பலாங்கொடை பகுதியில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைதானவர், மாணவியின் காதலன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று (9) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராவணாகந்த பகுதியை சேர்ந்த மாணவி கடந்த 5ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். பாடசாலை சீருடை வாங்கச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியேறியிருந்தார்.
எனினும், அவர் தனது காதலனுடன் செல்வதற்காக அவ்வாறு பொய் கூறிவிட்டு சென்றுள்ளார்.
கெய்வத்த பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனும், மாணவியும் கடந்த ஒன்றரை மாதங்களாக காதலித்து வந்தனர்.
ஆலயமொன்றிற்கு செல்லலாம் என மாணவியிடம் பொய் கூறியே காதலன் அழைத்துள்ளார்.
காதலனின் பொய்யான அழைப்பை நம்பிய மாணவி, தனது வீட்டில் பொய் கூறிவிட்டு வெளியேறினார்.
இருவரும் ஒன்றாக தங்கியிருந்தால், பெற்றோர் இந்த காதலை ஏற்பார்கள் என மாணவியை நம்ப வைத்து வீடொன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அன்று இரவு மது போதையில் மாணவியிடம் தொடர்ந்து தவறாக நடந்துள்ளார். இதனால் மாணவி மயக்கமடைந்துள்ளார்.
இந்நிலையில் மாணவி, வீடு திரும்பாதததையடுத்து, பெற்றோர் பின்னவல பொலிசாரிடம் முறையிட்டனர்.
மகளின் காதல் தொடர்பு பற்றி அறிந்திருந்த பெற்றோர், அதனை கண்டித்திருந்தனர். இந்த தகவலையும் பொலிசாரிடம் வழங்கினர்.
இதன்படி பலாங்கொடை பொலிசார், அந்த இளைஞனின் வீட்டில் மறுநாள் (6) சோதனையிட்ட போது, மாணவி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று (9) உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலதிக பரிசோதனைகளிற்காக அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட பலாங்கொட நீதிவான் ஜெயருவான் திசானநாயக்க, காதலனை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.