக்கு வங்கியில் இருந்து பிரித்தெடுக்க முயற்சிக்கின்றன.
அந்த மக்களின் நலிவுற்ற சமூக நிலையை சமூக ஏற்றத் தாழ்வுகளை வெற்றிகரமாகக் கையாண்டு தமது வாக்கு வங்கியை பெரிதாக்க முயற்சிக்கின்றன. இவ்வாறாக தமிழ் பரப்பில் தேசிய நீக்கம் செய்யப்பட்ட ஒரு வாக்கு வங்கி பலமடைந்து வருகிறது. இந்த வாக்கு வங்கியை தென்னிலங்கை மையக் கட்சிகளும் தமிழ் தேசியத்துக்கு எதிரான கட்சிகளும் மட்டும்தான் கட்டி எழுப்புகின்றன என்பதல்ல.
சிவப்பு, மஞ்சள் கொடியின் கீழ் இணக்க அரசியலை முன்னெடுக்கும் தமிழ் தேசியக் கட்சிகளும் அதைச் செய்கின்றன. தமிழ் தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள் விட்ட வெற்றிடத்தில்தான் தென்னிலங்கை மையக் கட்சிகள் வேலை செய்கின்றன.
இவ்வாறு தேசிய நீக்கம் செய்யப்பட்ட வாக்கு வங்கி பெருத்துக்கொண்டே போனால் எதிர்காலத்தில் இலட்சியவாத அரசியலை முன்னெடுப்பது மேலும் கடினமாகும். நடுத்தர வர்க்கம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு சௌகரிய வலையத்துக்குள் தற்காப்பு நிலைக்குச் சென்றுவிடும்.
எனவே நேர்மையான இலட்சியப் பாங்கான அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புக்கள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு ஒரு தமிழ் தேசிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் போதாமையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஒரு தேசியப் பேரியக்கத்தைத் தொடங்க வேண்டும்.
அதில், புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும் உரிய இடத்தைக் கொடுத்து தேர்தல் அரசியலை வழிநடத்தும் அளவுக்கு அத்தேசிய இயக்கத்தை பலப்படுத்த வேண்டும். ஒரு பொதுத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட நான்கு கிழமைகளே இருக்கும் ஒரு காலச் சூழலுக்குள் ஒரு தமிழ் தேசிய இயக்கத்தை அவசரப்பட்டு தொடங்கத் தேவையில்லை.
ஆனால், பொதுத் தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழ் வாக்காளர்களை விமர்சன பூர்வமாக சிந்திக்க வைப்பதற்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு காத்திருக்கத் தேவையில்லை. அதை இப்பொழுதே தொடங்கலாம்.

0 Comments:

Post a Comment

BBC Tamil News World

Random Post?max-results=6">');
    ?max-results="+numposts4+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts5\"><\/script>");